விடுமுறையில் என்ன தான் செய்வது? இது பலரையும் குழப்பும் விஷயம். என்ன செய்யலாம் என யோசித்தே காலம் முழுவதையும் போக்கிவிட்டு அடுத்த நாள் அலுவலகத்திற்குச் செல்லும் போது வருமே ஒரு தலைவலி…. சரி அதைவிடுங்கள். விடுமுறையில் வெளியூர் செல்லலாம். ஊர் சுற்றிப் பார்க்கலாம். சிலருக்கு நீண்டதூரம் பயணிப்பது பிடிக்கும். சிலருக்கு பொழுது போக்கு பூங்காவில் (Amusement Park) நேரம் செலவழிப்பது மிகவும் பிடிக்கும். நம்ம ஆட்களின் புஜ பல பராக்கிரமசாலித்தனத்தை காட்டுவதற்கு உள்ள ஒரே இடம் அதுதான். அப்படிப்பட்ட நல் உள்ளங்களுக்காகவே இந்தப் பதிவு. இந்தியாவின் மிகப்பெரிய 10 பொழுது போக்கு பூங்கா என்னென்ன என்பதைக் கீழே பார்க்கலாம்.
10. நிக்கோ பார்க், கொல்கத்தா

கொல்கத்தாவில் குடும்பத்துடன் செல்வதற்கான சிறந்த இடம் நிக்கோ பூங்கா. அந்நகரத்தின் உப்புநீர் ஏரிக்கரையில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 40 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கும் இதில் 35 வகையான விளையாட்டுக்கள் உள்ளன. அனைத்து வகையான வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்தப்பூங்காவில் இடம்பெற்றுள்ளன. இவைபோக படகு சவாரியும், மிகப்பெரிய உணவு விடுதி ஒன்றும் உள்ளே இருக்கிறது. காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை திறந்திருக்கும் இப்பூங்காவிற்குக் கட்டணமாக ரூபாய் 600 வசூலிக்கப்படுகிறது.
9. MGM டிஸ்ஸி வேர்ல்ட் , சென்னை

சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது MGM Dizzy World பூங்கா. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்கா என்ற பெருமையும் இதனைச் சேரும். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோருக்கு என தனித்தனி பொழுதுபோக்கு இடங்கள் உள்ளது கூடுதல் சிறப்பு. மேலும் செயற்கை அருவி, படகு சவாரி, கடற்கரை மற்றும் ஒரே நேரத்தில் 500 பேர் அமரக்கூடிய உணவு விடுதி போன்றவை மிகச்சிறந்த அனுபவங்களைத் தரும். குழந்தைகளுக்கு 549 ரூபாயும் மற்றவர்களுக்கு 699 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் காலை 10.30 முதல் மாலை 6.30 வரை இயங்கும் இந்தப் பூங்கா விடுமுறை நாட்களில் மாலை கூடுதலாக ஒருமணி நேரம் திறந்திருக்கும்.
8. GRS பார்க், மைசூர்

மைசூரில் அமைந்திருக்கும் GRS Fantacy Park வருடத்தின் எல்லா நாட்களிலும் செல்லக்கூடிய சிறந்த பொழுதுபோக்குத் தலமாகும். குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு, வயதானவர்களுக்கு என தனித்தனி விளையாட்டுகள் மற்றும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் பத்திற்கும் மேற்பட்ட திகில் விளையாட்டுகளும் இங்கே உள்ளன. கட்டணத்தைப் பொறுத்தவரை குழைந்தைகளுக்கு 599 ரூபாயும், வாலிபர்களுக்கு 699 ரூபாயும், வயதானவர்களுக்கு ருபாய் 499 ம் வசூலிக்கப்படுகிறது. பிற்பகலில் வருவோருக்கு கட்டணத்தில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இங்கு உள்ளதால் தாரளமாக ஒரு நாள் முழுவதும் பொழுதைக் கழிக்கலாம்.
7. அட்வென்ச்சர் ஐலாண்ட் , புது தில்லி

புது டில்லியின் வட மேற்கே அமைந்துள்ள இந்தப் பூங்கா அமைந்துள்ளது. டெல்லி வாழ் மக்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் இந்த இடம் 162 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. காலை 11 மணிமுதல் இரவு 7 மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும். வார நாட்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு 550 ரூபாயும், வயதானவர்களுக்கு 350 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களின்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வயதானவர்களின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. பண்டிகை மற்றும் சிறப்பு தினங்களில் கண்கவர் நிகழ்ச்சிகளும் இங்கே நடத்தப்படுகின்றன.
6. ராமோஜி ஃபிலிம் சிட்டி , ஹைதராபாத்

ஹைதராபாத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்குத் தலம் ராமோஜி ஃபிலிம் சிட்டி தான். சுமார் 1666 ஏக்கர் பரப்பில் எண்ணற்ற பொழுதுபோக்கு அமசங்களைக் கொண்டிருக்கிறது இந்த இடம். இந்தியாவின் பல திரைப்படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இதை முழுவதுமாக சுற்றிப்பார்க்க ஒரு நாள் நிச்சயம் போதாது. அதுமட்டுமல்லாமல் பூந்தோட்டங்கள், உணவகங்கள், தங்கும் விடுதி, படம் எடுக்கும் இடங்கள் என தனித்தனி இடங்கள் உள்ளன. உள்ளே போக்குவரத்திற்காக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கே பல திரைப்படக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. குழந்தைகளுக்கு 950 ரூபாயும் மற்றவர்களுக்கு 1150 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. வேர்ல்ட் ஆப் ஒண்டெர்ஸ், நொய்டா

நொய்டாவில் அமைந்துள்ள இந்தப் பொழுதுபோக்கு பூங்காவில் இருபது வகையான விளையாட்டுக்கள் உள்ளன. குழந்தைகளுக்கு 599 ரூபாயும் வாலிபர்களுக்கு 749 ரூபாயும் வயதானவர்களுக்கு ரூபாய் 249 ம் கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக பதிவு செய்யும் மாணவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சலுகைகள் இங்கே தரப்படுகின்றன. காலை 10:30 முதல் இரவு 7:00 வரை இந்தப் பூங்காவானது திறந்திருக்கும்.
4. ஒண்டர்லா , பெங்களூர்

ஒன்டெர்லாவைப் பொறுத்தவரை கொச்சின், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன. அவற்றுள் பெங்களூரில் இருக்கும் பூங்காவிற்கு ஏராளமான மக்கள் செல்கிறார்கள். இங்கே உள்ள ஏழு உணவகங்களில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமரலாம். நிலம், நீர், திகில் என விதவிதமான விளையாட்டுகள் இங்கே இருக்கின்றன. காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும் இந்தப் பூங்காவிற்கு சாதாரண மற்றும் விடுமுறை நாட்களுக்கென்று தனித்தனியாக கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு 890 ரூபாயும் குழந்தைகளுக்கு 720 ரூபாயும் வயதானவர்களுக்கு 670 ரூபாயும் கட்டணமாக விதிக்கப்படுகிறது. (GST இதில் அடங்காது). விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்தக் கட்டணத்தில் 100 முதல் 150 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படலாம்.
3. கிங்டம் ஆப் ட்ரீம்ஸ், குர்கோன்

ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கோனேவில் அமைந்துள்ள இந்த இடம் சுமார் 200 கோடி செலவில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள நாதங்கி மஹாலில் 864 பேர் அமரலாம். அம்மாநில மற்றும் இந்தி திரை உலகின் பெரும்பான்மையான கலை நிகழ்ச்சிகள் இங்குதான் நடத்தப்படுகின்றன. மேலும் ஒரு திரையரங்கமும் இதனுள்ளே அமைந்துள்ளது. பிற்பகல் 12.30 முதல் நள்ளிரவு 12 வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். பூந்தோட்டங்கள் மற்றும் பல விளையாட்டு அம்சங்கள் அமையபெற்ற இந்தப் பூங்காவில் Economy, Bronze, Silver, Gold மற்றும் Platinum என நான்கு வகை நுழைவுச் சீட்டுகள் விற்பனையில் இருக்கின்றன. வார நாட்களில் 1,099 முதல் 2,999 ரூபாய் வரை கட்டணம் இருக்கும். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில்(திங்கட்கிழமை விடுமுறை) 1,199 முதல் 3,999 ரூபாயாக கட்டணம் வசூலிக்கப்படும்.
2. எஸ்ஸல் வேர்ல்ட், மும்பை

வருடத்திற்கு 18 லட்சம் பார்வையாளர்கள் செல்லும் இந்தப்பூங்கா மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காக்களில் இதுவும் ஒன்று. குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் என அனைத்து வகையான வயதுடையவர்களுக்கும் ஏற்ற இந்தப்பூங்காவில் 40 வகையான விளையாட்டுகள் உள்ளன. மேலும் இங்குள்ள திகில் விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவை. கட்டணத்தைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு 899 ரூபாயும் வாலிபர்களுக்கு 1299 ரூபாயும் வயதானவர்களுக்கு 599 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
1.அட்லப்ஸ் இமாஜிகா, மும்பை

மும்பை வாசிகளின் சொர்க்க புரியாகத் திகழும் அட்லப்ஸ் இமாஜிகா 130 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். நாற்பதுக்கும் மேற்பட்ட விளையாட்டுகளைக் கொண்ட இந்தப் பூங்காவில் எட்டு உணவு விடுதிகள் அமைந்திருக்கின்றன. சுற்றுலாபயணிகள் தங்குவதற்காக இங்கு 287 சொகுசு அறைகளும் வாடகைக்குக் கிடைக்கிறது. செயற்கையாக உருவாக்கப்பட்ட பனிப்பொழிவு இங்கு மிகவும் பிரபலமானது. திகில், நீர் சறுக்கு, பனி ஆகிய இடங்கள் முறையே ருபாய் 999, 599 மற்றும் 199 வசூலிக்கப்படுகிறது. இவைபோக கணினி மூலம் 3D தொழில்நுட்பத்தில் சில விளையாட்டுகளும் இங்கே இருக்கின்றன.