மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது இந்த காலத்தில் தேவையான ஒன்று. அதிக கட்டணம் என்பதைத் தாண்டி, மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். நமது நாட்டைப் பொருத்தவரையில் மக்கள் தொகைக்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லை என்பது தான் உண்மை. கோடைகாலங்களில் மின் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி மின்தடை, குறைந்த மின்சாரம் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது.

மின்சாரத்தினால் விளையும் மாசுபாடு
மின் பயன்பாட்டை நம்மால் நிச்சயம் தவிர்க்க முடியாது என்ற நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முயற்சி செய்யலாம். இதன் மூலம் நாம் சேமிக்கும் மின்சாரம் வருங்கால சந்ததியினருக்கு பயன்படுவது மட்டுமில்லாது நமது மின் கட்டணத்தையும் குறைக்கும். மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைத்துச் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் ஒரு வீட்டின் மின்சாரப் பயன்பாட்டால் வெளியேறும் கார்பன்-டை-ஆக்ஸைடு இரண்டு சாதாரணமான கார்கள் வெளியேற்றுவதை விட அதிகமாம். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த, மின்கட்டணத்தைக் குறைக்க எளிமையான பத்து வழிகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
- வீடுகளில் எல்.ஈ.டி. பல்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள். ஏனெனில் 60 வாட் குண்டு பல்பு தரும் வெளிச்சத்தை 15 வாட் எல்.ஈ.டி பல்புகள் தருவதால் மின்செலவை வெகுவாக குறைக்க முடியும்.
- ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் சாதனங்களை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்யாமல் சுவிட்சையும் அணைக்க வேண்டும். ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்யும் போது மின்சக்தி மின்சாதனங்களுக்குள்ளாக பாய்ந்துகொண்டே தான் இருக்கும். மேலும் தேவையற்ற நேரத்தில் கணினி, லேப்டாப் போன்றவற்றை முழுவதுமாக ஆஃப் செய்யுங்கள். இல்லையெனில் நிச்சயம் மின்சக்தி வீணாகும். குறைந்தபட்சம் ஸ்லீப் மோடிலாவது (Sleep Mode) போடலாம்.
- சுவிட்ச் போர்டில் இருக்கும் நியூட்ரல் பிளக்குகளில் கூட மின்சாரம் அதிகமாக வீணாக்கப்படுகிறது. சில வீடுகளில் வயரிங் வேலைகளின் போது அதிலும் மின்சார இணைப்பை வழங்கிவிடுகின்றனர். இதனால் நமக்குத் தெரியாமலே மின்சாரம் வீணாகிறது. இதை கண்டறிந்து இணைப்பைத் துண்டிக்கலாம். கிரைண்டர், சீலிங் பேன், ஏ.சி. போன்றவற்றில் தூசு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தூசு படிந்திருந்தால் அவை இயங்க அதிக மின்சக்தியை எடுத்துக்கொள்ளும்.
- டியூப்லைட்களில் எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்துங்கள். இதனால் 20 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம்.அதோடு இதற்கு ஸ்டார்ட்டர் தேவையில்லை எனவே சுவிட்ச் போட்டதும் உடனே எரியும். அதே போல் மின்விசிறிகளுக்கு எலக்ட்ரானிக் ரெகுலேட்டர் பயன்படுத்தினால் 15 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம். குறைந்த எடையுடைய அதிக மின் திறன் கொண்ட மின்விசிறிகளை உபயோகிக்கவும்.
- ஏசி பொருத்தப்பட்டிருந்தால் அந்த அறையை நன்றாக மூடிவைக்க வேண்டும். கதவுகள், ஜன்னல்களில் இடைவெளி இருந்தால் வெளி வெப்பக்காற்று உள்ளே வந்து, ஏ.சி. கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும். எனவே மின்சக்தியும் கூடுதலாகச் செலவாகும். அதே போல் வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ அதாவது குளிர்சாதனப்பெட்டி போன்றவற்றை ஏசி இருக்கும் அறையில் வைக்கக் கூடாது. ஏசியின் அவுட்டோர் யூனிட்டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் மின் சக்தியை சேமிக்கலாம். ஏ.சி அறைகளின் சுவரில் வெப்பம் கடத்தா பெயின்ட் அடிப்பது, தரையில் தரைவிரிப்புகளை பயன்படுத்துவது போன்ற முயற்சிகள் மூலம் அதிக நேரம் குளிர்ச்சியைத் தக்கவைக்க முடியும்.அறை குளிர்ந்தவுடன் போதும் என்ற நிலையில் ஏசியை அணைத்து விடுங்கள்.
- வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை அதை எப்போதும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்குத் துணிகள் இடம்பெற வேண்டும். வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை தேவையானால் மட்டுமே உபயோகிக்கவும். ஏனெனில் உலர் கருவிகளை உபயோகிக்கும் போது அதிக அளவு மின்சாரம் செலவாகும்.
- கிரைண்டரையும் எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை கிரைண்டர் பெல்டை மாற்ற வேண்டும்.ஏனெனில் தளர்ந்து போன பெல்ட்டிலேயே கிரைண்டர் ஓடினால் அதிக மின்சாரம் செலவாகும்.
- அனைத்து சுவர்களுக்கும் அடர்த்தியற்ற வண்ண பெயிண்டுகளை பூசுங்கள். வெளிர்நிற வண்ணம் பூசி இருந்தால் அது வெளிச்சத்தை அதிகம் பிரதிபலிக்கும். எனவே, அந்த அறைக்கு, குறைவான மின்சக்தி கொண்ட பல்புகள் போதுமானது. அதே போல் விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.மேலும். துணிகளை தினமும் அயர்ன் செய்யாமல் மொத்தமாக அயர்ன் செய்ய வேண்டும்.இதனால் மின்சாரா செலவு கணிசமாகக் குறையும்.
- பழைய CRT (Cathode Ray Tube) டைப் டீவி, மானிட்டருக்கு பதிலாக LCD (Liquid Crystal Display) அல்லது LED (Light Emitting Diode) டைப் டிவி, மானிடருக்கு மாறுங்கள். இதனால் மின்சாரத்தை பெருமளவு சேமிக்கலாம். அதே போல் தொலைக்காட்சி பெட்டி வாங்கும் போது வீட்டிற்குத் தேவையான அளவுள்ள டிவியை மட்டுமே வாங்குங்கள். ஏனெனில் பெரிய அளவு டிவிக்கள் அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். முடிந்தவரை ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ள மின்சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள். 5 நட்சத்திரங்கள் பெற்றிருந்தால் குறைந்த அளவு மின்சக்தியை இழுக்கும் என்று அர்த்தம். இவை விலை அதிகம் என்றாலும், இவற்றை வாங்குவது தான் சிறந்தது.
- குளிர்பதனப் பெட்டியில் (Fridge) ஸ்டீல் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை குளிர்ச்சியாக்க அதிக நேரம் தேவைப்படும் என்பதால் டப்பர்வேர் போன்ற பாத்திரங்களை உபயோகப்படுத்துங்கள். அடிக்கடி குளிர்பதனப் பெட்டியின் பிரீசரை டிபிராஸ்ட்(Defrost) செய்யுங்கள். குளிர்பதனப் பெட்டியை சுவற்றுடன் ஒட்டி வைத்தால் அதன் செயல்பாடு குறையும். அதை ஈடுகட்ட இருமடங்கான மின்சக்தியை எடுத்துக்கொள்ளும். குளிர்பதனப் பெட்டியை சுற்றி காற்றோட்டமாக வைத்திருக்கவும். அடிக்கடி குளிர்பதனப் பெட்டியை மூடித் திறந்தால் உள்ளே இருக்கும் குளிர் வெளியேறுவதால் அதை சரி செய்ய குளிர்பதனப் பெட்டி அதிக நேரம் இயங்கும். எனவே மின் ஆற்றல் அதிகமாகும். அதனால் அடிக்கடி திறப்பதை தவிர்க்கவும். குளிர்பதனப் பெட்டியின் கதவு நன்கு மூடி இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம். குளிர்பதனப் பெட்டி மீது நேரடியாக சூரியஒளி படாமல் வைப்பதும் முக்கியம். மின்சாரத்தை குறைக்கலாம் என்று எண்ணி குளிர்பதனப் பெட்டியை அடிக்கடி அணைத்து விடாதீர்கள். தேவையான அளவு குளிர்ந்ததும் அது தானாகவே ஆஃப் ஆகிவிடும். அதேபோல் சூடான பொருட்களை சற்று ஆறிய பிறகே குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
- இப்போது நடுத்தர குடும்பங்கள் கூட சோலார் பேனல்களை பயன்படுத்த முடியும். இதற்கான செலவு 10 ஆயிரத்திற்கும் குறைவாக தான் வரும் என்கின்றனர். ஒருமுறை நிறுவி விட்டால் நிச்சயம் பல ஆண்டுகளுக்கு உங்களுக்குப் பலனளிக்கும். சோலார் பேனல்களை பயன்படுத்தி மின்சாரம் சேமிக்க தமிழக அரசு மானியமும் வழங்குகிறது. அதே போல் மின்சேமிப்பு குறித்த ஆலோசனைகளைப் பெற பல செயலிகளும் (Apps) உள்ளன. அவற்றைக் கூட உபயோகிக்கலாம்.

எல்லாப் பொருட்களிலும் அதன் மின் செலவை Watts அளவில் குறிப்பிட்டிருப்பர்கள். ஒரு Watts என்பது ஒரு மணி நேரம் அது செலவளிக்கும் மின்சக்தியின் அளவு. இதன் மூலம் அந்த பொருளின் மின் பயன்பாட்டை எளிதாக அறிந்து கொள்ளலாம். அதோடு வீடு கட்டும் போதே சரியான இடங்களில் பெரிய ஜன்னல்களை வைத்து கட்டினால் காற்றும், வெளிச்சமும் கிடைக்கும். அதனால், மின்சார பல்பு, மின்விசிறி பயன்பாடு குறையும். முக்கியமாக மின் விசிறி, விளக்குகளை தேவையான போது மட்டுமே பயன்படுத்தும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் பழக்க வேண்டும்.