மழைக்காலம் என்றாலே வீட்டினுள் சேற்றுக் கால் தடங்கள் தடுக்கவே முடியாத பிரச்சனையாகும். மழைக்காலம், பல வகை தொற்றுக்கள் மற்றும் கொசுக்களைக் கூடவே கொண்டு வருகிறது. அதனால் தான் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம் என்பவற்றைப் பேணி காப்பது மிக அவசியமாகிறது.
ஒவ்வொரு வருடமும், பருவமழை தொடங்கும் முன் கொசுக்களையும் நோய்களையும் தடுக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில வீட்டுக் குறிப்புகள் இதோ.
1.இருண்ட இடங்களில் கவனம் தேவை
மழைக்காலம் வரும் முன் வீட்டிலுள்ள இருள் சூழ்ந்த இடங்களைக் கண்டறிந்து அவ்வப்போது சுத்தம் செய்வது மிக அவசியம். முக்கியமாக, ‘சிங்க்’ கின் அடியில், கீழே உள்ள பகுதிகள், இக்காலத்தில், கொசுக்கள் மற்றும் கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி விடும். ஒவ்வொரு இரவும், இந்த இடத்தை சுத்தம் செய்து, கொசு மருந்து மற்றும் கிருமிநாசினி தெளித்துப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
2.கழிவுநீர்க் குழாய்
கழிவுநீர்க் குழாய்களை அடைப்பு நீக்கி வைத்துக் கொள்வது இன்றியமையாத ஒன்று. அவற்றில் அடைப்பு இல்லாவிட்டாலும், மழைக்காலத்தில் அடைப்பு-நீக்கி அல்லது குழாய்-சுத்தகரிப்புத் தூளைப் பயன்படுத்தி தயார் செய்து கொள்ளுங்கள்.. இது குழாய் வழியே வீட்டினுள் கொசுக்கள் மற்றும் கரப்பான்கள் வராமல் தடுக்கிறது.

3.நெரிசல் நீக்குவது மிக அவசியம்
மழைக்காலத்திற்கு முன் வீட்டிலுள்ள, முக்கியமாக சமையலறையில் உள்ள, குப்பையைக் களைந்து, பொருட்களை சீராக ஒழுங்கு படுத்துவது மிக அவசியம். வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்கள், இடத்தை அடைத்துக் கொண்டு கொசுக்களின் சரணாலயமாக மாறி, தொற்றுக்களைப் பரப்புகிறது. மேலும், வீட்டையும் சமையலறையையும் சீர்படுத்தும் போது, பொருட்களை வீட்டில் அனைவரும் எளிதாகக் கையாளும் விதமாக வைக்க வேண்டும்.
4.அலமாரிகளின் பாதுகாப்பு
வீட்டிலுள்ள அலமாரிகளில் கொஞ்சம் வேப்பிலை மற்றும் கிராம்பு தூவி வைப்பது, துணிகளுக்கிடையே பூச்சிகள் வராமலும் அவற்றை நறுமணத்துடனும் பாதுகாக்க உதவும்.
5.தரை விரிப்புகளை மடித்து வையுங்கள்
உங்கள் வீட்டில் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தால், மழைக்காலத்தில் அவற்றைச் சுருட்டி எடுத்து வைப்பது நல்லது. இக்காலத்தில் ஈரமான கால்களும் காலணிகளும் சர்வ சாதாரணம். இதனால் தரைவிரிப்புகள் நனைந்து விடக்கூடும். உலர வைக்கவும் முடியாது. மழைக்காலத்தில் இவற்றைப் பாதுகாப்பது கடினம். மேலும் அவை, கிருமிகளின் உறைவிடமாகி விடக்கூடும்.
6.கிருமி நாசினித் திரவங்களை கையோடு வைத்திருங்கள்.
வீட்டில் அனைவரின் கைகளும் எட்டும் இடங்களில் ‘ஆன்டிசெப்டிக்’ மற்றும் கிருமிநாசினித் திரவங்கள் இருக்கட்டும். இது, வெளியே சென்று திரும்பும் அனைவரும் ஒரு முறையேனும் உபயோகிக்க உதவியாக இருக்கும். முக்கியமாக மழையில் நனைந்து விட்டு வருபவர்களுக்கு. சிறு சிராய்ப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படுவது இயல்பு. இதன் காரணமாக, இந்தப் பருவகாலத்தில் தொற்றுக்கள் வராமல் தடுக்க எப்போதும் ஒரு பாட்டில் ஆன்டிசெப்டிக் திரவத்தைத் தயாராக வைத்திருப்பது நன்மை பயக்கும்..
7.கதவு ஜன்னல்களை சரிபார்க்க வேண்டும்.
கதவு மற்றும் ஜன்னல்களை இறுக அடைத்து வைப்பது நல்லது. கதவுகளின் அடியிலுள்ள இடைவெளி வழியாக மழைநீர் வீட்டினுள் வரக்கூடும். இதைத் தடுக்க கதவுகளின் அடி பாகத்தில் ரப்பர் துண்டுகள் பொருத்தி வைக்கலாம்.

8.திரைச்சீலைகள் மற்றும் விரிப்புகளை மாற்றி சுத்தப் படுத்துதல்
மழைக்காலத்திற்கு முன்பே திரைச்சீலைகளைத் துவைத்து சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில், பருவகாலத்தில் இவை தூசு பட்டு மிகவும் அழுக்காகக் கூடும். அடிக்கடி துவைத்து உலர வைக்கவும் முடியாது. எனவே, மழைக்காலத்திற்கு முன்பே திரைச்சீலைகளை மாற்றி, சுத்தமான வெளிர் நிறத் திரைச்சீலைகளை மாட்டுவது நல்லது. இது கொசுக்கள் அவற்றில் தங்கியிருப்பதைத் தடுக்கிறது.
9.தேவையில்லாத காலணிகளை அப்புறப்படுத்துங்கள்
உபயோகமில்லாமல் கிடக்கும் காலணிகளில், ஈரப்பதம் காரணமாக பூஞ்சைக் காளான் வரக்கூடும். இவைகளை மழைக்கு முன்பே அப்புறப்படுத்துவது நல்லது. உபயோகத்திலிருக்கும் காலணிகளை நன்கு சுத்தம் செய்து வைப்பதும், முடியும் போதெல்லாம் வெயிலில் உலர வைத்து ஈரமில்லாமல் பாதுகாப்பதும் மிகச் சிறந்தது.
10.குப்பைத் தொட்டிகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது
அடிக்கடி குப்பைத் தொட்டிகளை மாற்றுவது மற்றும் அவற்றை சுத்தமாகவும் உலர்வாகவும் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாதது. மழைக்காலங்களில் சரியான முறையில் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
இது போன்ற மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வீட்டுக்குறிப்புகள் ஏதேனும் உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.