வர்த்தகப் போரின் உச்சத்தை எட்டியிருக்கிறது அமெரிக்காவும் சீனாவும். சீனப்பொருட்களுக்கான வரிவிகிதத்தை அமெரிக்கா ஏற்றியதன் விளைவாக சீனாவில் அமெரிக்க பொருட்களின் விற்பனை வரலாறு காணாத அளவிற்குக் குறைந்துள்ளது. இதில் கணிசமான இழப்பு ஆப்பிள் நிறுவனத்திற்குத்தான். சீனாவில் நிலவும் ஆப்பிள் நிறுவனத்தின் மீதான பிரச்சினை அதன் முதலீட்டாளர்களை பதட்டமடைய வைத்திருக்கிறது. ஏனெனில் இந்தக் காலாண்டில் ஆப்பிள் நிறுவன
பொருள்களின் விற்பனையானது எதிர்பார்ப்பதை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதனை ஈடு கட்டும் விதமாக ஆப்பிள் நிறுவனம், சீனாவில் விற்பனை ஆகும் ஐபோன்களுக்கு மலிவான விலையில் பேட்டரி மாற்றுக்களை வழங்கும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி கடந்த புதன் அன்று தெரிவித்திருப்பதும் முதலீட்டாளர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
சீனா – சரிவின் துவக்கமா?
சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது பல வருடங்களுக்குப் பிறகு குறைந்துள்ளது. 1990 களுக்குப் பின்னர் கடந்த ஆண்டில் தான் சீனாவின் பொருளாதாரம் வழு இழந்து காணப்பட்டது. அதுமட்டுமில்லாமல் 2019 ஆம் ஆண்டை எதிர்நோக்கும் போது இதன் வளர்ச்சி விகிதம் இன்னும் குறைந்தே காணப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனவானது வர்த்தகத்தின் இருண்ட காலத்தில் உள்ளது எனலாம்.
கதி கலக்கிய கடிதம்
ஆப்பிள் நிறுவனத்தின் 15% வியாபாரமானது, சீனாவில் இருந்தே பெறப்படுகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவன CEO வெளியிட்ட கடிதத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் வியபாரமானது சிறந்த வணிக நாடான சீனாவில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் அடையவில்லை என்றும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு மற்றும் பொருளாதார அழுத்தங்களை கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த டிசம்பர் வருவாயாக அந்நிறுவனம் எதிர்பார்த்த தொகை 89 – 93 பில்லியன்கள் ஆகும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக நிறுவனத்திற்கு 84 பில்லியன் மட்டுமே வருவாயாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட வருவாயில் இருந்து குறைவான நிதியைப் பெறுவது ஆப்பிள் வரலாற்றில் இதுவே முதல்முறை.
ஆப்பிள் நிறுவனத்தின் “மணிமேக்கராக” விளங்குவது அந்நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன்கள் தான். முடிவடைந்த செப்டம்பர் வரையான மூன்று மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 60% ஐபோன் ஆகும். ஆப்பிள் நிறுவன CEO வின் கடிதம் வெளிவருவதற்கு முன்பாக அந்நிறுவனத்தின் பங்குகளின் விற்பனை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும் வர்த்தகம் தொடங்கப்பட்டபோது 8% விழுக்காடு சரிவு பெற்றது. மொத்தத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 55 பில்லியன் வரை சரிவை சந்தித்தது. சீனாவைப் பொறுத்தவரை ஐபோன்களின் பயன்பாட்டாளர்கள் போதுமான அளவு இல்லை என்றே அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
29 பில்லியன்
ஆப்பிள் நிறுவனமானது 29 பில்லியன் டாலர் அளவிலான பேட்டரி மாற்றுக்களை சீனாவிற்கு அளிக்க இருக்கிறது. இந்த பேட்டரிகள் சீனா தவிர்த்து வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகின்றன.
ஐபோனின் மிகப்பெரிய சரிவிற்குக் காரணம் நுகர்வோர்களை அதன் ஒவ்வொரு பொருளுக்கும் அல்லது சேவைக்கும் அதிக அளவு செலவு செய்யுமாறு செய்தது தான்.

மேலும் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிலும் விற்பனை ஆகும் ஐபோன்களின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் “ஐபோன் அல்லாத வியாபாரங்களில்” ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதன் வியாபாரமானது எதிர்பார்த்தபடி அல்லாமல் ஏமற்றமளிப்பதாகவும் அவர் அக்கடிதத்தில் ஒப்புக்கொண்டார். எனவே சீனாவில் ஐபோன் என்பது மூழ்கும் கப்பல் தான். இந்த வர்த்தகப் போரின் காரணமாக இன்னும் எந்தெந்த நிறுவனம் எல்லாம் பேரிழப்பைச் சந்திக்க இருக்கின்றன என்பது ஜி ஜின்பிங்கிற்கும் ட்ரம்பிற்கும் தான் வெளிச்சம்.