கேமரா தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அது மக்கள் அனைவரையும் அதிகமாகவே கவர்ந்தது. கூடவே அவற்றின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து இப்போது அறிவியல் வளர்ச்சியால் கேமராக்களில் பல விதமான முன்னேற்றங்களை கண்டிருக்கிறோம். அதேபோல ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் இருந்த கேமராக்கள் இப்போது எளிதில் கண்டுபிடிக்க முடியாத மிக மிக சிறிய அளவுகளில் கூட கிடைக்கின்றன.
சட்ட விரோதம்
கொலை, திருட்டு மற்றும் சட்ட விரோத சம்பவங்கள் பலவற்றைத் தடுக்கவும், அந்த குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் என பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படுகின்றன. இப்படி கண்காணிப்பு கேமராக்கள் வைத்து அவை செயல்படும் இடங்களில் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், “இங்கு கண்காணிப்பு கேமரா உள்ளது” எனும் வாசகங்கள் எழுதப்பட்ட அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்பது சட்டம். அறிவிப்பு பலகை இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் கேமரா நிறுவுவது சட்ட விரோதமானது.
சில கேமராக்கள் நடமாடும் சத்தம் கேட்டால் மட்டும் தானாக இயங்கி காட்சிகளை பதிவு செய்யும்!
குறிப்பாக, ஹோட்டல் அறைகள், விருந்தினர் இல்லம், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட தங்கும் அறைகளிலோ குளியலறை, உடை மாற்றும் அறைகளிலோ கேமரா வைக்கக் கூடாது. ஆனால் சிலர் தீய எண்ணத்துடன் கேமராக்களை ரகசியமாகப் பொருத்திவிடுகின்றனர். ஏனெனில் இது போன்ற கேமராக்கள் குறைந்த விலையில் எளிதில் கிடைக்கின்றன. மேலும் இவற்றைப் பொருத்துவதும் எளிமையாக உள்ளது. ரகசிய கேமராக்களை பயன்படுத்தி பெண்களைத் தவறாக படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கவோ, அல்லது இணைய தளங்களில் வெளியிடவோ செய்கிறார்கள். இது போன்ற கேமராக்களால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் வயது பெண்கள் என்பதால் விளைவுகள் மோசமாகிவிடுகின்றன.
Credit: yaoota
இந்த குற்றங்களை செய்பவர்கள் பலர் கைது செய்யப்பட்டாலும் கூட தொடர்ந்து இந்த குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.இதனால் ரகசிய கேமராக்களை எங்கெல்லாம் வைக்கப்படலாம் , அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.
மனித கண்களின் காணக்கூடிய அலைநீளம் 380-740 நானோமீட்டர். ஆனால் அகச்சிவப்பு கதிர்களின் அலைநீளம் 700-1000000 நானோமீட்டர்கள்.
வகைகள்
ரகசிய கேமராக்கள் அளவில் மிகக் சிறியது என்றாலும் காட்சிகளை துல்லியமாக படம்பிடிக்கும் படி தான் தயாரிக்கப்படுகின்றன. சில கேமராக்கள் நடமாடும் சத்தம் கேட்டால் மட்டும் தானாக இயங்கி காட்சிகளை பதிவு செய்யும். சில கேமராக்கள் இயங்க மின்சாரம் தேவை. அதே சமயம் ஒயர் இல்லாத கேமராக்களும் உள்ளன. அவை பேட்டரியால் இயக்கப்படுபவை. காந்தத்தின் உதவியால் இந்த கேமராக்கள் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்படும்.
Credit: Amazon
Wifi தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்களும் உள்ளன. இதனால் Wifi மூலம் நேரடியாக செல்போனுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடியும்.வெளிச்சத்தில் மட்டும் அல்ல, இருட்டிலும் கூட செயல்பாடுகளை பதிவு செய்யும் கேமராக்களும் உள்ளன. இப்படிப்பட்ட இருட்டிலும் படம் பிடிக்கக்கூடிய நவீன அகச்சிவப்பு கேமராக்களையே கயவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். மனித கண்களின் காணக்கூடிய அலைநீளம் 380-740 நானோமீட்டர். ஆனால் அகச்சிவப்பு கதிர்களின் அலைநீளம் 700-1000000 நானோமீட்டர் என்பதால் நம் கண்களால் அவற்றை காண முடியாது. அதே போல பின்ஹோல் கேமரா (Pinhole Camera) எனப்படும் மிகச்சிறிய கேமராக்கள் எங்கு பொருத்தப்பட்டு உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது என்பதால் பெரும்பாலும் அவற்றையே பயன்படுத்துகின்றனர்.
பொருத்தப்படும் இடங்கள்
ரகசிய கேமராக்கள் குளியலறை, படுக்கை அறை, உடை மாற்றும் அறை ஆகியவற்றில் உள்ள கடிகாரம், பூத்தொட்டிகள், துணிகளை தொங்கவிடும் ஸ்டாண்டுகள், ஹேங்கர்கள், உடைகள், ஷவர், வாட்டர் ஹீட்டர், திரைச் சீலை, சோப்பு டப்பாக்கள், பொம்மைகள், ஹோட்டல் பணியாளர் அணியும் கோட் பட்டன்கள் என எங்கு வேண்டுமானாலும் பொருத்தப்பட்டு அங்கு நிகழ்பவற்றை படம் பிடிக்கலாம்.சில ஹோட்டல்களில் தண்ணீர் குழாய்களின் திருகும் இடங்களில் கூட பொருத்தப்படுகின்றன.
அதே போல மின்னணு கருவிகளை சார்ஜ் செய்யும் அடாப்டர், சுவிட்ச், மின்விளக்குகள், கதவுகள்,கதவு கைப்பிடி,பேனா, பவர் பேங், போட்டோ பிரேம், பென் டிரைவ், வாசனை திரவிய பாட்டில், புகைப்போக்கி, காலணி, கண்ணாடியின் பின்புறம், டிஷ்யூ பெட்டி, செடிகள், புத்தகங்கள், ஸ்குருவின் தலைப்பகுதி, பிளக் பாய்ன்ட், பிளக் ஹோல்டர், குளிர்சாதனப் பெட்டி என சிறிதும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத பொருட்களில் கூட கேமராக்களை நிறுவ முடியும். சில இடங்களில் செல்போனைக் கூட மறைவான இடத்தில வைத்து படம் எடுக்கிறார்கள்.
கவனம்
பெண்கள் பழக்கமில்லாத வெளியிடங்களில் தங்கும் போது முதலில் அங்குள்ள பொருட்களை நன்கு ஆராயவேண்டும். முக்கியமாக படுக்கை, குளிக்கும் இடம் ஆகியவற்றை நோக்கியுள்ள அனைத்து இடங்களையும் முதலில் கவனமாகப் பார்க்க வேண்டும். அறையின் மேற்கூரையின் மூலைகளில் ஏதாவது பொருட்கள் இருக்கிறதா, துளை ஏதேனும் உள்ளதா என்று கவனிக்கவும். அப்படி துளை இருந்தால், அதனுள்ளே ஏதாவது உள்ளதா என்று பார்க்கவும்.
தேவையில்லாமல் கம்பியோ ஒயரோ இருந்தால், அது எங்கே போகிறது என்பதை கண்டுபிடிக்கவும். இது கூட ரகசிய கேமரா இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கலாம்.
அதன் பிறகு அறையில் உள்ள விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விட்டு அறையை சுற்றி கவனமாக பார்க்க வேண்டும். ரகசிய கேமராக்களில் உள்ள சிவப்பு அல்லது பச்சை நிற எல்.இ.டி விளக்கு ஒளிரும் என்பதால், இருட்டில் அது இருக்கும் இடத்தை எளிதாக கண்டறிய முடியும்.
ரகசிய கேமராக்களும் சிசிடிவி கேமராக்கள் போல தான். அதனால் சில ரகசிய கேமராக்களை இயக்க மின்சாரம் தேவைப்படும். அதனால் சுவிட்ச் போர்டுகளை நன்கு கவனிக்க வேண்டும். ஆனால் பேட்டரி மூலம் இயங்கும் கேமராக்களை இப்படி கண்டறிய முடியாது.
கண்ணாடிகள்
துணிக்கடைகளில் உடை மாற்றும் அறைகளில் பெரிய பெரிய கண்ணாடிகள் இருப்பதை கவனித்திருப்போம். இது போன்ற கண்ணாடிகளிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் கை விரலை கண்ணாடியின் மீது வைக்கும்போது, விரலுக்கும் கண்ணாடியில் தோன்றும் பிம்பத்திற்கும் இடையே சிறு இடைவெளி இருந்தால் அது சாதாரண கண்ணாடி. இடைவெளி இல்லை என்றால் கண்டிப்பாக பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். ரகசிய கேமராக்கள் என்ற ஆபத்தையும் தாண்டி கண்ணாடியின் பின்பக்கம் வழியாக வேறு ஒருவரால் கண்காணிக்கப்படும் ஆபத்தும் இருக்கலாம்.
Credit: alibaba
ஒரு வழியாக மட்டுமே பார்க்கக்கூடிய ஒருவழி ஆடி கண்ணாடிகளில் வெள்ளி முலாம் கண்ணாடியின் பின்புறம் பூசப்பட்டிருக்கும் என்பதால் விரல் வைத்து பார்க்கும் போது சிறு இடைவெளி இருக்கும். இருவழி ஆடி கண்ணாடிகளில் வெள்ளி முலாம் கண்ணாடிகளின் மேற்பரப்பில் பூசப்பட்டிருக்கும் என்பதால் இடைவெளி இருப்பதில்லை.
அதே போல வழக்கத்தை விட அறையில் விளக்கு வெளிச்சம் அதிகமாக, கண்ணை கூசும் அளவில் இருந்தால், அங்கு இருப்பது இருபக்க கண்ணாடியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெளிச்சம் குறைவாக இருக்கும் போது இத்தகைய கண்ணாடி வழியாக தெளிவாக ஊடுருவிப் பார்க்க முடியாது.அறையின் விளக்குகளை அணைத்து விட்டு கண்ணாடியில் டார்ச் லைட் அடித்து கவனமாக பார்த்தும், கண்ணாடி மேல் முகத்தை வைத்து உற்று பார்ப்பதன் மூலமும் யாரேனும் கண்காணிக்கிறார்களா என கண்டுபிடிக்கலாம்.
டிடெக்டர்கள்
பெரும்பாலும் வணிக இணையதளங்கள் இதுபோன்ற கேமராக்களை விற்பது போலவே இவற்றை கண்டறிவதற்கான கருவிகளையும் விற்கின்றன. அவற்றை கூட வாங்கி உபயோகப் படுத்தலாம்.
அதே போல எலக்ட்ரானிக் கடைகளில் கிடைக்கும் RF டிடெக்டர் (RF Detector) வாங்கி அவற்றை அறை முழுவதும் உள்ள பொருட்களின் அருகில் வைத்து பரிசோதிக்கலாம். இவை அறையில் ரேடியோ அலைகள் வெளி வருகின்றனவா என ஸ்கேன் செய்து பார்த்து அவை வெளிவரும் இடங்களையும் காட்டும். இதே போல கேமரா லென்ஸ் டிடெக்டர் என்னும் சாதனங்களும் விற்கப்படுகின்றன. இவை செயல்படும் கேமராவின் லென்ஸை எளிதில் கண்டுபிடித்து காட்டிவிடும்.
Credit: alibaba
இது போன்ற டிடெக்டர்களை பயன்படுத்தும் முன் உங்களிடம் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாவற்றையும் ஆப் செய்து விட்டு சோதிக்கவும். இவை செயல்படும் விதத்தை அறிய முதலில் செல்போன் போன்ற எதாவது ஒரு எலக்ட்ரானிக் பொருளை வைத்து சோதிக்கலாம்.
ஸ்மார்ட் போன்களை கொண்டும் ரகசிய கேமராக்களை எப்படி எளிதாக கண்டு பிடிக்கலாம் என அடுத்த பதிவில் பார்க்கலாம்.