28.5 C
Chennai
Wednesday, April 17, 2024

எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ 10 வழிகள்!

Date:

உங்களுக்குத் தெரியுமா? நம் வாழ்நாளில் முக்கால்வாசி நாட்களில் நாம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோமாம். கால்வாசி வாழ்வைத் தூங்கியே கழிக்கிறோம். பின் எப்போது தான் நாம் மகிழ்வாக இருக்கிறோம். மகிழ்ச்சியைத் தொலைத்த நாட்களில் வாழ்வு என்று ஒன்று எங்கே இருக்கிறது?

அழுத்தும் பணிச்சுமைகள், துரத்தும் கடமைகள், நிற்க நேரமின்றி, யாரையும் நிமிர்ந்து பார்க்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம். இப்போதெல்லாம் நாட்கள் எவ்வளவு வேகமாகக் கரைகின்றன கவனித்தீர்களா? கிடைத்த வாழ்க்கை நமக்கொரு புதையல். அதை எப்படி மகிழ்வாகக் கழிப்பது என்பதற்கான 10 வழிகளை இக்கட்டுரையில் காண்போம்.

tamilmalar
Credit : Tamilmalar

மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்:

மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திப் பார்த்தலென்பது ஒரு போதை. உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கத் தான் விரும்புவீர்கள். ஆனால், அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்களா? குடும்பத்தைத் தாண்டி முன்பின் தெரியாத யாரோ ஒருவரை மகிழ்வித்துப் பாருங்கள். அது தரும் அனுபவம் அலாதியானது. உங்களால் ஒருவர் முகத்தில் தோன்றும் சிரிப்பும், மகிழ்வும் நாள் முழுவதும் உங்களை மகிழ்வாக வைத்திருக்கும். எனவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்.

தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்:

தண்ணீர் உடலில் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் அருமருந்து. எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவு நாம் நம் உடலைப் பற்றிய கவலையின்றி இருக்கலாம். உடல் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இருந்தாலே நம் மனம் மகிழ்வாக இருக்கும். எனவே, தினமும் நிறையத் தண்ணீர் அருந்துங்கள்.

உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்:

எல்லோரும் எல்லாம் அறிந்தவர்கள் அல்ல. யாரும் எதுவுமே அறியாதவர்கள் அல்ல. அனைவருக்குள்ளும் ஏதோ ஓர் ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைக் கண்டறிவதிலும், செயல்படுத்துவதில் தான் நமக்குப் பிரச்சனைகள் வருகின்றன. முதலில் நம் ஆற்றலை நாம் நம்ப வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. Celebrate yourself. ஆம், உங்களைக் கொண்டாடுங்கள். உங்களுக்குள் ஒரு தனித்துவமான ஆற்றல் ஒளிந்திருப்பதை நம்புங்கள்.

வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உங்களை உணருங்கள்

பறவைக்கு வானம் போல நமக்கு இந்த வையம். பறவைக்கு யாரும் வானில் இவ்வளவு தான் பறக்க வேண்டும் என்று கோடு கிழிப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு பறவையும் தன் எல்லையைத் தெரிந்து வைத்திருக்கிறது. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல், வானில் சுதந்திரமாகப் பறக்கும் பறவையாக உங்களை உணருங்கள். மற்றவர்கள் உருவாக்கிய கூண்டுக்குள் வாழும் மனிதர்களை விட, தன்னைத் தானே கூண்டிற்குள் அடைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் தான் அதிகம். பறக்கத் தொடங்குங்கள். வானம் மட்டுமல்ல, வாழ்வும் வசப்படும்.

hispotion
Credit : Hispotion

நேர்மறையான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்து முறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

தற்போது நம் சமுதாயம் எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டு வருகிறது. எந்த ஒன்றிலும் நன்மையை விட்டுவிட்டு, அதன் தீமைகளைப் பெரிது படுத்தி, அதைப் பற்றிச் சிந்தித்து, கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது நம் தனிப்பட்ட வாழ்விலும் பிரதிபலிக்கிறது.

எவர் மீதும் நம்பிக்கை இல்லாமல், எல்லாவற்றையும் பெரிதாக ஆய்வுக்கு உட்படுத்தி கடைசியாக நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் தான் நமக்கு பெரிய எதிரி. எதிர்மறை எண்ணங்களைத் தூக்கிப் போடுங்கள். நேர்முறையான எண்ணங்களை தினமும் ஐந்து முறையாவது மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்

நமக்கும் கீழே வாழ்பவர் கோடி. ஒவ்வொரு மனிதனும் நினைத்துக் கொள்ள வேண்டிய வரிகள். நீங்கள் போக்குவரத்து நெரிசலை எண்ணிக் கடுப்பாகிக் கொண்டிருக்கும் அதே வேளையில், யாரோ ஒருவர் பேருந்திற்குப் பணம் இன்றி, வெறும் காலோடு நடந்து கொண்டிருக்கலாம். உங்களுக்குப் பிடிக்காத உணவுக்காக நீங்கள் கவலைப்படும் அதே வேளையில், யாரோ ஒருவர் பல நாட்களாக உணவின்றி வருந்திக் கொண்டிருக்கலாம். எனவே, நீங்கள் வாழும் வாழ்வே உலகில் சிறப்பானது என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

‘No’ சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்

பணி இடங்களிலோ அல்லது குடும்பத்திலோ, உங்களால் முடியாத அல்லது உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்யுமாறு யாரும் வறுபுறுத்தினால், ‘No’ சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றும், முடியாது என்றும் சொல்வது எந்த விதத்திலும் நம்மை நாமே குறைத்து எடை போடுவதாகவோ அல்லது மரியாதைக் குறைவாகவோ இருக்காது. எப்போதும் நம்மால் மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. சரி என்று சொல்லிவிட்டு மன அழுத்தத்தில் தவிப்பதை விட தைரியமாக இல்லை என்றும் முடியாது என்றும் சொல்லிப் பழகுங்கள்.

நன்றாக வாய் விட்டுச் சிரியுங்கள்

சிரிக்கும் போது மட்டும் தான் நம் உடலில் உள்ள அனைத்து தசைகளும் செயல்படுகின்றதாம். சிரிப்பது உடல் நலம், மன நலம் இரண்டிற்கும் சிறந்தது. எனவே, நன்றாக வாய் விட்டுச் சிரியுங்கள். வாழ்வு மகிழ்வுக்கானது.

oprah
Creidt : Oprah.com

எல்லோரிடமும் அன்பைச் செலுத்துங்கள்

உலகில் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில், ஒரு சிறிய அன்புக்காகத் தான் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். அன்பு மகத்தான விந்தைகளைப் புரிய வல்லது. எனவே, அன்பைப் பரிமாறுங்கள். செல்லும் வழியெல்லாம் நேசம் விதைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நாளை என்பது நிச்சயமற்ற இப்பெரு வாழ்வில், நம்மால் பிறருக்கு எளிதாகத் தர இயலும் மதிப்பு உயர்ந்த ஒன்று அன்பு மட்டுமே.

வாழ்க்கையை சுலபமாக எடுத்துக் கொள்ளுங்கள்

வாழ்வில் நமக்கிருக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே வழி, சிறிது காலம் அதை அப்படியே விட்டு விடுவது தான். நீர் வெகுநேரம் கலங்கியே இருக்காது. விரைவில் தெளிவடையும். அதுபோலத் தான் நம் பிரச்சனைகளும். நாம் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டு, கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால் எதுவும் மாறி விடாது. ஒரு பிரச்சனைக்கான ஆகச்சிறந்த தீர்வு அதை எதிர்கொள்வதே. எனவே, தைரியமாக தெளிந்த மனநிலையில் பிரச்சனைகளை எதிர் கொள்ளுங்கள்.

வாழ்வை சுலபமாக எடுத்துக் கொள்ளுங்கள். திட்டமிடப்பட்டு நேர்த்தியாக வாழும் வாழ்வில் என்ன சுகம் இருந்து விடப் போகிறது. திருப்புமுனைகள் தான் அழகு. ” அப்றம் நேத்து அடிக்க வரேன்னு சொன்னீங்க, வரவே இல்ல..” என்கிற ரீதியில் வாழ்வைக் கையாளுங்கள். வாழ்வில் கொண்டாட்டங்களுக்கான காரணங்களைத் தேடித் கொண்டே இருங்கள்.

சொல்வதற்கு நன்றாகத் தான் இருக்கும். வாழ்ந்து பார்ப்பவர்களுக்குத் தான் வலி தெரியும் என்கிறீர்களா? எப்படியும் வாழத் தான் போகிறோம். அதை இப்படி வாழ்ந்து பார்ப்போமே. நாம் மகிழ்ந்திருக்கப் படைக்கப்பட்டவர்கள். நம் வாழ்வு நமக்கானது மட்டுமே.

நீடூழி வாழ்க!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!