தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது.
இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம் கைகளில், உள்ள மொபைல் போன்கள் மூலம் பணப் பரிமாற்றத்தை எளிதில் நிகழ்த்தி விடலாம். இதற்கு ஆப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் சில நடைமுறைகளில் மாற்றம் இருக்காது.
அதில், முக்கியமான ஒன்றுதான் IFSC குறியீடு. வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்குப் பணப் பரிமாற்றம் செய்ய ‘வங்கிக் கணக்கு எண்’ தானே தேவை. IFSC எதற்கு என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?. விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
IFSC குறியீடு
ஒருவருக்கு வங்கிக் கணக்கு வழியாகப் பணம் செலுத்த வேண்டுமென்றால், அவர் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறாரோ அந்த வங்கி கிளைக்குச் சென்று, பணம் செலுத்தும் படிவம் பெற்று, பூர்த்தி செய்து, வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த நடைமுறை இப்போது மலையேறிப்போய்விட்டது.
இன்று வீட்டிலிருந்தபடியே பணப்பரிமாற்றத்தை எளிதில் செய்துவிடலாம். இதற்குப் பயன்படுவது, மின்னணு பணப்பரிமாற்ற முறை.
மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு மிக முக்கியமாக இருப்பது IFSC. இந்த IFSC என்பது, Indian Financial System Code என்பதன் சுருக்கமாகும். இதன் குறியீடு எண் எழுதும் முறையில் குறிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியால், உருவாக்கப்படும் IFSC குறியீடு, ஒவ்வொரு வங்கி மற்றும் வங்கி கிளைகளுக்கு மாறுபடுகிறது. இதில் 11 இலக்கம் கொண்ட எழுத்து மற்றும் எண்கள் இடம்பெற்றிருக்கும். IFSC-ல் 4 எழுத்தும் 5வது பூஜ்ஜியமும், இறுதியாக 6 இலக்க எண்ணும் இடம்பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக HDFC0002485 என்ற வடிவத்தில் உங்களுக்கான IFSC குறியீடு வடிவமைக்கப்பட்டிருக்கும். முதலில், இருக்கும் ஆங்கில எழுத்து வங்கியையும், இறுதியில் இருக்கும் 6 இலக்க எண், வங்கி கிளையையும் குறிக்கும்.
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மற்றும் மொத்த தொகை உடனடிப் பரிமாற்றம் (RTGS) ஆகிய பணப்பரிமாற்றத்திற்கு இந்த IFSC குறியீடு மிக முக்கியமாகப் பயன்படுகிறது. மின்னணு முறையில், பணப்பரிமாற்றம் செய்ய ஒவ்வொரு வங்கியின் கட்டுப்பாடுகளைப் பொறுத்து, நீங்கள் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும், பணப் பரிமாற்றம் செய்யலாம்.

சில வங்கிகளில், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றிய உடன் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். மற்ற வங்கிகளில், பணம் பெறும் நபரின் தகவல்கள் பதிவேற்றிய பின் சில மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
வங்கி வாயிலாக ஒருவருக்குப் பணம் செலுத்த வேண்டுமெனில் பெறுபவர் பெயர், வங்கிக் கணக்கு எண் மட்டும் போதுமானது. இதற்கு நீங்கள் வங்கிக்குச் சென்று வரிசையில் காத்திருக்க வேண்டும்.
ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் IFSC தேவைப்படுகிறது.இந்த முறை, எளிமையானது மட்டுமின்றி பாதுகாப்பானதும் கூட.
உங்களுக்கு தேவையான IFSC குறியீடு பற்றி ரிசர்வ் வங்கியின் வலைத்தள பக்கத்தில் தெரிந்து கொள்ள முடியும்.