தீபாவளி நெருங்கி விட்டது. எல்லோரும் அரக்கப் பறக்க சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருப்பீர்கள். தீபாவளி நேரத்துப் பயணங்களில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், அனைவரும் உங்களைப் போலவே அவசரகதியில் சொந்த ஊர்களுக்குப் பயணித்துக் கொண்டிருப்பார்கள். இதோ, பண்டிகை நேரத்தில் ஊர்களுக்குப் போகிறவர்களுக்காக 10 டிப்ஸ்,
- எந்த நகரமாக இருந்தாலும் சரி, மொத்தமாக எல்லாருமே சொந்த ஊருக்குத் தான் போய்க் கொண்டிருப்பார்கள். முக்கிய சாலைகளில் கூட்டம் அள்ளும். எனவே, குறைந்தது ஒரு மணி நேரம் முன்பே கிளம்பி விடுவது நல்லது. கார், ஆட்டோ என எல்லாமே பிஸியாகத் தான் இருக்கும். எனவே, பேருந்தில் செல்பவர்கள், பேருந்து ஏறும் இடத்துக்கு எப்படி செல்கிறீர்கள் என்பதை முன்பே யோசித்துக்கொள்ளுங்கள்.
- காரில் பயணிப்பவர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக என்ஜின், டயர், முகப்பு விளக்குகள் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் சரி செய்து கொள்ளுங்கள்.
- நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். தீபாவளி சமயங்களில் பெரும்பாலும் மழை பெய்து கொண்டிருக்கும். தற்போது பனியும் பொழியத் தொடங்கியிருப்பதால் இரவு நேரப் பயணங்களை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
- எல்லா இடங்களிலும் டெபிட் கார்டுகள் செல்லுபடியாகாது. எனவே, கையில் கொஞ்சம் பணம் வைத்திருங்கள். உங்கள் பகுதி ஏ.டி.எம்மிலேயே எடுத்துக் கொள்ளுதல் உத்தமம். அது போக, சில்லறை கொஞ்சமும் வைத்துக் கொள்ளுங்கள்.
- புறநகர் பகுதிகளில் ஹோட்டல்கள் சுமாராகத் தான் இருக்கும். எனவே, அங்கு சாப்பிடப் பிடிக்காதவர்கள் தின்பண்டங்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குளிர்பானங்கள் ஆடம்பரம். தண்ணீர் அத்தியாவசியம்.
- பேருந்தோ, காரோ எதில் பயணிப்பது என்றாலும் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது கைபேசி சார்ஜைத் தான். முடிந்த அளவிற்கு சார்ஜ் போட்டுக் கொண்டு கிளம்புங்கள். இல்லையெனில் பவர் பேங்க்கை சரணடையுங்கள்.
Credit : TBZR - தனியார் ஆம்னி பேருந்துகளில் தான் முக்கால்வாசிப் பொது மக்கள் செல்கின்றனர். இ-டிக்கெட் மெயில்/மெசேஜை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். சில பேருந்து நிறுவனங்கள் டிக்கெட் ப்ரின்ட் அவுட் கேட்பார்கள். அதையும் தயாராகக் கையில் வைத்துக் கொண்டால் நல்லது.
- பெண்களுக்கான ஓய்வறைச் சிக்கல்கள் பயணத்தின் போது மிக அதிகம். எனவே, கிளம்பும் போதே தேவையான முன்னேற்பாடுகளுடன் தொடங்குவது நல்லது. தண்ணீர் அளவாய் குடிப்பது நலம்.
- குழந்தைகளுக்குத் தேவையான தின்பண்டங்கள், பால், சுடுதண்ணீர் போன்றவற்றை மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பயணங்கள் அவர்களுக்கு அலுப்பு தரக் கூடியவை. கூட்டத்தில் உங்கள் கண்களில் இருந்து தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- விடுமுறை முடிந்து ஊர் திரும்ப முடிவெடுத்தால் ஒருநாள் முன்னதாகவே கிளம்பி விடுவது உத்தமம். காரணம் தீபாவளி பொதுவான விடுமுறை என்பதால், எல்லோரும் விடுமுறை கடைசி நாளன்று தான் கிளம்ப முடிவெடுப்பார்கள். அதனால் முறையான போக்குவரத்து வசதியின்றி திண்டாடநேரிடும்.
குறித்த நேரத்தில், மிதமான வேகத்தில் பயணியுங்கள், காரில் செல்பவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள். மழை நேரத்தில் கவனமாக வாகனங்களைக் கையாளுங்கள். வாசகர்கள் அனைவருக்கும் கொண்டாட்டமான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகள்.