இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியானது அம்பானியின் ஜியோவின் அறிமுகத்திற்குப் பிறகு கடும் வீழ்ச்சியினை சந்தித்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளித் தந்தும் வோடாஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்களால் தங்களுடைய பழைய இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இப்படியிருக்க அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் – ன் நிலை மோசமாகவே தொடர்கிறது.

அதிகரித்துவிட்ட செலவினங்களைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை அந்நிறுவனம் எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக 35,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதாக அறிவித்திருக்கிறது பிஎஸ்என்எல். மேலும் பணியாளர்களுக்கு இதுவரை வழங்கிவந்த பயணப்படி, மருத்துவச் செலவுகள் ஆகியவற்றை அதிரடியாக நீக்கியுள்ளது.
சென்ற ஆண்டு
கடந்த ஆண்டும் இதேபோல் செலவுக் குறைப்பு நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டது. இதனால் சுமார் 2,500 கோடி ரூபாயை அந்நிறுவனம் சேமித்தது. இதனாலேயே இந்த வருடமும் அதைத் தொடர்கிறது. ஒருவிதத்தில் இந்தியாவில் பிரம்மாண்ட நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும் இதே பிஎஸ்என்எல் தான் ஜியோவின் வருகைக்குப் பின்னர் லாபம் பார்த்த ஒரே நிறுவனமும் ஆகும்.
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட தரவுகளின் படி ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பிஎஸ்என்எல் 1,284.12 கோடி ரூபாயும், ஜியோ 8,271 கோடி ரூபாயும், வோடாஃபோன் ஐடியா 7,528 கோடி ரூபாயும், பார்தி ஏர்டெல் 6,720 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியிருந்தன.

என்னதான் சிக்கல்?
வியாபாரத்தைப் பொறுத்தவரை பயனாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத அனைத்தும் தோல்வியை மட்டுமே சந்திக்கும். இது தான் தற்போதைய பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நிலை. போட்டி நிறுவங்கள் அளிக்கும் அளவிற்கு அரசு நிறுவனமான BSNL வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதில்லை. 2017 – 18 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த இழப்பு 7,992 கோடி ஆகும். புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தாதவரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வீச்சை அதிகரிக்க முடியாது என்பதே வல்லுனர்களின் கருத்து.