இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலை படைப்பிற்கான சாகித்திய அகடாமி விருது வழங்கப்படுகிறது. மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த விருதானது அளிக்கப்படுகிறது. சென்ற வருடம் கவிஞர் இன்குலாப் அவர்களின் காந்தள் நாட்கள் சாகித்திய அகடாமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சஞ்சாரம் நாவலுக்காக இந்த ஆண்டிற்கான சாகித்திய அகடாமி விருது பெற்றிருக்கும் எஸ்.ரா என்னும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறந்த பத்து புத்தகங்கள் குறித்து கீழே காணலாம். வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப புத்தகத்தை வாங்கும் இணைய இணைப்பும் தரப்பட்டுள்ளது.

1. தேசாந்திரி
ஆதிமனிதனின் திசைகளைத் திறந்துவிட்டது பயணங்கள் தான். இயற்கையின் வேர்களை நாடிச் செல்லும் பயணங்களைப் பற்றியும், தாம் கண்ட இடங்களின் வரலாற்றுச் சிறப்புகள் மற்றும் தான் அடைந்த மனக் கிளர்ச்சிகளை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். ஆனந்தவிகடன் பதிப்பகத்தின் மூலம் இப்புத்தகம் விற்பனைக்கு வந்தது. கீழே உள்ள படத்தை கிளிக் செய்து புத்தகத்தை அமேசான் தளத்தில் வாங்கலாம். புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்.
2. எனது இந்தியா
இந்தியாவின் வரலாற்றைப் பதிவு செய்வதில் பல சார்பு சிக்கல்கள் இருந்திருக்கின்றன. ஆனால் ஓர் நாடோடி மனிதனுக்கு இந்தியா குறித்த புரிதல்கள், மேலும் தீவிர வாசிப்பிற்குப் பிறகு இந்தியாவின் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை சுவராஸ்யமோடு விவரிக்கிறது இந்நூல். வாஸ்கோடகாமாவின் வருகை அதன் பின்னர் ஏற்பட வணிகமுறை மாற்றங்கள் துவங்கி மகாத்மா காந்தியின் கொலை வழக்கு முதலிய பல சரித்திர நிகழ்வுகளை இந்நூலில் ஆதாரப்பூர்வமாக விளக்குகிறார் எஸ்.ரா. விகடன் பிரசுரம் மூலம் அச்சுக்கு வந்தது. புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்.
3. அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது
உயிர்மெய் பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்த இந்தப் புத்தகம் கடலை வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்களைப் பற்றிய கதையிலிருந்து ஆரம்பிக்கிறது. பின்னர் நகர வாழ்க்கையின் அவலங்களை, மனித பந்தங்களுக்கு இடையே, காலம் விதித்த விரிசல்களைப் பற்றிப் பேசுகிறது. ஆதிமனிதனிடத்தில் இருந்த அன்பு நோய்வுற்று நுகர்வுக் கலாச்சாரத்தின் நுகத்தடியில் பூட்டப்பட்டுக் கிடக்கும் இன்றைய தலைமுறையை, அவற்றின் தவறுகளை தன் பேனாவினால் இப்புத்தகத்தில் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். இப்புத்தகம் அமேசான் தளத்தில் காணப்படவில்லை. புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்.
4. செகாவின் மீது பனி பெய்கிறது
நவீன இலக்கியத்தை உலகத்திற்கு அளித்ததில் ரஷிய எழுத்தாளர்களின் பங்கு மிக முக்கியமானது. லியோ டால்ஸ்டாய், மக்சிம் கார்க்கி, பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி போன்றோரின் உலகப் படைப்புகளைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. மேலும் அவை தமிழ் இலக்கியத்தில் செலுத்திய ஆதிக்கம் குறித்தும் இப்புத்தகம் பேசுகிறது. தேசாந்திரி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்.
5. பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை
நூற்றாண்டுகளாக ஏதோ ஒரு வகையில் மனிதர்கள் ஓரிடத்தை விட்டு மற்றொரு இடத்தை நோக்கி நகர்கின்றனர். சமூக, பொருளாதார காரணங்களினால் இருப்பதற்கு இடமில்லாமல் அலைந்து திரியும் மனிதர்களைப் பற்றிய சித்திரத்தை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. நவீன காலத்திலும் நாடோடியாக இருக்கும் மக்களைப் பற்றிய இலக்கியப் பதிவான இந்த நூல் உயிர்மெய் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. இணைய இணைப்பு இல்லை.
6.கோடுகள் இல்லாத வரைபடம்
ஆதியில், திசைகளுக்குப் பெயர் வைக்கப்படாத காலத்தில் கடலோடிகள் வாழ்ந்த வாழ்க்கையை பேசுகிறது எஸ்.ராவின் கோடுகள் இல்லாத வரைபடம். உலகை அறியும் ஆவலில் கடலைத் தாண்டிய வரலாற்று அறிஞர்களான யுவான்சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்கோ போலோ உட்பட மொத்தம் 13 யாத்ரீகர்களின் வரலாற்றை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இணைய இணைப்பு இல்லை. இந்த புத்தகத்திற்கான இணைப்பு கிடைக்கவில்லை.
7. உப பாண்டவம்
இந்திய மரபு என்பது கதைகளின் வழியேதான் இன்னும் செழித்திருக்கிறது. அப்படி பல்வேறு இன அடையாளமாக, அவர்களது வாழ்க்கை முறையை பதிவு செய்திருக்கும் மகாபாரதத்தின் கிளைக் கதைகள் வழியே புதிய அர்த்தங்களைக் கையாள்கிறார் எஸ்.ரா. இதயத்தின் அடியே படிந்துபோன உணர்சிகளை இந்நூல் வெளிக்கொண்டு வருகிறது. விஜயா பதிப்பகத்தின் மூலம் விற்பனைக்கு வந்தது. புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்.
8. கடவுளின் நாக்கு
தி இந்து நாளேட்டில் வெளிவந்த கட்டுரைத் தொகுதியான இப்புத்தகம் உலக வட்டாரச் சிறுகதைகளை அவற்றின் தொன்மங்களை, தேவைகளை விவரிக்கிறது. சூழியல் சார்ந்த இலக்கியம் மேலும் பண்பாட்டு கருவூலங்கள் ஆகியவற்றையும் சித்திரம் போல் நம் முன்னே கொண்டுவருகின்றது இந்த நூல். தேசாந்திரி பதிப்பகம். புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்.
9. காட்சிகளுக்கு அப்பால்
தேசாந்திரிப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த இந்த நூல் உலக சினிமா குறித்தும் காட்சி அமைப்புகள் குறித்தும் துல்லியமாகப் பேசுகிறது. கதை ஆசிரியருக்கான பணி என்ன? என்பதில் ஆரம்பித்து உலகப் புகழ் பெற்ற சிறந்த திரைப்படங்கள் அவர் உருவான விதம் பற்றிய சுவாரஸ்ய செய்திகளை இடையிடையே விவரிக்கிறார் எஸ்.ரா. உலக சினிமா எந்த இடத்தை நோக்கி நகர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும். இந்த புத்தகத்திற்கான இணைப்பு கிடைக்கவில்லை.
10. சஞ்சாரம்
தமிழகத்தின் தெற்கத்திய ஊர்களில் நாதஸ்வரக் கலைஞர்கள் சந்திக்கும் சிக்கல்களை, அவர்களின் வாழ்க்கை முறையை, சமூகத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பை நன்றுணர்ந்து அதை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா. தன் மண்ணில் தான் சந்தித்த மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் இலக்கிய வட்டத்திற்குள் கொண்டுவந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தேசாந்திரிப் பதிப்பகம். புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்.