இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு மற்ற நிறுவனங்களெல்லாம் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் இப்பொழுது புதிதாக 5G சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஜியோ. ஏற்கனவே 3G யிலிருந்து 4G, அதுமட்டுமல்லாமல் குறைந்த விலையில் டேட்டாக்களை வாரி வழங்கி வருகிறது ஜியோ.
வருகிறது 5G!
ஜியோ வருகைக்குப் பின்னர் தான், அலைபேசி அழைப்புக் கட்டணங்கள் மற்றும் டேட்டா கட்டணங்கள் கணிசமாகக் குறைந்தன. நாட்டில் 4G சேவைப் பயன்பாடும் வேகமாக அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோ மிக முக்கியக் காரணமாக இருந்தது. பிற நிறுவனங்களுக்கு முன்னதாகவே 5G சேவைகளையும் முதலில் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிந்ததும் அடுத்த ஆறே மாதங்களில் இந்தியாவில் 5G சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் 5G சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற இருக்கும் நிலையில், இந்தியாவில் ஜியோ 5G சேவைகள் 2020-ம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்தப் புதிய தொழில்நுட்பம் தற்போதைய 4G-யை விட அதிவேகமாக இன்டர்நெட் இணைப்பைப் பயனர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் E-Sim
இதுமட்டுமல்லாமல், புதிய ஐபோன்களில் வழங்கப்பட்டு இருக்கும் மேம்படுத்தப்பட்ட இ-சிம் (E-Sim) வசதி, ஜியோ பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பிரீபெய்ட் பயனர்களுக்கும் இ-சிம் சேவையை வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ இருக்கிறது.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் புதிய ஐபோன்களான iPhone XS மற்றும் iPhone XS Max மாடல்களில் இ-சிம் சேவையை வழங்க ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது iPhone XS மற்றும் iPhone XS Max மாடல்களில் டூயல் சிம் வசதியை வழங்கியது. இதில் ஒன்று நானோ சிம். மற்றொன்றில் டிஜிட்டல் இ-சிம் வடிவில் வழங்கப்படுகிறது.