கடைசியில் கூகுளிடம் மல்லுக்கட்டும் “பீட்டா”

0
76
PETA
Credit: dailymail

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டைத் தடைசெய்யக் கோரி பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்த பீட்டா (PETA – People for the Ethical Treatment of Animals) அமைப்பு இம்முறை இணைய ஜாம்பவானான கூகுளிடம் தன் வேலையைக் காட்டியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தை மையமாகக்கொண்டு இயங்கும் இந்த விலங்குகள் நல அமைப்பு, உலகமெங்கிலும் உள்ள விலங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் தனியார் அமைப்பாகும். 1980 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இதன் தற்போதைய தலைவராக இருப்பவர் இங்க்ரிட் நியூகிர்க் ( Ingrid Newkirk). இவர்தான் தற்போது கூகுளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

PETA

கூகுள் டூடுல்

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாப்பாளர் ஸ்டீவ் இர்வின். சிறுவயது முதலே பாம்புகள் மற்றும் முதலைகளோடு விளையாடும் இயல்புடையவர். தன் காதல் மனைவி டெர்ரியுடன் இணைந்து அவர் தொகுத்து வழங்கிய குரோக்கடைல் ஹன்டர் என்னும் நிகழ்ச்சி உலகமெங்கிலும் பிரம்மாண்ட ஹிட் அடித்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும். முதலைகளைப் பிடிப்பது பற்றியும், உணவூட்டுவது பற்றியும் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்த இர்வினை முதலை மனிதன் என்று உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். இப்படி விலங்குகளோடு இயைந்த வாழ்க்கையை மேற்கொண்டவர் கடந்த 2006 ஆம் ஆண்டு கடல்வாழ் உயிரினம் பற்றிய ஆராய்ச்சியின் போது stringray barb எனப்படும் திருக்கை மீன் தாக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

irvinஇதனிடையே கடந்த வெள்ளியன்று இர்வினின் 57 வது பிறந்தநாள் நிகழ்வினை அவரது மனைவி வித்தியாசமான முறையில் கொண்டாட நினைத்தார். கூகுள் நிறுவனத்திற்கு இர்வினின் விலங்குகள் உலக பங்களிப்பை சுட்டிக்காட்டி, டூடுல் ஒன்றை வெளியிட முடியுமா? என மின்னஞ்சல் அனுப்ப, உடனடியாக அந்நிறுவனமும் டெர்ரியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. வெள்ளிக்கிழமையன்று இர்வினின் சாதனைகள் குறித்த அனிமேஷன் டூடுல் ஒன்றை டூடுல் வடிவமைத்து வெளியிட்டது. இதுகுறித்து நம் எழுத்தாணியிலும் நாம் பதிவிட்டிருந்தோம்.

பீட்டாவின் தாக்குதல்

கூகுளின் இந்த செயலைக் கண்டித்து பீட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி நியூகிர்க் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், முதலைகள் பாம்பு போன்ற உயிரினங்களைப் பிடிக்க இர்வினுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவர் இயற்கைக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார். வனவிலங்குகளை கூண்டிற்குள் அடைத்து, உணவூட்டுவது மற்றும் அதன்மூலம் நிகழ்ச்சிகளை எடுப்பது அனைத்தும் அவரது தனிப்பட்ட பொருளாதார காரணங்களுக்காக செய்யப்பட்டவை. இதன் அடிப்படையில் இர்வினை விலங்குகள் பாதுகாப்பாளர் என ஒப்புக்கொள்ளவே முடியாது.

steve-irvin
Credit: IBTimes UK

இப்படி ஒரு மனிதரை கூகுள் சிறப்பிப்பது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களுக்கு கூகுள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. மேலும் இதனைக் கண்டிக்க வேண்டும். எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இணைய ஜாம்பவானான கூகுளைத் தாக்கி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.