எப்போதோ ஒரு நாளில் எங்கோ ஓர் ஷாப்பிங் மாலில் ஏதோ ஒரு பொருள் வாங்கியிருப்பீர். அப்போது அப்பாவியாய் ஒரு வேலையாள் வந்து உங்களிடம் போன் நம்பர் கேட்டிருப்பார். ஆஃபர் வந்தா உங்களுக்கு இன்பார்ம் பண்றதுக்குத்தான் என்று சொன்ன உடனேயே நாமும் வெகு தாரளமாக நம்முடைய நம்பரை அளித்திருப்போம். இது நடந்து ஆண்டுகள் கடந்திருக்கும். ஆனால் இன்னும் அந்த மாலில் இருந்து நமக்கு மெசேஜ்கள் வந்துகொண்டிருக்கும். 50% 20% தள்ளுபடி 3 வாங்கினால் ஒன்று இலவசம். ஒன்று வாங்கினால் சோப்பு டப்பா நிச்சயம்….

கருத்துக்கணிப்பு
இப்படி அடைமழை போல் விடாது போனில் பெய்யும் மேசெஜ்களால் பாதிக்கப்பட்ட 12,000 நபர்களை வைத்து கருத்துக்கணிப்பு ஒன்றினை நடத்தியிருக்கிறார்கள் லோக்கல் சர்கிள் அமைப்பினர். ஆய்வு முடிவில் போனிற்கு வரும் 96% மேசஜ்கள் தேவையில்லாதது எனத் தெரியவந்திருக்கிறது. அதாவது பங்குபெற்ற 6,000 பேருக்கு ஒரு நாளில் சராசரியாக 7 மெசேஜ்கள் இப்படித்தான் வருகின்றன.

சரி என்னதான் பண்ணலாம்? உங்களுடைய சிம் கார்டு நிறுவனத்திற்கு இதனைத் தெரியப்படுத்தலாமா? ஆய்வு இன்னொரு முடிவையும் தருகிறது. வரும் தேவையில்லாத மேசெஜ்களில் பாதி நம்முடைய சிம் நிறுவனத்திலிருந்துதான் வருகிறதாம். தமிழில் ஒரு பழமொழி இருக்கிறதல்லவா? கொடுமை கொடுமை என்று……
ஏன் மெசேஜ்
தற்போதைய நிலவரப்படி மெசேஜ் அனுப்புவதால் குறைந்த செலவில் பெரிய விளம்பரத்தை மேற்கொள்ளலாம் என்பது உண்மையே. மற்ற சமூக வலைதளங்களில் இதனை செய்வது கடினம். வாட்சாப்பில் ஐந்து நபருக்கு மேல் அனுப்ப முடியாது. பேஸ்புக் பக்கம் கடைபோடலாம் என்றால் மார்க் பணம் கேட்பார். எனவே மெசேஜ் தான் இதற்கு ஒரே வழி.

தண்டனை
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு இந்த சிக்கலுக்கு முடிவு கொண்டுவர பாடுபட்டது. மெசேஜ்களை அனுப்பிய நிறுவனங்கள், சிம் கார்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அபராதம் விதித்தது. மேலும் இப்படி வரும் மெசேஜில் do not disturb என்னும் இணைப்பு கொடுக்கப்படவேண்டும். அந்த இணைப்பில் உள்சென்று பதிவு செய்வோருக்கு எதிர்காலத்தில் இப்படியான மெசேஜ்கள் அனுப்பப்படக்கூடாது என உத்தரவிட்டிருந்தது TRAI.

ஆனால் அப்படி செய்தாலும் பலன் கிடைக்கவில்லை என புலம்புகிறார்கள் மக்கள். அதாவது மெசேஜில் வரும் do not disturb இணைப்பில் 6% மட்டுமே சரியாக செயல்படுவதாக ஆய்வு குண்டைத்தூக்கிப் போடுகிறது.
இப்படி வரும் பெரும்பான்மையான மெசேஜ்கள் இன்சுரன்ஸ், ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் தான் அதிகமாம். இது தேர்தல் நேரம் வேறு. இனி, அண்ணன் அழைக்கிறார் மெசேஜ்கள் வரத்தொடங்கிவிடும்.