எதிர்கால உலகின் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை அமைக்க இருக்கும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போனான Galaxy S10 ஐ வெளியிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். ஆள் இல்லா கார்கள் தொலை தூர மருத்துவ அறுவை சிகிச்சை போன்றவை 5ஜி தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் இந்த தொழில்நுட்பம் மிக முக்கிய பங்காற்றும் என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் தனது முதல் 5 ஜி போனை சாம்சங் நிறுவனம் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் அமெரிக்காவின் சிகாகோ மற்றும் மின்னபோலீஸ் ஆகிய இரண்டு நகரங்களில் மட்டுமே இந்த போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். 6.7 அங்குல திரையும் 6 கேமரா லென்சுகளும் இதில் உள்ளது. முன்பக்கத்தில் 3D டெப்த் லென்ஸ்கள் கொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன. மெமரியைப் பொருத்த வரை 256GB மற்றும் 512 GB என இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. சில்வர் மற்றும் கருப்பு என இரண்டு வகை நிறங்களில் நிறங்களில் வெளிவரும் இந்த போனின் விலை ஆயிரத்து 300 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனது இந்த புது Galaxy S10 வெளியிட்டதன் மூலம் செல்போன் துறையின் ஜாம்பவானான ஆப்பிளை சாம்சங் நிறுவனம் முந்தும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

அதற்குத் தகுந்தாற்போல் ஆப்பிள் நிறுவனமும் 2020 ஆம் ஆண்டிற்கு முன் 5G ஸ்மார்ட் போனை வெளியிடும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. ஆக தகவல் தொழில்நுட்பத்துறையைப் பொறுத்தவரை அடுத்த வருடத்தை ஆளப்போகும் நிறுவனமாக சாம்சங் இருக்கும் எனலாம்.