வாட்ஸ் ஆப்பில் யாராவது தொல்லை கொடுக்கின்றனரா? ஒரு ஸ்க்ரீன்ஷாட் போதும்

0
66
whats app

இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவே உலக அளவில் என்றால் இதனைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை 150 கோடி ஆகும். சமூகவலைதளங்கள் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களை முன்னெடுக்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு வதந்திகளை பரப்பும் இடமாக செயல்படுகிறது என்பதும் உண்மை. 10 நிமிடத்திற்குள் சேர் செய்தால் நல்லது நடக்கும் என்பதில் ஆரம்பித்து, ISIS தீவிரவாதிகள் ரத்தம் கேட்டு வருவார்கள் என இஷ்டத்திற்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பும் மூடர்களுக்கு இடையே, பிரிவினைவாதம், பாலியல் தொல்லைகள், ஏமாற்று வேலை போன்றவற்றிற்காக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் விஷக்கிருமிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

how-to-download-whatsapp
Credit: BT. com

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்

இதனால் தினந்தோறும் ஏராளமான புகார்கள் காவல்துறையிடம் அளிக்கப்படுகின்றன. இதில் அதிகம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தான். பெருகிவிட்ட தகவல் தொழில்நுட்பம் மூலமாக மிக எளிதில் இப்படியான செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆபாச செய்திகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பெண்களுக்கு அனுப்பும் கயவர்களைக் கண்டிக்கும் விதமாக தமிழக காவல்துறை புதிய முயற்சி ஒன்றினை எடுத்துள்ளது.

புதுமுயற்சி

உங்களுக்கு வரும் ஆபாச, ஏமாற்று செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுங்கள். அந்தப் படத்தையும் சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணையும் [email protected] என்ற இ-மெயிலுக்கு அனுப்புங்கள். இந்த செய்தியைப் பெறும் தொலைத்தொடர்புத் துறை, தொலைதொடர்பு சேவை வழங்குநரிடம் இத்தகவலைக் கூறி, காவல்துறைக்கு உரிய தகவல்களை வழங்கும்.

whatsapp-hack
Credit: Amar Ujala

சில வாட்ஸ் அப் எண்கள், மொபைல் நெட்வொர்க்காக இல்லாமல் வை-ஃபை நெட்வொர்க்காக இருக்கும். அவற்றை வை-ஃபை அளிக்கும் இணைய சேவை வழங்குநரின் உதவியோடு கண்டுபிடிக்க முடியும்.

பாதுகாப்பு

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவிற்கு இருக்கிறது? நள்ளிரவில் அல்ல, பகலில் கூட பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்கின்றன. பாலியல் பலாத்காரத்திற்கு சற்றும் குறையாதது பெண்களுக்கு ஆபாச செய்திகளை அனுப்புவது. இதனை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கவேண்டும். அதற்கு இம்மாதிரியான சட்டங்கள் மிகவும் அவசியமாகின்றன.