செல்போன் வர்த்தகத்தில் சமீப கால ராஜாவாக வலம்வந்து கொண்டிருக்கும் ஜியோமி நாளை தங்கத்தினால் செய்த மொபைல் கவரைக் கொண்ட கே20 ப்ரோ போனை வெளியிட இருக்கிறது. இந்த கவரில் வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. நாளை இதன் விற்பனை துவங்க இருக்கிறது. ஜியோமியின் இந்த அறிவிப்பு அதன் போட்டியாளர்களை விழிபிதுங்க வைத்திருக்கிறது.

போன் என்றால் நோக்கியா என்றொரு காலம் இருந்தது. ஆப்பிள் ஐபோனை வெளியிட அதற்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்கள் களமிறங்கின. தொழில்நுட்பம் எத்தனை வேகமாய் மக்களை சென்றடைகிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆண்ட்ராய்டு போனின் வளர்ச்சி தான். உலகத்தின் எந்த மூலையிலும் ஆண்ட்ராய்டு தனது தடத்தை ஆழமாக பதித்திருக்கிறது. கடைசி ஐந்து ஆண்டுகளில் ஆண்ட்ராய்டு போன் உற்பத்தியாளர்களின் நிகர லாபம் வானுயர உயர்ந்து நிற்கிறது. அதற்கு மிகமுக்கிய காரணம் வாடிக்கையாளர்களுக்கிடையே ஆண்ட்ராய்டு போன்களின் மீது இருக்கும் தீராக்காதல் தான். அந்தக்காதல் தான் இப்போது தங்கத்தில் கவர் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
நடுத்தர மக்களை சார்ந்த வணிகம் பெருமளவு லாபத்தை ஈட்டுவதாகவே இருந்தாலும், செல்வந்தர்கள் மற்றவர்கள் வைத்திருக்கும் அதே போன்களை வைத்திருக்க விரும்புவதில்லை. பிறரில் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டும் ஆடம்பர பொருட்களையே அவர்கள் விரும்புகிறார்கள். போன்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்படியான வாடிக்கையாளர்களை கவரவே ஜியோமி கே 20 ப்ரோ (K20 Pro) என்னும் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் கவர் தங்கத்தினால் வடிவமைக்கப்படிருக்கிறது. மேலும் இதில் k என்னும் ஆங்கில எழுத்து வைரக்கற்கள் கொண்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இதன் விலையை 4,80,000 ஆக நிர்ணயித்துள்ளது ஜியோமி.

என்ன ஸ்பெஷல்?
இந்த கே20 ப்ரோவில் 6.39அங்குல HD ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் இன்டெர்னல் மெமெரியாக 256 ஜிபி தரப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் 48+8+13 மெகா பிக்சல் கேமராக்களும், முன்புறத்தில் 20 மெகா பிக்சல் தரம் கொண்ட செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை 4000 mAh திறன் கொண்டதாக இருக்கிறது. இதனுடன் 27 வாட்ஸ் சூப்பர் சார்ஜர் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. நாளை வெளியாக இருக்கும் இந்த தங்க போனை வாங்க நம்மூர் பெருந்தலைகள் நிச்சயம் போட்டிபோடும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.