செல்போன் நிறுவனங்களின் வளர்ச்சியோடு எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாதவை டெலிகாம் ஆபரேட்டர்களின் எண்ணிக்கை. செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்த காலத்தில் பிஎஸ்என்எல் மட்டுமே ஆதியும் அந்தமுமாய் இருந்தது. அதன் பின்னர் ஏர்டெல், ஏர்செல், ஹட்ச் பின்னர் வோடபோன், டோகாமோ ஐடியா என பல போட்டி நிறுவனங்கள் உருவாகி நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்போனை கொண்டு போய் சேர்த்தன. இன்றைய தேதியில் செல்போன் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால் இணைய வசதியை பொறுத்தவரை நம்மால் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இயங்க முடியாது.

நகரங்களில் கிறுகிறுக்க வைக்கும் இணைய வேகம் கிராமங்களில் படுத்துவிடும். இதுதான் உலகமெங்கிலும் உள்ள நிலைமை. தொழில்நுட்பத்துறையில் நமக்கு பல கிலோ மீட்டர்கள் முன்பாக நிற்கும் அமெரிக்காவிலேயே இணையத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. காரணம் டெலிபோன் ஆபரேட்டர் நிறுவனங்கள் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே தங்களது சேவையை வழங்குகின்றன. தூரத்தில் இருக்கும் மக்களுக்கு நகரத்தில் இருப்பவர்கள் போன்ற வசதிகள் கிடைப்பதில்லை.
இதனைக் கருத்தில் கொண்டே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. உலகம் முழுவதும் மிகக் குறைந்த செலவில் இணைய வசதியை அறிமுகப்படுத்துவது தான் அந்த திட்டம். இதனை ஸ்டார் லிங்க் ப்ராஜெக்ட் என்று அந்நிறுவனம் பெயரிட்டிருக்கிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் அதிகபட்ச இணைய வேகத்தினை அனுபவிக்க முடியும் பல பில்லியன் டாலர்களை வாரிச் சுருட்டி வாயில் போட்டுக்கொள்ளும் இந்த மெகா ப்ளானை தைரியமாக முன்னெடுத்திருக்கிறார் அந்த நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். இந்தத் திட்டப்படி பூமியின் சுற்றுவட்டப்பாதையில் தாழ்வான நிலையில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களை ஏவி அதன் மூலம் இணைய வசதியை ஏற்படுத்த முடியும்.

அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷனிடம் அதற்கான அனுமதியையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. ஆப்டிக் கேபிள் மூலம் இணைப்பு பெற சாத்தியமில்லாத தொலைதூர கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் எளிதாக இணைய சேவையை தொடங்கி விட முடியும் என fcc தலைவர் அஜித் பாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 4425 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளோம். இதன் மூலம் எதிர்கால இணைய உலகில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே நாளை திட்டத்தின் முதல் படியாக 60 செயற்கைக்கோள்களை தாழ்வான சுற்றுப்பாதையில் மிதக்கவிட்டு பிரம்மாண்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்க இருக்கிறது எலான் மஸ்கின் நிறுவனம்.

பெரும் நிதி தேவைப்படும் இந்த திட்டத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு உதவி செய்ய அமேசான், சாஃப்ட் பேங்க், குவால்காம், ஒன்வெப் போன்ற பெருநிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. ஆகவே இன்னும் மிகக்குறுகிய காலத்தில் தனது முழுத்திட்டத்தையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்தும் எனத் தெரிகிறது.