இணைய சேவைகளுக்கான தரச்சான்றிதல் வழங்கும் உலகளாவிய நிறுவனமான ஊக்லா, இந்தியாவின் சிறந்த சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி முதலிடத்தில் ஜியோவும், இரண்டாம் இடத்தில் ஏர்டெல், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்கள் முறையே வோடாஃபோன், ஐடியா உள்ளன.

சாதனை
2016 ஆம் ஆண்டு ஜியோ இந்தியாவின் டெலிகாம் துறையில் கால்பதித்தது. அதுவரை கந்துவட்டிக்கு வாங்கி கார்டு போடும் நிலையில் இருந்த இந்தியர்களுக்கு இலவசமாக சேவையைத் தர இருப்பதாக அறிவித்தது ஜியோ. உலகின் மிக முக்கிய வர்த்தக நாடான இந்தியாவில் தனது ஆட்டத்தை துவங்கியதன் மூலம் தனது வெற்றிக்கான பிரம்மாண்ட அடித்தளத்தை அன்றே போட்டுவிட்டது. அசுரவேகத்தில் இந்தியா முழுவதும் ஜியோவின் சேவை கொண்டுபோய் சேர்க்கப்பட்டன.
ஆரம்பிக்கப்பட்ட ஒரே ஆண்டில் 1,00,000 டவர்களை இந்தியா முழுவதும் எழுப்பியது ஜியோ. இந்தியா முழுவதும் 18,000 ஊர்கள் மற்றும் நகரங்களை ஜியோ இணைத்துள்ளது. சென்ற ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 250 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட மாபெரும் நிறுவனமாக ஜியோ இருக்கிறது.

எளிமை
இந்தியாவிலேயே எளிதில் கிடைக்ககூடியதாக இருப்பதால் ஜியோ முதலிடத்தைத் தட்டிச் சென்றிருக்கிறது. ஊக்லா ஜியோவிற்கு அளித்துள்ள ரேட்டிங் 98.8% ஆகும். ஏர்டெல் 90 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. வோடஃபோன் 84.6 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும், 82.8 சதவீதத்துடன் ஐடியா நான்காம் இடத்தைப் பெற்றிருக்கிறது.
வேகம்
4ஜி சேவையின் வேகத்தில் ஏர்டெல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதன் இணைய வேகம் விநாடிக்கு 11.23 மெகா பைட் (எம்பிபிஎஸ்) என்ற அளவில் உள்ளது. இரண்டாம் இடத்தில் வோடஃபோன் 9.13 எம்பிபிஎஸ் வேகத்தில் உள்ளது. மூன்றாம், நான்காம் இடங்களில் ஜியோவும், ஐடியாவும் உள்ளன.