வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்களால் வாழ்க்கை உள்ளங்கைக்குள் சுருங்கியிருக்கிறது. 5 பேர் இருக்கும் வீட்டில் 6 ஸ்மார்ட் போன் இருக்கிறது. எல்லோரும் சமூக வலைத்தளங்களில் இணைந்திருக்கிறோம். வீட்டில் மகன் சாப்பிட்டானா? என்பதையே பெற்றோர்கள் வாட்சாப் மூலம் தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஏராளமான புகைப்படங்கள், தரவுகள் நமது போனில் சேகரிக்கப்பட்டு இருக்கின்றன. போன் தொலையும் பட்சத்தில் அதிலுள்ள தகவல்கள் திருட வாய்ப்பிருக்கிறது. “நாங்க தான் பாஸ்வேர்டு போட்ருக்கோமே” என்பது உங்களுடைய பதிலாக இருந்தால் நீங்கள் சரியான கட்டுரையைத் தான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
நமது போனைத் திருடாமல் நம் தகவல்களை திருட முடியுமா? நிச்சயம் முடியும். இதற்கு ஹேக்கிங் எல்லாம் தேவையில்லை. நீங்கள் எந்த அளவிற்கு சிந்திப்பீர்கள் என தெரிந்தாலே போதுமானது. எளிதாகச் சொன்னால் என்ன மாதிரியான பாஸ்வேர்டை நீங்கள் வைத்திருப்பீர்கள் எனத் தெரிந்துகொள்ளுதல்.
கடினமான பாஸ்வேர்ட்
இப்படி ஒரு ஆய்வே நடத்தப்பட்டிருக்கிறது. இங்கு அல்ல. பிரிட்டனில். பொதுமக்களின் போன் மற்றும் லேப்டாப்பை ஹேக் செய்து அவர்கள் என்ன பாஸ்வேர்ட் வைத்திருக்கிறார்கள் என பிரிட்டன் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் ஆராய்ந்திருக்கிறது. அதில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டாக இருப்பது 123456 தான். சுமார் 23 மில்லியன் மக்கள் இதை உபயோகிப்பதாக தெரியவந்திருக்கிறது. நீங்களும் இதையா வைத்திருக்கிறீகள்?
இரண்டாம் இடத்தில் இருப்பது கண்டுபிடிக்கவே கஷ்டமான 123456789 தான். அடுத்த மூன்று இடங்களில் “qwerty”, “password” மற்றும் “1111111” ஆகியவை இருக்கின்றன.
பொதுவாக இப்போது நாம் அனைவரும் நமது போனிலிருந்தே ஆன்லைன் மூலமாக பணம் செலுத்திவிடுகிறோம். வீட்டில் டீ, காபி வாங்கக்கூட ஸ்விக்கி, சொமாட்டோ தான். எல்லா கட்டணங்களையும் செலுத்துவதற்கு என டஜன் கணக்கில் செயலிகள் வந்துவிட்டன.
அப்படி இருக்க இம்மாதிரியான எளிமையான பாஸ்வேர்ட்கள் மூலம் நமது வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாப்பது மிகவும் சிரமம்.
எப்படி வைக்கலாம்?
பாஸ்வேர்ட் கடினமாகவும் இருக்கவேண்டும். அதே நேரத்தில் மறந்துபோகவும் கூடாது. அப்பர் கேஸ், லோவர் கேஸ், எண்கள், குறியீடுகள் ஆகியவற்றை பயன்படுத்துவது நல்லது. அதேநேரம் வெகுகாலத்திற்கு ஒரே பாஸ்வேர்டை வைத்திருப்பதும் தவறு. குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றம் செய்யவேண்டும்.

இந்தியாவில் பாஸ்வேர்ட்கள் பெரும்பாலும் உணர்வுபூர்வமாக வைக்கப்படுகின்றன. அப்பா அம்மாவின் பெயர், குடும்பப்பெயர் அல்லது பிடித்த கடவுளின் பெயர். இதில் இல்லாமல் மற்றொரு குரூப் இருக்கிறது. தங்களது முன்னாள் காதலிகள்/காதலர்களின் பெயர்களை வைப்பது. இவையெல்லாம் தம் கையாலேயே ஆப்பு வைத்துக்கொள்ளும் செயல். தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ந்திருகிறதோ அதே அளவிற்கு திருடர்களும் வளர்ந்திருக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு அடுத்தமுறை பாஸ்வேர்டை வையுங்கள்.