பைக்கைப் பொறுத்தவரை நம் இந்தியர்களின் முதல் முக்கியத்துவம் அதன் மைலேஜிற்குத்தான். அது டுகாட்டி டையாவெல்லாகவே இருந்தாலும் நம்மாட்களின் கண்கள் மைலேஜைத்தான் முதலில் குறிவைக்கும். அப்படி பெரும்பான்மை மத்தியத்தரவர்க்க இந்தியர்களின் ரத்தமும் சதையுமாக இருக்கும் மைலேஜை உயர்த்தும் சிறந்த பத்து வழிகளைப்பற்றி கீழே காணலாம்.
சீரான சர்வீஸ்
புது பைக் வாங்கிய நேரத்தில் இலவசமாகக் கொடுத்த முதல் ஐந்து சர்வீசோடு பலரும் சரியான இடைவெளியில் வாகனத்தை சர்வீசுக்கு கொடுப்பதில்லை. மனிதர்களின் ஆயுள் கூடக்கூட பாதுகாப்பு உணர்வும், சரியான மருத்துவ பரிசோதனைகளும் முக்கியம். அதேபோலத்தான் பைக்கும். எஞ்சினின் தேய்மானம் கணிசமான முறையில் மைலேஜிற்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே ஆயுதபூஜைக்கு வண்டிக்கு பூவும் பொட்டும் வைக்காமல் உங்களுடைய மெக்கானிக்கின் ஆலோசனைப்படி தகுந்த சீரான இடைவெளியில் வண்டியை சர்வீஸ் செய்யுங்கள்.
கார்பரேட்டரின் இயக்கம்
வண்டியை சரியாக சர்வீஸ் செய்தாலும் சில நேரங்களில் மைலேஜில் தொய்வு ஏற்படும். அப்படியென்றால் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது கார்பரேட்டரைத்தான். எஞ்சினுக்குள் நுழையும் பெட்ரோலின் அளவைத் தீர்மானிக்கும் இந்த கார்பரேட்டரின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை ஒவ்வொரு சர்வீசின் போதும் கவனிக்கத் தவறாதீர்கள். தேவையென்றால் (மேனுவல் அல்லது எலெக்ட்ரானிக் என எந்தவகையாக இருந்தாலும்) ரீ-டியூனிங் செய்துகொள்வது உசிதம்.

டயரின் காற்றழுத்தம்
இதெல்லாம் எப்படி மைலேஜைப் பாதிக்கும் என்கிறீர்களா? ஒவ்வொரு வண்டிக்கும் ஒவ்வொரு அளவிலான டயர் பிரெஷர் கொடுக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்டுள்ள அளவைத் தாண்டினாலும் குறைந்தாலும் தலைவலிதான். உதாரணமாக டயரில் காற்றழுத்தம் குறைகிறது என வைத்துக்கொள்வோம். வண்டியின் வேகம் மட்டுப்படுத்தப்படும். இதனால் சராசரி வேகத்தை அடையவே எஞ்சினுக்கு அதிக பெட்ரோல் தேவைப்படும். மேலும் காற்றழுத்தம் குறைவாக இருக்கும்போது வண்டியின் இயக்கநிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் கடினம். எனவே ஒவ்வொரு முறை பெட்ரோல் நிரப்பும்போதும் அருகிலிருக்கும் காற்றழுத்த பரிசோதிப்பானை பயன்படுத்தவும்.
தரமான எரிபொருள்
இது மிகவும் கவனிக்க வேண்டியது. நீங்கள் நாள்தோறும் பெட்ரோல் போடும் பங்கில் தரமான எரிபொருளைத்தான் உங்களுக்கு அளிக்கிறார்களா? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். சில ஆசாமிகள் மண்ணெண்ணையை கலந்துவிடுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். மண்ணெண்ணெய் கலந்த பெட்ரோல் எஞ்சினின் ஆயுளைக் குறைக்கும். அதற்குக்காரணம் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெயின் வேறுபட்ட கலோரிஃபிக் வேல்யூ (எரிபொருள் எரியும் தன்மையை சொல்லும் அளவு முறைதான் கலோரிஃபிக் வேல்யூ) பெட்ரோலுக்கு இந்த மதிப்பு மிக அதிகம். உடனே எரிந்து என்ஜினை இயக்கி எக்ஸாஸ்ட் வழியே வெளியேறிவிடும். ஆனால் மண்ணெண்ணெயை எரிக்கும் அளவிற்கு உள்ளே போதிய அழுத்தமும் வெப்பமும் கிடைக்காத பட்சத்தில் பாதி எரிந்த நிலையிலேயே எக்ஸாஸ்ட் வழியே வெளியேறும். இதுவே கருப்புப் புகையாக வெளிவருகிறது. மேலும் எஞ்சினின் உள்ளேயும் இவை படிந்து அதன் இயக்கத்தைக் குறைக்கும். ஆகையால் அடுத்தமுறை கவனமாக இருங்கள்.
சீரற்ற வாகன இயக்கம்
இதைப்பற்றி நம் அனைவருக்குமே நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் ஆக்சிலேட்டரின் கழுத்தை முறுக்குவதில் நம்மில் பலருக்கும் அப்படி ஒரு ஆனந்தம். அது மைலேஜை பாதிப்பதேல்லாம் அடுத்த விஷயம். அது உங்களுடைய மைலேஜிற்கே பங்கம் விளைவிக்கும் பயங்கரம் என்பதைப் புரிந்துகொள்வோம்.

எக்கானமிக் டிரைவிங்
வாகனத்தின் வேகக்கட்டுப்பாடு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது இடத்திற்குத் தகுந்தபடியான வேகத்தில் பயணிப்பது. உதாரணத்திற்கு குறைந்தபட்ச வேக அளவான 40 கிலோமீட்டர்/மணியில் பயணிப்பது எஞ்சினின் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்தும்.
கில் ஸ்விட்ச்
நீங்கள் மாநகரங்களில் வசிப்பவர் என்றால் ட்ராபிக் சிக்னலின் அருமை தெரிந்திருக்கும். சராசரியாக ஒவ்வொரு சிக்னலும் ஒரு நிமிட அவஸ்தையை உங்களுக்குத் தராமல் இருப்பதில்லை. அப்படியான நேரங்களில் கில் ஸ்விட்ச்சைப் பயன்படுத்துங்கள். இது எஞ்சினைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும். நமக்குத் தான் கஷ்டம் என்றால் பாவம் ஏன் வண்டியும் அவதிப்படவேண்டும்?
சூரிய ஒளி
மனிதர்களைப்போலவே வாகனங்களுக்கும் வெயில் என்றால் அலர்ஜி. சூரிய பகவான் உக்கிரமாக உற்றுப்பார்க்கும் இடத்தில் வாகனங்களை நிறுத்தினால் டேங்கில் இருக்கும் பெட்ரோல் வாயுபகவான் உருவமெடுக்கும். பெட்ரோல் செல்லும் டியூப்களில் இவை ஆவியாகி அடைத்துக்கொள்ளும். பாதி நுண்ணிய துளை வழியே வெளியேறும். ஆகவே, ஆமாம் அதுவேதான்.
உராய்வு
சர்வீஸ்களுக்கு இடைப்பட்ட நேரங்களில் வீட்டில் வாகனத்தை கழுவும்போது செயினில் ஆயில் அல்லது கிரீசைத் தடவுங்கள். ஏனெனில் என்ஜினில் உற்பத்தியாகும் வெப்ப ஆற்றலில் வெறும் 30 – 40 சதவிகிதம் தான் வண்டியின் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் உராய்வு. இதனைத் தடுப்பதன் மூலம் மைலேஜை உயர்த்தலாம்.
பாகங்களை மாற்றுதல்
வண்டியை ஆல்டர் செய்யும் ஆசை இருப்பவர்கள் மைலேஜை மதிக்காமல் இருப்பது நலம். ஏனென்றால் வண்டியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு பாகமும் அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஸ்டைல்காக இவற்றை மாற்றும்போது எஞ்சினின் திறனும் குறைய வாய்ப்பிருக்கிறது. முடிந்தவரை எந்த வண்டியை வாங்குகிறீர்களோ “அதே வண்டியாக” வைத்திருப்பது உசிதம்.
நம்மால் சவூதி – ஏமன் பிரச்சினையைத் தீர்க்க இயலாது. ஈரானில் இன்னும் எடுக்கப்படாமல் இருக்கும் கச்சா எண்ணெயை எடுக்கவும் வாய்ப்பில்லை. சரி மாற்று யோசனையான நேச்சுரல் கேஸ் போல ஏதாவது முயற்சிக்கலாம் என்றால் அதிலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வண்டியே வேண்டாம் என முடிவெடுக்கும் அளவிற்கு நமக்குத் தைரியம் கைகூடவில்லை. எனவே மேலே குறிப்பிட்ட வழிகளைப் பயன்படுத்தி முடிந்தவரை பெட்ரோலை சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நம்மிடம் இருக்கும் ஒரே வழியும் அது மட்டும்தான்.