2018 ம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி என்ன நடந்தது என்று தெரியுமா? இந்த உலகில் மிச்சமிருந்த ஒரே ஒரு கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகமும் உயிரிழந்தது. இப்போது இந்த உலகில் வெள்ளை ஆண் காண்டாமிருகங்களே இல்லை. 45 வயதான அந்தக் காண்டாமிருகம் வயது மூப்பின் காரணமாக இறந்துபோனது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதற்கு ஒரு மகளும், ஒரு பேத்தியும் இருக்கின்றன. வளர்ந்திருக்கும் விஞ்ஞானத்தின் உதவியுடன் வெள்ளை ஆண் காண்டாமிருகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இது ஒரு எடுத்துக்காட்டுதான். இப்படி உலகம் முழுவதும் ஏராளமான விலங்கினங்கள், பறவைகள் அதன் இறைச்சிக்காகவும், வணிக நோக்கத்திற்காகவும், காலநிலை மாற்றத்தாலும் அழிந்துவருகின்றன. இதனால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. அப்படி உலக வனவிலங்குகள் பாதுகாப்பு நிதியம் அளித்த தரவுகளின் படி அழியும் நிலையில் உள்ள 10 உயிரினங்களைக் கீழே காணலாம்.
1அமுர் சிறுத்தை (Amur leopard)

ரஷியாவின் கிழக்குப்பகுதியில் ஓடும் நதியான அமுரின் படுகையில் அதிகமாகக் காணப்பட்ட இந்த சிறுத்தை இனமானது மணிக்கு 37 மைல் வேகத்தில் ஓடக்கூடியது. மேலும் இதனால் 17 அடி உயரம் வரை தாண்ட முடியும். கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி ஒட்டுமொத்த ரஷியாவில் இருக்கும் அமுர் சிறுத்தைகளின் எண்ணிக்கை வெறும் 60 தான் எனத் தெரியவந்துள்ளது. சிறுத்தை பாதுகாப்புப் பூங்கா ஒன்றில் இவை தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன.
2ஆப்பிரிக்க மலைக் கொரில்லா (Mountain Gorilla)

ஆப்பிரிக்காவில் மட்டுமே வசிக்கும் இந்த கொரில்லாக்கள் மலையில் வசிக்ககூடியவை. காங்கோ, உகண்டா போன்ற நாடுகளில் உள்ள தேசிய பூங்காக்களில் மட்டுமே இவை தற்போது உள்ளன. குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் ஸ்திரமில்லாத அரசுகளால் இந்த கொரில்லாக்களை காக்க முடியாமல் போகிறது. இன்றைய நிலையில் மிச்சமிருக்கும் இந்த அரியவகை கொரில்லாக்களின் எண்ணிக்கை 900 ஆகும்.
3கொம்புள்ள காட்டுமாடு (Asian unicorn)

மிக அறியவகை உயிரினமான இந்த காட்டு மாடுகளுக்கு கொம்புகள் உண்டு. வியட்நாம் மற்றும் லாவோஸ் நாடுகளில் உள்ள அடர் காடுகளில் இந்த மாடுகள் வாழ்கின்றன. உண்மையில் இதன் எண்ணிகையைப் பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. காட்டு மாடுகளைப்போல உருவமும் தலையில் கொம்புகளும் உள்ள இந்த உயிரினத்தினை இதுவரை நான்கு முறை மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.
4ஹாவ்க்ஸ்பில் கடல் ஆமைகள் (Hawksbill Turtles)

உலகின் பெரும்பான்மை வெப்பமண்டல கடற்பகுதியில் வாழும் இந்த ஆமைகள் அதன் வண்ணமயமான ஓடுகளுக்காக வேட்டையாடப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில் மட்டும் சுமார் 80% ஹாவ்க்ஸ்பில் ஆமைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அவற்றின் கறி மற்றும் முட்டைகளுக்காகவே மக்கள் இதனை நாடுகின்றனர். கடற்கரையின் ஓரப்பகுதிகளில் வீசும் வலைகளில் இவை எளிதில் கிடைத்துவிடும் என்பதால் இவற்றின் அழிப்பு விகிதம் கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
5தென்சீனப் புலி (South China Tiger)

1950 களில் சீனாவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 4000 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை அடுத்த ஐம்பது ஆண்டுகளில் 30 – 80 ஆக குறைந்துவிட்டது. தென்சீனாவில் உள்ள காடுகளில் மட்டுமே வசிக்கும் இந்த புலிகளைப் பாதுகாக்க 1979 – ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதனால் புலிகளை வேட்டையாடுவது குறைக்கப்பட்டதோடு அவற்றைப் பாதுகாக்க பல ஏற்பாடுகளையும் சீன அரசு செய்துவருகிறது. கடந்த 2016 – ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 100 ஐத் தொட்டுள்ளது.
6

டால்பின்கள் போன்றே அறிவுத்திறனும், உடலமைப்பும் கொண்ட இந்த உயிரினம் சீனாவின் நீளமான ஆறான யாங்க்ட்சே ஆற்றில் வசிக்கிறது. இதனை போர்போயிஸ் என்று அழைக்கிறார்கள். மொத்தமாக இந்த ஆற்றினில் இருக்கும் போர்போயிஸ்களின் எண்ணிக்கை 1000 – 1800 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
7சுமத்ரா உராங்குட்டான் (Sumatran Orangutans)

கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தவகை உராங்குட்டான் அழிப்பால் காடுகளின் சமநிலை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. ஏனெனில் இந்த குரங்குகள் பழங்களைத் தின்று விதைகளை காடு முழுவதும் பரப்புகின்றன. காடுகள் அழிப்பு மற்றும் காட்டுத்தீ போன்றவற்றால் இந்த இனம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போதிய நிலையில் மீதமிருக்கும் சுமத்ரா உராங்குட்டான்களின் எண்ணிக்கை 14,600 ஆகும்.
8கருப்பு காண்டாமிருகம் (Black Rhinos)

உலகின் மிகப்பழமையான பாலூட்டியான காண்டாமிருகம் ஒருகாலத்தில் ஆப்பிரிக்காவில் அதிகமாக வசித்திருக்கின்றன. 1960 க்குப் பின்னர் காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு உள்ள சந்தை மதிப்பை உணர்ந்த ஏராளமான மக்கள் அவற்றை வேட்டையாடத் துவங்கினார்கள். இதனால் 98% காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டிருக்கின்றன. இப்போது உலகம் முழுவதும் 5000 – 5400 கறுப்பு காண்டாமிருகங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
9வகுய்டா (vaquita)

டால்பின்கள் இனத்தினைச் சேர்ந்த வகுய்டா, கலிபோர்னியா வளைகுடாவில் அதிகம் இருந்த அரியவகை உயிரினமாகும். 1958 ல் தான் இப்படி ஒரு உயிரினம் இருப்பதே வெளியுலகத்திற்குத் தெரியவந்தது. வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் வகுய்டா இனமே அழிந்துவருவதாக உலக வனவிலங்குகள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த உயிரினத்தின் மொத்த எண்ணிக்கையில் 92% அழிந்துவிட்டதாக 1997 – ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
10பிலிப்பைன்ஸ் முதலை (Philippine crocodile)

பிலிப்பைன்ஸ் நாட்டின் சதுப்புப் பகுதிகளில் வாழும் இந்த முதலைகள் அதன் தோல்களுக்காக வேட்டைக்கு ஆளாகின்றன. ஐரோப்பிய சந்தைகளில் இவ்வகை முதலைகளின் தோல்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் இந்த அவல நிலைக்கு அந்த இனம் நகர்ந்திருக்கிறது. மொத்தமே 200 முதலைகள் தான் உயிருடன் உள்ளதாக 2018 ன் ஆண்டின் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.