இப்போதெல்லாம் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் செல்போனும் ஒன்று என்றாகிவிட்டது. நாளுக்கு நாள் புதுப்புது செல்போன் மாடல்கள் வெளிவருவதும் அவற்றை வாங்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. அதே சமயம் செல்போன் கதிர்வீச்சுகளால் மனிதனின் உடல் பாதிக்கப்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சரி! அதனால் செல்போன் இல்லாமல் இருக்கமுடியுமா? அரசே ஊக்குவிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனையைக் கூட ஆண்ட்ராய்டு செல்போன்கள் தான் எளிமையாக்குகின்றன.
சரி இதற்கு தீர்வுதான் என்ன? செல்போனால் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்புகளைக் குறைக்க இந்த 10 வழிகளைப் பின்பற்றலாம்.
- இலவச அழைப்புகள், டேட்டா (Data) என இப்போது அதிகம் கிடைப்பதால், நாம் அதிக நேரம் செல்போனும் கையுமாகவே இருக்கிறோம். முதலில் செல்போனை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- தேவைக்கு மட்டும் உபயோகிக்க வேண்டும். அவசியம் பேசியே ஆக வேண்டும் என்றும் நேரத்தில் சுருக்கமாக பேசலாம். நாம் பேசுவதை விட பிறர் பேசுவதை கேட்கும் போதும், அனுப்பும் போதும் ஏற்படும் கதிர்வீச்சு குறைவாகும்.
- முடிந்தவரை குறுந்தகவல் (SMS) அனுப்புங்கள். கடந்த 2017, டிசம்பர் மாதம் கலிஃபோர்னியா மாகாணம் தமது மக்களுக்கு பேசுவதை விட SMS செய்வதன் மூலம் கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- அதே போல் பேசுவதற்கு முன்பு ரிங் போகும் நேரத்தில் ஏற்படும் கதிர்வீச்சு சாதாரண நேரங்களை விட பதினான்கு மடங்கு அதிகம் என்கின்றன சில ஆய்வுகள். அதனால் ரிங் போகும் போதே காதில் வைக்காமல் அழைப்பை ஏற்றவுடன் காதில் வைத்து பேசலாம்.
- முடிந்தவரை ஸ்பீக்கர் ஆன் செய்து சற்று தொலைவில் வைத்து பேசவும். முடியாத பட்சத்தில் ஹெட்செட், புளுடூத் மூலமாக பேசவும். அவற்றையும் பேசும் போது மட்டுமே உபயோகிக்கவும் காதில் வைத்து பேசியே ஆக வேண்டும் எனும் சூழலில் இடது காதில் வைத்து பேசலாம். ஏனெனில் வலது பக்க மூளை தான் செல்போன் கதிர்வீச்சால் சீக்கிரமாக பாதிப்படையும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பேசும் போது முழு போனையும் மூடியபடி பிடிக்காமல் ஓரங்களில் மட்டும் பிடித்து பேச வேண்டும். அதே போல் சிக்னல் கிடைக்காத நேரங்களில் மீண்டும் மீண்டும் கால் செய்ய கூடாது. இதனால் செல்போனில் இருந்து அதிக கதிர்வீச்சு வெளியாகும். சுற்றிலும் மூடப்பட்ட இடங்கள், கார், பஸ், ரயில் நிலையம் எலிவேட்டர் , சுரங்கம் போன்ற இடங்களில் சிக்னல் சரியாக இருக்காது. அதனால் அங்கெல்லாம் பேசுவதைத் தவிர்க்கலாம். நம்மில் பலர் செய்யும் தவறு, செல்போனில் அலாரம் வைத்து படுக்கையிலேயே வைப்பது. அதுதான் அதிக மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் செல்போன்களை படுக்கும் அறையில் வைக்காதீர்கள். செல்போன் வாங்கும் போதே குறைந்த கதிர்வீச்சு வெளியிடும் போன்களை வாங்கலாம். மேலும் இப்போதெல்லாம் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க செல்போன் கவசங்கள் விற்கப்படுகின்றன. அவற்றைக் கூட உபயோகிக்கலாம்.
Bonus Tip: வீட்டில் இருக்கும் போது முடிந்தவரை லேண்ட்லைனில் பேசவும். ஆனால், லேண்ட்லைன் யாரிடம் இருக்கிறது? தேவையற்ற போது டேட்டாவை ஆப் செய்து வைக்கலாம். மேலும் ஏர்ப்ளேன் மோடில் போடலாம். வைப்ரேட் மோடில் போட வேண்டாம்.

இப்போதெல்லாம் குழந்தைகள் சாப்பிட வைக்க சிலர் செல்போன்களை விளையாடத் தருகிறார்கள். இதை முற்றிலும் தவிர்க்கவும். ஏனெனில் பெரியவர்களை விட குழந்தைகள் மீது பாதிப்பு மிக அதிகம்.
பொதுவாக எதையுமே அளவாக உபயோகிப்பதால் பிரச்சனை இல்லை. எனவே தேவைக்கு மட்டும் செல்போன்களைப் பயன்படுத்தி கதிர்வீச்சு ஆபத்தை தவிர்ப்போம்.