தன்பாலின ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர் கடந்துவந்த பாதை மிகக் கடினமானது. இன்றும் LGBT சார்ந்த மக்களை ஏற்றுக்கொள்வதில் பல மனிதர்கள் தயக்கம் காட்டுகின்றனர். பல அரசுகள் இப்போதுதான் அவர்களும் மகிழ்ச்சியாக வாழ நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த உரிமையை அடைவதற்கான முழக்கத்தை, சுதந்திர மற்றும் சம உரிமை வேண்டி நியூயார்க் நகரத்தில் 50 வருடங்களுக்கு முன்பாக நடந்த முதல் LGBTQI+ அமைப்பின் பேரணி நடந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. இதனை நினைவுபடுத்தும் விதமாகவே கூகுள் இன்று புதிய டூடுல் ஒன்றினை வடிவமைத்துள்ளது.

நியூயார்க் நகரின் கிறிஸ்டோபர் வீதியில் பிரம்மாண்ட பேரணி நடந்ததும் இதே ஜூன் மாதத்தில் தான். இதனாலேயே LGBTQI+ மக்கள் ஜூன் மாதத்தை பெருமைக்குரிய மாதமாக பார்க்கின்றனர். கூகுளின் இந்த டூடுல் கடந்த ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் LGBTQI+ மக்கள் எப்படியான கடும் பாதையில் பயணித்திருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் பெருமைக்குரிய கொடியை வடிவமைத்த நேட் ஸ்வைன்ஹெர்ட் (Nate Swinehart) தான் இந்த டூடுளையும் வடிவமைத்திருக்கிறார்.

கூகுளில் டூடுல் தயாரிப்பாளராக சேர்வதற்கு முன்பிருந்தே நேட் ஸ்வைன்ஹெர்ட் LGBTQI+ மக்களின் வரலாற்றை மிகத்துல்லியமாக சேகரித்திருக்கிறார். அவைதான் ஒன்று கூகுளின் மூலம் வெளியுலகத்திற்கு வந்திருக்கின்றன. இதுகுறித்து நேட் தனது வலைதளத்தில்,” LGBTQI+ மக்களின் வாழ்க்கை பற்றிய கருத்துருவாகத்தில் வண்ணங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. ஆரம்பகாலகட்டத்தில் நடைபெற்ற போராட்டங்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றை வெவ்வேறு வண்ணங்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறோம். மேலும் மனிதர்களிடத்தில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கவும் நாங்கள் பாடுபட்டிருக்கிறோம். பல தடைகளை தாண்டி இன்று பொதுவெளியில் சமஉரிமையைப் பெற்றிருக்கும் அந்த மக்களின் மகிழ்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் நாங்களும் காரணமாக இருக்கவேண்டும் என நினைத்தோம் அதன் விளைவு தான் இந்த டூடுல்” என்றார்.