பிரபல சமூக வலைதள ஜாம்பவானான ஃபேஸ்புக் இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச பணப்பரிமாற்றத்துறையில் கால்பதிக்க இருக்கிறது. இந்த வர்த்தகத்தில் லிப்ரா என்னும் கிரிப்டோகரன்சியை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த டிஜிட்டல் பணத்தை பயன்படுத்த கலிப்ரா எனப்படும் வாலெட்டையும் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த இருக்கிறது. இது உலக அளவில் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருசேர கிளப்பியுள்ளது.

கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்ஸி என்பவை முழுவதும் இணையத்தில் மட்டுமே புழங்கக்கூடிய பணமாகும். அதாவது உங்களுக்கென்று ஒரு வாலெட் இருக்கும். அதில் இந்த கிரிப்டோ கரன்ஸியை சேமித்து வைத்துக்கொள்ளலாம். நீங்கள் ஒரு பொருளை வாங்க விரும்பினால் உங்களுடைய விற்பனையாளர் கிரிப்டோ கரன்ஸியை வாங்கும் பட்சத்தில் நீங்கள் அதைக்கொடுத்து பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இதனைக் கண்காணிக்க முடியாது அதனால் வருமானவரி கட்டவேண்டாம் என்பதால் மக்களிடையே இந்த கிரிப்டோ கரன்சிக்களின் மீதான மோகம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

நமக்கு நன்றாக தெரிந்த கி.கரன்ஸி பிட் காயின் தான். அவை புழக்கத்திற்கு வந்தபோது அதன்விலை ஒரு டாலருக்கும் கீழே இருந்தது. இன்று ஒரு பிட் காயின் வாங்கவேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் டாலர்களை செலவழிக்க வேண்டியிருக்கும். பிட் காயின் மட்டுமன்றி இன்றைய சந்தையில் ஏராளமான கிரிப்டோ கரன்சிக்கள் வந்துவிட்டன. இவை அனைத்துமே பிரபல்யம் அல்ல. எது அதிக அளவில் மக்களை பயன்பாட்டைக் கொண்டுள்ளதோ அவையே வணிக ரீதியிலும் சக்சஸ் ஆகியிருக்கிறது. அதனால் தான் ஃபேஸ்புக் இந்த துறையில் கால்பதித்திருக்கிறது.
லிப்ரா
பேஸ்புக் இந்த லிப்ரா கரன்ஸியை நிர்வகிக்க 28 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதில் பேஸ்புக்கின் தலையீடு அதிகமிருக்காது எனவும், பயனாளர்களின் அனுமதியில்லாமல் தகவல்கள் இதற்காக கையாளப்படமாட்டாது எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. லிப்ராவை அனுப்பவோ சேமித்து வைத்துக்கொள்ளவோ கலிப்ரா பயன்படுத்தப்படும். இது வாட்சாப் மற்றும் மெசஞ்சரோடு இணைக்கப்பட உள்ளது.

பேஸ்புக்கின் இந்த புதிய திட்டம் மூலம் வங்கிக்கணக்கு இல்லாதோர் கூட பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இதற்கான கட்டணம் மற்ற நிறுவனங்களைக்காட்டிலும் மிகவும் குறைவாகவே இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பணப்பரிமாற்றத்தின் போது வாடிக்கையாளர்கள் இழக்கும் பணத்தை அந்த நிறுவனமே திரும்ப அளிப்பதாகவும் உத்திரவாதம் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு பேஸ்புக் இந்த செயலியை சந்தைப்படுத்தும் என அறிவித்துள்ளது.
எதிர்ப்பு
டிஜிட்டல் கரன்ஸியை தனியார் அறிமுகம் செய்தால் இது பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. பிரெஞ்சு நிதி அமைச்சர் ப்ருனோ லீ மேர், “இதுபோன்ற நாணயங்களை அரசுதான் வெளியிட முடியும். லிப்ரா வாடிக்கையாளர்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாமலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்காமலும் இருக்குமென ஃபேஸ்புக் உறுதியளிக்க வேண்டும்” என்றார். மேலும், நிதி தீவிரவாதத்துக்கு ‘லிப்ரா’ வழிவகை செய்யக்கூடாது என்றும் சர்வதேச அளவில் எதிர்க்குரல்கள் எழுந்து வருகின்றன.