அச்சுறுத்தும் ‘கஜா’ புயல் – பொது மக்களுக்கு 10 டிப்ஸ்

0
154

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 700 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இன்று இரவு முதல் புயல் கரையைக் கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், பொதுமக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்த 10 முக்கியத் தகவல்கள்.

1. முடிந்த வரை வெளியே செல்ல வேண்டாம்

கடலூரில் பலத்த காற்றோடு கனத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், அப்பகுதி மக்கள் புயல் கரையைக் கடக்கும் சமயங்களில் வெளியே செல்லாமல் இருக்க முயலுங்கள். வீட்டுக்குள்ளேயும் கவனமாக இருக்கவும். கதவு, ஜன்னல்களை இறுக்கமாக மூடி வைத்திருக்கவும்.

2. குழந்தைகள் கவனம்

குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுப்பாதீர்கள். தேங்கி நிற்கும் தண்ணீர் அருகிலோ, நீர்நிலைப் பகுதிகளுக்கோ அவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். பொதுவாகவே மழையையும் நீரையும் பார்த்து விட்டால் குழந்தைகள் குஷியாகி விடுவார்கள். எனவே, எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும்.

3. உணவுப் பொருட்கள்

போதுமான அளவு உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை முன்னதாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுங்கள். மழை நேரங்களில் கடைகளுக்குச் செல்வதில் அல்லது பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். எனவே, வரும் முன் காத்தல் நலம்.

4. நீர் சேமிப்பு

மேல்நிலைத் தொட்டிகளில் நீரை நிரப்பி வையுங்கள். இதனால் மழையின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டால், தண்ணீருக்காக சிரமப்படத் தேவையிருக்காது.

5. மின்சாரத் தடை

எமர்ஜென்ஸி விளக்குகள் கைக்கெட்டும் தொலைவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருங்கள். போதுமான அளவு மெழுகுவர்த்திகளும், தீப்பெட்டிகளும் கைவசம் அருகிலேயே இருக்கட்டும்.

A view of Ennore Beach in Chennai6. வதந்திகளை நம்ப வேண்டாம்

புயல் மற்றும் வெள்ளம் ஏற்படுவது குறித்த வதந்திகளை நம்பி பயம் கொள்ள வேண்டாம். அரசு அதிகாரிகளின் முறையான அறிவிப்பைக் கேட்ட பிறகு அதற்குத் தகுந்தாற்போல நடந்து கொள்ளுங்கள்.

7. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்

போக்குவரத்துக்காக இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். அப்படி அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்கவும்.

8. மழைக்கு ஒதுங்குகையில் கவனம்

மக்கள் மழைக்கு ஒதுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ, மரங்களுக்கு அடியிலோ நிற்பது தவறு. அதைத் தவிர்த்து விடுங்கள்.

9. ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்

ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களையும், வீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் மழைநீர் புகாத உறையில் இட்டுப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.

10. சாகச முயற்சிகள் வேண்டாமே

கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் அந்த இடத்திலிருந்து இளைஞர்கள்  செல்ஃபி புகைப்படங்கள், காணொளிகள் எடுப்பது போன்ற சாகச முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.  முடிந்தால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவுங்கள்.