ஆன்லைன் மோசடிகள் உலகம் முழுவதும் பல்வேறு விதமாக நடைபெற்று வருகின்றன. காலவிரயத்தினைத் தடுக்க இணையவழி வங்கிச் சேவை, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் முதலுக்கே மோசம் போன கதையாய், இப்பொழுது இவற்றிலும் திருடர்கள் தங்களது வேலையை காட்டுகிறார்கள். ஒவ்வொரு நாட்டு அரசும் இதனைத் தடுக்க முயன்று வருகின்றன. ஆனாலும் இப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
தொடரும் திருட்டுகள்
கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் ATM கார்டு மூலமாக நடந்த நூதனத் திருட்டினால் 20 லட்சம் பணம் பறிபோனது. இதனால் 75 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் புனேவை மையமாக வைத்து இயங்கும் காஸ்மாஸ் வங்கியில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இணைய வழித் திருட்டின் காரணமாக சுமார் 96 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனிடையே Comparitech என்னும் நிறுவனம் உலக அளவில் ஆன்லைன் மோசடிகள்/தகவல் திருட்டு அதிகம் நடக்கும் 60 நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. மொபைல் போன்களில் உள்ள ஆபத்தான இயங்குதளம், கணினியில் இருக்கும் ஆபத்தான மென்பொருள், இதுவரை நடத்தப்பட்ட ஆன்லைன் மோசடிகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்தப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இணையவழி பயன்பாட்டில் அதிக தாக்குதலை சந்திக்கும் நாடாக அல்ஜீரியா (Algeria) முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவிற்கு 15 ஆம் கிடைத்திருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் 22% மக்கள் பாதுகாப்பற்ற முறையில் இணையதளத்தினை பயன்படுத்தி வருகிறார்கள். 2017 ஆம் ஆண்டில் இந்தியா இதே பட்டியலில் 11 வது இடத்தைப் பிடித்திருந்தது. அரசின் சார்பில் இலவச free anti-malware tools தரப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில் இன்று வரை அதுகுறித்த எவ்வித முன்னேற்றமும் இல்லை. அதோடு மக்களிடையே இதற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
அலைபேசி வாயிலாக நடைபெறும் திருட்டுக்களே இந்தியாவில் அதிகம் என்கிறார் இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளரான Bischoff. இணையம் ஏராளமான வசதிகளை நமக்குத் தருகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் பாதுகாப்பான முறைகளை உபயோகிக்கவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும்.