இன்டர்நெட் இல்லையேல் ஓரணுவும் அசையாது என்றாகிவிட்ட இந்தக்காலத்தில் எத்தியோப்பிய மக்கள் டிஜிட்டல் பஞ்சத்தில் இருக்கிறார்கள். கடந்த வார செவ்வாய்க்கிழமை அன்று தடை செய்யப்பட்ட இணையம். இன்றுவரை கிடைக்கவில்லை. அவ்வப்போது தலைகாட்டுவதொடு டவர் சிக்னலும் படுத்துவிடுகிறது. இதனால் அசாதாரண சூழ்நிலை எத்தியோப்பியாவில் உருவாகியிருக்கிறது. அரசுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

விடுதிகளை ஆன்லைன் மூலம் புக் செய்யமுடியாமல் சுற்றுலாப்பயணிகள் தவிக்கின்றனர். இணையவசதி இல்லாததன் காரணமாக தேர்வுகளை நடத்த முடியாமல் கல்லூரிகள் அரசுக்கு கோரிக்கை கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கின்றன. எத்தியோப்பியாவில் இருக்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமான Ethio Telecom இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வழங்கவில்லை. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருவாரகாலத்திற்கும் மேலாக சேவையை இந்நிறுவனம் நிறுத்திவிட்டது. அரசாங்கத்திடம் இந்தப் பிரச்சினை குறித்து எந்த எதிர்வினையும் இல்லை.

எத்தியோப்பியாவைப் பொறுத்தவரை டெலிகிராம் செயலிதான் பிரபலம். அதன்பின்னர் தான் வாட்சாப். தனிப்பட்ட தகவல் பரிமாற்றம் கூட முற்றிலும் தடைபட்டிருக்கிறது. இது மக்களின் கோபத்தை அதிகரிக்கச்செய்திருக்கிறது. இணையம் இல்லாததால் ஒரு நாளைக்கு சராசரியாக 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான இழப்பு ஏற்படுகிறது.
இதற்கு முன்னர்…
2005 ஆம் ஆண்டு எத்தியோப்பிய தேர்தல் முடிந்த சில நாட்களில் ஒட்டுமொத்த நாட்டிலும் மெசேஜ் அனுப்ப தடை விதிக்கப்பட்டது. அதேபோல் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக போராடிய சில கிளர்ச்சிக்குழுக்களின் ஆதிக்கம் இணையத்தில் அதிகமாகவே எத்தியோப்பிய அரசு உடனடியாக அதற்கு தடை விதித்தது. கல்லூரி வினாத்தாள்களை இணையத்தில் பரப்பியதாக பலரின் மீதும் வழக்குகள் போடப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த தேர்தலில் வென்று எத்தியோப்பியாவின் அதிபராக பதவியேற்றுக்கொண்டார் அபி அகமது (Abiy Ahmed). ஆட்சியை அகமது பிடித்ததற்குப் பின்னர் முந்தைய அரசால் தடை செய்யப்படிருந்த பல இணையதளங்களின் தடைகளை நீக்கினார். மேலும் சிறையில் இருந்த பல போராட்டக்காரர்களை விடுதலை செய்தார். கருத்து சுதந்திரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இயங்கிய அதே அகமதின் அரசாங்கம் இப்போது மீண்டும் இணையத்தின் மீதான தடையைக் கொண்டுவந்துள்ளது.