மொழியின் தேவை மனிதனுக்கு எப்போது வருகிறது? தான் நினைத்தவற்றை, தன் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த அவனுக்குத் தேவைப்பட்ட ஓர் ஊடகமே மொழி என்று சொல்லலாம். எழுத்தும் இதே வரலாற்றைத் தான் கொண்டிருக்கிறது. எழுத்தைக் கையாள்வதில் உலகமெங்கும் பல சிக்கல்கள் இருந்திருக்கின்றன. மொழிகள் மாறும் போது எழுத்துக்களும் மாறுகிறது அல்லவா? அப்படியென்றால் ஓர் மனிதன் பிற மொழிபேசும் மக்களிடத்தில் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்த இருக்கும் ஒரே வழி படங்கள் மட்டும்தான்.

படங்களை வரைந்து காட்டுவதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் குடிமகனோடும் எளிதாக நாம் உரையாடலாம். இமோஜிக்களின் (emoji) பிறப்பும் இங்கிருந்துதான் துவங்குகிறது. எழுத்துக்கள் மொழியின் அடிப்படை அலகுகளாக இருக்கும்போது உணர்ச்சிகளை நேரிடியாக வெளிப்படுத்த இமோஜிக்களைத் தவிர வேறு வழியில்லை. பேஸ்புக், வாட்ஸ்ஆப் தொடங்கி இன்று செயல்பாட்டில் இருக்கும் எண்ணற்ற சமூக வலைதளங்களில் இமோஜிக்கள் இல்லாமல் பேச்சுவார்த்தையே கிடையாது. அந்த அளவிற்கு நம்மோடு, நம் விரலோடு ஒன்றிப்போன இமோஜிக்களைக் கண்டுபிடித்தது ஷிகேடகா குரிடா (Shigetaka Kurita) என்னும் ஜப்பானிய இளைஞர் ஆவார். பெரும்பான்மையான மக்கள் இதனை எமோஜி என்றும் சிலர் இமோஜி என்றும் இன்னும் சிலர் இமொஜி என்றும் அழைக்கிறார்கள். நமக்கு எந்தக்காலத்தில் ஜப்பான் பெயர்கள் சரியாக வாயில் வந்திருக்கின்றன? அப்படித்தான் இந்தப் பெயர்களும் ஊருக்கு ஒன்றாக வழங்கப்படுகின்றன.
புது மொழி
1999 ஆம் ஆண்டு முதன்முதலில் குரிடா இந்த இமோஜிக்களைப் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். 144 டிஜிட்டல் புள்ளிகளின் மூலமாக ( 3 பைட்) சிறிய வரைபடக்குறிப்புதான் (Pictogram) முதலில் உருவாக்கப்பட்டது. அதேபோல் 176 படங்களை குரிடாவின் குழு தயாரித்தது. உண்மையில் இமோஜிகள் முதன்முதலில் உருவாக்கப்பட்டது NTT DoCoMo என்னும் தகவல் தொடர்பு நிறுவனத்திற்காகத்தான். அந்நிறுவனத்தில் தகவல் பரிமாற்றம் மின்னஞ்சல் மூலமாக நடைபெற்று வந்தது. அப்போதைய காலகட்டத்தில் மின்னஞ்சலில் 256 குறியீடுகள் அல்லது எழுத்துகளை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் தகவல் பரிமாற்றத்தை எளிமையாக்கவும், துல்லியத்தை அதிகரிக்கவும் இந்த இமோஜிக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.
ஜப்பானிய மொழியில் E என்றால் படம் (絵) என்று அர்த்தமாம். mo என்றால் எழுது (文) என்றும், ji என்றால் குறியீடுகள் (字) என்றும் அர்த்தம். படங்கள் மற்றும் குறியீடுகள் கொண்டு எழுதுதல் என்று தமிழில் நாம் எழுதிக்கொள்ளலாம். இமோஜிக்கள் போலவே குறியீடுகளை மட்டும் வைத்து எழுதும் கஞ்சி என்னும் மற்றொரு முறையும் அங்கே வழக்கத்தில் உள்ளது.

உயரும் எண்ணிக்கை
ஆரம்பத்தில் 176 ஆக இருந்த இமோஜிக்களின் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் இமோஜிக்கள் பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களில் 2,789 ஆக உயர்ந்தது. அதிவேக தகவல் பரிமாற்றத்திற்கு இமோஜிக்களைத் தவிர மனிதர்களுக்கு வேறு கதியில்லை. அந்த அளவிற்கு காலத்துக்கு ஏற்றவாறு பரிணாம மாற்றம் அடைந்துவரும் இந்த இமோஜிக்களின் பட்டியல் 2016 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள நவீன கலைப்படைப்புகளுக்கான அருங்காட்சியகத்தில் (Museum of Modern Art) வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகமே இல்லாமல் இமோஜிக்கள் செல்போன்களின் புதுமொழிதான். இவற்றிற்கெல்லாம் நாம் குரிடாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.