உலகக் கார் சந்தையின் முடிசூடா மன்னன் இந்த BMW கார் நிறுவனம். எதனோடும் போட்டிபோடும் திறன், அட்டகாசமான வடிவமைப்பு, நூற்றாண்டுகால வரலாறு, இன்றும் கோடிகளில் விலையை நிர்ணயித்தாலும் முன்பதிவிற்குப் பல உலகப் பணக்காரர்களை காத்திருக்க வைக்கும் நுட்பம் இந்தக் கார்களுக்கு மட்டுமே வாய்த்தது. சொகுசுக் காராக இருந்தாலும் சரி, சாலையில் தீப்பிடிக்கப் பறக்கும் ரேஸ் காராக இருந்தாலும் சரி உலகின் எந்தப் பெரிய நிறுவனத்தினோடும் நெற்றிக்கு நேர் நின்று போட்டிபோடும் இந்த ராட்சசக் கார் ஜெர்மனியில் தான் முதலில் வடிவமைக்கப்பட்டது.

முதலாம் உலகப்போர் சமயத்தில், அதாவது 1916 – ஆம் ஆண்டு ஜெர்மெனியின் முனிச் நகரத்தில் இந்த நிறுவனமானது தொடங்கப்பட்டது. சரி, BMW காரைப் பற்றியும், அந்த நிறுவனம் பற்றியும் நீங்கள் அறிந்திராத 10 விஷயங்களைக் கீழே காணலாம்.
1.காரா? விமானமா?
முதலில் ஏன் இந்தக் காருக்கு இப்பெயர் வந்தது எனச் சொல்லி விடுகிறேன். BMW என்பதற்கு அர்த்தம் Bayerische Motoren Werke என்பதாகும். (ஆங்கிலத்தில் – Bavarian Motor Works) இதனைச் சுருக்கியே BMW என்று அழைக்கப்படுகிறது. முதலாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியின் விமானப்படையில் குறைவாக இருந்த போர் விமானங்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஆகியவற்றினால் தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலில் போர் விமானங்களின் என்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த இந்நிறுவனம் 1928 வாக்கில் வாகனத் தயாரிப்பில் இறங்கியது.
போர் விமானங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் தயாரிப்பது வெர்சயில்ஸ் உடன்படிக்கையின்படி ஜெர்மனியில் தடை செய்யப்படிருந்ததால் இந்நிறுவனம் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தது.
2. முதல் கார்
சுமார் 90 வருடங்களுக்கு முன்பாக (1928) இந்த நிறுவனம் தனது முதல் காரான டிக்சியை வெளியிட்டது. BMW Dixi என்று பெயரிடப்பட்ட இந்த மாடலானது அடுத்த வெர்ஷன் வந்ததும் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1929 ல் இந்தக் கார் DA-1 என்று அழைக்கப்பட்டது. அதன்பின்னர் அடுத்த வெர்ஷன். மறுபடி பெயர்மாற்றம்.
3. எஞ்சின் கட்டிடம்
முனிச் நகரத்தில் இருக்கும் BMW நிறுவனத்தின் தலைமைச்செயலகக் கட்டிடம் இந்நிறுவனத்தின் எஞ்சினைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வரலாற்றையே மாற்றியமைத்த 4 சிலிண்டர் எஞ்சின் போலவே இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. போர் உச்சத்தில் இருந்த காலத்தில் சீறிப்பறந்த ஜெர்மானிய விமானங்களில் பயன்படுத்தப்பட்டதும் இதே என்ஜின்தான். அதன்பின்னர் வெகுகாலம் கழித்து நடத்தப்பட்ட ஃபார்முலா 1 கார்பந்தயத்தில் வெற்றிக்கோப்பையை தட்டித் தூக்கியதும் சாக்ஷாத் இதே என்ஜின் தான்.

4. லோகோ
BMW வின் லோகோ வெகுகாலமாக சுழலும் புரொப்பெல்லரின் தோற்றமே என நம்பப்பட்டு வந்தது. உண்மையில் அது இந்நிறுவனம் அமைந்துள்ள பவேரியா மாகாணத்தின் கொடியாகும். இதில் நீலம் மற்றும் வெள்ளை நிறங்கள் இடம்பெற்றிருக்கும்.
5. கிட்னி கிரில்
நீங்கள் படித்தது உண்மைதான். BMW காரின் மிக முக்கிய ஈர்ப்பு அதன் முன்பக்க கிரில் ஆகும். இதனைத்தான் ஜெர்மானியர்கள் கிட்னி கிரில் என்று அழைக்கிறார்கள். முதன்முதலில் 1933 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட BMW 303 காரில் தான் “கிட்னிகள்” முதன் முதலில் பொருத்தப்பட்டன.

6. எலெக்ட்ரிக் கார்
எலெக்ட்ரிக் கார் என்றதும் ஏதோ நேற்று முளைத்த அதிநவீனத் தொழில்நுட்பம் என்று நீங்கள் நினைத்தால் அதை மாற்றிக்கொண்டுவிடுங்கள். ஏனெனில் 1972 ஆம் ஆண்டிலேயே BMW தங்களது முதல் எலெக்ட்ரிக் காரினைத் தயாரித்துவிட்டது. ஆனால் பொருளாதார ரீதியாக அந்தத் திட்டம் கைகொடுக்கவில்லை என்பதும் உண்மை.
7. புயல்
1937 ஆம் ஆண்டிலேயே மணிக்கு 278 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ரேஸ் பைக்கைத் தயாரித்தது BMW நிறுவனம். சூப்பர்சார்ஜ் பொருத்தப்பட்ட இந்த பைக்கோடு வினோத ஹெல்மெட் ஒன்றையும் நிறுவனம் வழங்கியது. உலகிலேயே டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனை பைக்குகளில் இதுவரை ஏற்காத ஒரே நிறுவனம் இதுதான்.
8. பெருமை
வாகன உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரை எந்த நிறுவனம் எந்தக்காரை தயாரிக்கிறது என்பதே பெரும்பாலானோருக்குத் தெரியாது. பிரிட்டனின் பெருமைக்குரிய கார்களாகப் பார்க்கப்படும் மினி கூப்பர் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ஆகிய கார்களை தயாரிப்பது BMW தான். உண்மைதான். நம்புங்கள்.

9. சாதனை
உலகம் முழுவதும் 106,000 பணியாளர்களை BMW நிறுவனம் கொண்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டும் இந்நிறுவனம் ஈட்டிய வருமானம் 30 ஆயிரம் கோடி!!. கலிபோர்னியாவில் உள்ள இந்நிறுவனத்தின் கிளைத் தொழிற்சாலையில் சராசரியாக ஒருநாளைக்கு 1000 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
10. லம்போகினி
1970 களில் BMW மற்றும் லம்போகினி சேர்ந்து ரேஸ் கார் ஒன்றைத் தயாரிக்க திட்டமிட்டன. எஞ்சின், சஸ்பென்ஷன் மற்றும் இதர சில பாகங்களையும் BMW வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. இத்தாலிய நிறுவனமான லம்போகினி கடைசி நேர நிதிப்பற்றாக்குறை காரணத்தால் இந்த ஒப்பந்தத்தை விட்டு விலகியது. கடைசியில் BMW தனியாக ரேஸ் காரினை உற்பத்தி செய்து பெருவேற்றியையும் பெற்றது.