உலகளவில் செல்போன் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனம், அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற கேலக்ஸி ‘அன்பேக்கெட் 2019’ விழாவில், சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. அப்படி என்ன விசேஷ அம்சங்கள் அந்த போனில் இருக்கிறதென்று பார்ப்போம் வாருங்கள்.

என்ன இருக்கிறது?
இன்ஃபினிடி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே திறனுடன், 4.6 அங்குல தொடுதிரையை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் விரித்தால் 7.3 அங்குலமாக மாறும் திறன்கொண்டது. 12 ஜிபி RAM, 512 ஜிபி ROM கொண்ட இந்த ஸ்மார்ட்போனை, தேவைப்படும்போது மடித்துக்கொள்ளலாம். இந்த மொபைல் போனில் மொத்தம் 6 சென்சார் கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. முன்புறத்தில் 3 கேமராக்களும், பின்புறத்தில் மூன்று கேமராக்களும், வீடியோ காலிங் கேமரா வசதிகளும் உள்ளது. அதாவது பின்புறம் 12 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, 12 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா, 16 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா உள்ளது. முன்புறத்தில் 1௦ மெகாபிக்சலில் இரண்டு செல்பி கேமராக்களும், 8 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஃபோல்ட் போனில் மொத்தம் இரண்டு பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை 4,380 mAh பேட்டரி திறனை கொண்டதாகும். ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற சிறப்பம்சங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9.0 பெய் இயங்கு தளத்தில் செயல்படக்கூடியது.
நிறம் மற்றும் விலை
பச்சை (Martian Green), நீலம் (Astro Blue), கருப்பு (Black) மற்றும் சிவப்பு நிறத்தில் வெளிவந்துள்ள இந்த போன், 4G எல்இடி மற்றும் 5G தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இந்த கேலக்ஸி ஃபோல்ட் போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.41 லட்சம் (1,980 டாலர்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Video Credit: Intresting Engineering