பெற்றோருக்கு நற்செய்தி – குழந்தைகளின் கைபேசிப் பயன்பாட்டை இனி கட்டுப்படுத்தலாம்

0
107

தற்போதைய பெற்றோர்களின் மிகப்பெரிய தலைவலியே குழந்தைகள் தான். எந்நேரமும் கைபேசியிலும், கணினியிலும் மூழ்கி இருக்கும் குழந்தைகள் பெற்றோருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றனர். இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் கைபேசி உபயோகிக்க வேண்டாம் என்றெல்லாம் கட்டுப்படுத்த முடியாது. அது அவர்களின் அடிப்படைத் தேவையாகி விட்டது. அது மட்டுமில்லாமல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் குழந்தைகள் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. பாதுகாப்புக்காகவும் குழந்தைகள்  கைபேசி வைத்திருக்கப் பெற்றோர்கள் அனுமதிக்கின்றனர்.

என்றாலும் இணையத்தில் நல்ல விஷயங்கள் மட்டுமே இருப்பதில்லை அல்லவா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்த பெற்றோர், குழந்தைகளின் அளவுக்கு மீறிய கைபேசி பயன்பாட்டைக் கண்டு அஞ்சுகின்றனர்.

google family linkஇந்தக் கவலையைப் போக்கத் தான், ‘ஃபேமிலி லிங்க்’ என்னும் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது கூகுள். இந்த வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் கைபேசிப் பயன்பாட்டை வரையறை செய்யலாம். இதைப் பயன்படுத்த கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதுமானது.

இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ கைப்பேசியைப் பயன்படுத்தியது போதும் என்னும் போது அதை லாக் செய்ய முடியும். அத்துடன் செயலிகளை ப்ளாக் செய்யவும், தரவிறக்கம் செய்வதைத் தடுக்கவும் முடியும். முக்கியமாகத் தங்களின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியும்.

முதல் கட்டமாக இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வசதி 13 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டாலும், பெரியவர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்த வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட இரு தரப்பும் ‘ஃபேமிலி லிங்க்’கைப் பயன்படுத்த ஒப்புதல் தர வேண்டும்.

அதே நேரத்தில் இதைப் பயன்படுத்துபவருக்குக் கண்காணிக்கப்படுவதில் விருப்பம் இல்லையெனில், பெற்றோர்களிடம் கடவுச்சொல்லைப் பகிர வேண்டியதில்லை. கடவுச் சொல் பகிரப்படும்போது பெற்றோரின் 24 மணி நேரக் கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பார்கள்.

அதே நேரத்தில், வயது வந்த மகன்/மகள்களை இதன் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று விரும்பாதீர்கள் பெற்றோர்களே. குறிப்பிட்ட வயதிற்குப் பின் அவர்களுக்கென்று தனி உலகம் விரியும். அதை மதித்து அவர்கள் வானில் அவர்களைப் பறக்க அனுமதியுங்கள்.