17 வது மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்ற பாரதிய ஜனதா கட்சி ஆதரவோடு இன்று மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்க இருக்கிறார். இதனையடுத்து நேற்று ட்விட்டர் தளத்தில் மோடிசர்க்கார்2 என்ற ஹெஷ்டாக்கை பிரபல்யப்படுத்தி வந்தனர். ஆனால் அப்போது புஜபல பராக்கிரமம் மிக்க காண்ட்ராக்டர் நேசமணி டிவிட்டருக்குள் வந்திருந்ததை யாரும் அறிந்து வைத்திருக்கவில்லை.

ஜமீன் வீட்டு பெயின்ட் காண்ட்ராக்டர் டிவிட்டரில் வைரலாக வெகுநேரம் எடுத்துக்கொள்ளவில்லை. மோடிசர்க்கார் ஹெஷ்டேக்கை கொஞ்ச நேரத்திலேயே #Pray_For_Nesamani, #Pray_for_Neasamani பிடித்துக்கொண்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளம் என எது இருந்தாலும் அதில் முழுவதும் நேசமணி குறித்த கவலையும் கண்ணீரும் தான். இன்னும் சிலர் தங்களுக்கு பெயருக்கு முன் காண்ட்ராக்டர் நேசமணி என்று சேர்த்துக் கொண்டார்கள்.

2001 ஆம் ஆண்டு வெளிவந்தது பிரண்ட்ஸ் திரைப்படம். விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்தாலும் வகைப்புயல் வடிவேலு தனியொரு மனிதனாக காமெடியில் அசரடித்திருப்பார். பில்டிங் காண்டாக்டராக இருந்தாலும் பெயின்ட் காண்டாக்டராக இருந்தாலும் தனது வேலையை சிறப்பாக செய்யும் திறமை படைத்தவர் இந்த நேசமணி இல்லை வடிவேலு. (இந்த ஃபுளோவ் போகவே மாட்டேங்குது)

அரசியல் தலையீடு, சினிமா துறையில் வாய்ப்புகள் குறைந்தது என வடிவேலு திரைத்துறையில் ஓரங்கட்டப்பட்டாலும் சமூக வலைதளங்களில் வடிவேலுவின் பெர்பாமன்சை யாராலும் தடுக்க முடிவதில்லை. தமிழகத்தில் உருவாக்கப்பட்டும் பெருவாரியான மீம்களில் வடிவேலுவின் படங்களில் இருந்துதான் மொத்த டெம்ப்ளேட்களும் எடுக்கப்படுகின்றன. நாம் தினந்தோறும் காமெடியாக பேசிக்கொள்வதிலேகூட வடிவேலுவின் சாயல் இருப்பதை உணரலாம். சும்மாவே மீம்ஸ் வரும். இப்போது நேசமணியின் தலையின் மீது வேறு சுத்தியல் விழுந்துவிட்டது. அவரது ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? பேஸ்புக், ட்விட்டர் என வடிவேலு நிரம்பி வழிகிறார். காண்ட்ராக்டர் நேசமணி குறித்த தகவலை உலகின் பல முன்னணி செய்தி நிறுவனங்களும் தங்களது இணையதளத்தில் எழுதிவருவதுதான் ஹைலைட்.

இன்று மோடியின் பதவியேற்பு விழாவிற்கு பல வெளிநாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் தமிழகம் மட்டும் காண்ட்ராக்டர் நேசமணிக்காக ட்வீட்டிக்கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக இது மோடிக்கான எதிர்ப்பலையை உருவாக்கும் செயலாக பார்க்கப்பட்டாலும் வடிவேலு என்னும் தனிமனிதன் தமிழக மக்களின் மனத்தில் எத்தனை ஆழமாய் நிறைந்திருக்கிறார் என்பதற்கான சான்றும் இதுதான்.