Home இயற்கை இந்த விடுமுறைக்கு நீங்கள் செல்ல வேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள்!!

இந்த விடுமுறைக்கு நீங்கள் செல்ல வேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள்!!

அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வரவிருக்கின்றன. பள்ளிகளுக்கு வேறு தேர்வு முடிந்து குழந்தைகள் அனைவரும் வீட்டில் இருக்கும் காலம். இந்நேரம் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்படி களேபரங்கள் பல வீடுகளில் நடக்கத் துவங்கியிருக்கும். அப்படி விடுமுறையை எங்கே கழிக்கலாம்? என்று தேடும் மக்களுக்காகவே இந்தப் பதிவு. இந்த மாதத்தில் நீங்கள் செல்லக்கூடிய தமிழ்நாட்டின் சிறந்த 10 இடங்களைக் கீழே காணலாம். (கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளாததால் டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.)

 1. 1 ஏலகிரி


  கடல் மட்டத்திலிருந்து 4,626 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த மலைப் பிரதேசம் வட தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் ஆகும். சுற்றிலும் பச்சைக் குன்றுகள், ரோஸ் மலர் பூத்துக்குலுங்கும் பூங்காக்கள் என இயற்கையின் எல்லையில்லாத பேரழகை அங்கே காணலாம்.

  அருகே இருக்கும் சுவாமி மலைக்கு செல்லும் வழிகளில் உள்ள அடர்காடுகள் இங்கே சிறப்பு வாய்ந்தவை.

  ஜலகம்பாறை அருவிக்குச் செல்ல மறக்காதீர்கள்

  இங்கு பாராகிளைடிங், மற்றும் மலையேறும் சாகசப்பயணம் செய்யவும் வசதிகள் உண்டு.

 2. 2 ஏற்காடு


  தமிழகத்து கிழக்குக் காடுகளின் வனப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் ஏற்காட்டிற்குச் செல்லவேண்டும். பச்சைப் பசேலென்ற காடுகளும், காப்பித் தோட்டங்களும் நெஞ்சை ஒரு நிமிடம் நிறுத்திப்போகும் வசீகரமானவை.

  எமரால்ட் ஏரி மற்றும் அதில் இருக்கும் படகு சவாரி இங்கு பிரபல்யம்.

  அண்ணா பூங்கா, ஜப்பான் பூங்கா மற்றும் கரடி குகை ஆகியவை சிறந்த பொழுதுபோக்கும் இடங்களாகும்.


 3. 3 வால்பாறை


  ஆனைமலை வனப்பகுதியில் அமைந்திருக்கும் வால்பாறை கவர்ச்சிகரமான காடுகளுக்கு புகழ்பெற்றவையாகும். இங்குள்ள இந்திரா காந்தி சரணாலயம் காடுசார் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடியது.

  ஆனைமலை பகுதியில் காட்டு வழிப் பயணம் மிகச்சிறந்த அனுபவத்தைத் தரவல்லது.

  நல்லமுடி என்னும் இடத்தில் இருந்து மொத்த மலைத் தொடரையும், காப்பி மற்றும் தேயிலைக் காடுகளை கண்டுகளிக்கலாம்.

  பாலாஜி கோவில், சோலையாறு அணையிலும் அனேக நேரத்தினைச் செலவளிக்கலாம்.

 4. 4 ராமேஸ்வரம்


  காசியைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் ஒன்றான ராமேஸ்வரம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் கூட. இந்தியாவின் தென்கிழக்குக் கோடியில் அமைந்திருக்கும் இந்தத் தீவிற்கு ஏராளமான பக்தர்கள், பயணிகள் ஆண்டு முழுவதும் வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் பல சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

  அழிந்துபோன நகரமான தனுஷ்கோடி அதன் ரம்மியமான கடற்கரைக்குப் புகழ்பெற்றதாகும்.

  சவுக்குக் காடுகள் நிறைந்த கடற்கரை மற்றும் தேவிப்பட்டணத்தில் உள்ள நவகிரக கோவில்   ஆகியவை இங்கு வரும் அதிகமானோரால் செல்லும் தலங்கள் ஆகும். ரயிலில் பயணிக்கும் வைப்பு கிடைத்தால் தவறவிட வேண்டாம். பாம்பன் வழியாக மெதுவாகச் செல்லும் பயணம் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாய் இருக்கும்.

 5. 5 ஒகேனக்கல்


  தர்மபுரியில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சி தமிழகத்தின் பெரும்பாலான மக்களைத் தன் வசம் ஈர்த்து வருகிறது. தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும்போது குளிக்கவும், படகு சவாரி செய்யவும் பயணிகள் அனுமதிக்கப்படுவர். 

  இன்னொரு சிறப்பம்சம் இருக்கிறது. இங்கு மீன்குழம்பு  சமைத்துத் தருபவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் மீனை வாங்கிக்கொடுத்துவிட்டு நீங்கள் குளிக்கச் செல்லலாம். திரும்பும் போது சுடச்சுட மீன் சாப்பாடு தயாராய் இருக்கும். மறக்க முடியாத சுவை மக்களே!!

  நேரமிருப்பவர்கள் மேலகிரி மலைக்குச் சென்றுவரவும்.

 6. 6 கன்னியாகுமரி


  உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு சுற்றுலா செல்ல திட்டம் இருந்தால் கன்னியாகுமரி, திருச்செந்தூர் சென்றுவாருங்கள். இந்தியாவின் கடைசிப்புள்ளி இங்குதான் இடப்பட்டிருக்கிறது. 

  சங்குத்துறை கடற்கரை, விவேகானந்தர் பாறை ஆகியவை மிகவும் புகழ்பெற்ற இடங்களாகும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை இங்கு பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர். 

  நீங்கள் காரில் பயணிக்க இருக்கிறீர்கள் என்றால் உவரி, மணப்பாடு வழியாக திருச்செந்தூர் பயணியுங்கள். உவரியின் பளிங்கு போன்ற கடற்கரையையும், மணப்பாட்டில் உள்ள தேவாலயத்தையும் பார்க்க மறந்துவிடாதீர்கள்.

 7. 7 வேளாங்கண்ணி


  வங்காள விரிகுடாவின் மிகச்சிறந்த கடற்கரை நகரங்களுள் இந்த வேளாங்கண்ணியும் ஒன்றாகும். இங்குள்ள மேரி மாதாவின் திருக்கோவில் லட்சக்கணக்கான பயணிகளின் இலக்காக இருக்கிறது. 

  மேலும் இங்குள்ள கடற்கரையும் அருங்காட்சியகமும் நமது நேரத்தினை பயனுள்ள வகையில் செலவழிக்க ஏற்ற இடங்களாகும்.

 8. 8 காஞ்சிபுரம்


  வரலாற்றின் மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கு காஞ்சிபுரம் போல் ஓர் சுற்றுலாத்தலம் கிடைக்காது. பல்லவர் காலத்தில் தலைநகரமாக இருந்த காஞ்சிபுரம் இங்குள்ள பட்டு நெசவிற்குப் பெயர் போனதாகும். கும்பகோணம் போலவே ஏராளமான கோவில்கள் காஞ்சிபுரத்திலும் உண்டு. 

  இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் பல்லவர்களின் சிற்பக்கலைக்கு இன்றும் சான்று பகர்கின்றன. இங்குள்ள கடற்கரை பற்றி சொல்லவே தேவையில்லை. அவ்வளவு அழகான சிற்பங்களும், கடற்கரையும் ஓய்வெடுக்க மிகச்சிறந்த இடங்களாகும்.

 9. 9 ஊட்டி


  ஊட்டி மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் மிகச்சிறந்த இடமாகும். நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி இதன் பசுமை ததும்பும் காடுகளுக்கும், தேயிலை எஸ்டேட்டுகளுக்கும் புகழ்பெற்றவை. 

  இங்குள்ள ஏரியும் படகு சவாரியும் மிகப்பிரபலம். பொட்டானிக்கல் பூங்கா வாழ்வின் மிக உன்னத நேரத்தினைக் கொடுக்கும். 

  குன்னூருக்கு அருகில் இருக்கும் சிம்ஸ் பூங்காவும் சுற்றுலா பயணிகளின் விருப்பத் தேர்வுகளுள் ஒன்றாகும்.

  முதுமலை வனப்பகுதி மற்றும் சரணாலயத்தில் நீங்கள் அதிகமான நேரத்தை செலவிடலாம்.

  தொட்டபெட்டா மலைப் பயணத்தை தவறவிட்டு விடாதீர்கள்.

  மேட்டுப்பாளையத்திலிருந்து ரயில் மூலமாக ஊட்டி செல்ல விருப்பப்படும் பயணிகள் உங்களின் சுற்றுலா தினத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே டிக்கெட் பதிவு செய்துகொள்ளுதல் சிறந்தது. ஏனெனில் விடுமுறை தினங்களில் கூட்டம் கடுமையாக இருக்கும்.

 10. 10 கொடைக்கானல்


  பசுமையின் ஆக்கிரமிப்பில் பரவி விரிந்திருக்கும் அடர்காடுகளுக்கு கொடைக்கானல் பெயர் பெற்றது. திண்டுக்கல், வத்தலகுண்டு வழியாக மலையேறும் அனுபவமே அலாதியானது தான். திரும்பிய பக்கமெல்லாம் இயற்கையின் ஈரக்கரங்கள் உங்களை அணைப்பதை உணரமுடியும். 

  பில்லர் பாறை, பூந்தோட்டம், கோடை அருவி ஆகியவை மிகச்சிறந்த இடங்களாகும். ஒரு நாள் முழுவதும் சுற்றித்திரிந்து கொடைக்கானலின் மொத்த அழகையும் ரசித்துவிட முடியும்.

  குதிரை சவாரியும் இங்கு பிரபல்யம்.

- Advertisment -

Must Read

- Advertisment -