வாட்ஸ் அப்பில் வதந்தி பரவுவதைத் தடுக்கப் புதிய முயற்சி

0
50
whatsapp

இன்றைய சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்பும் சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ் அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், சமீப காலமாகவே வாட்ஸ் அப் வழியாகப் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் வதந்திகளால், குழந்தையைக் கடத்துபவர்கள் என்று எண்ணி சில அப்பாவிகள் பொதுமக்களால் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தது. அதன் அடிப்படையில், தவறான தகவல் அதிகப்படியாகப் பரவாமல் இருக்க, ஒருவர் ஒரு நேரத்தில்  ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்தது.

மேலும், வாட்ஸ் அப் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு முடிந்த உடன் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது,

வாட்ஸ் அப்பில் வதந்தி மற்றும் தவறான செய்திகளைப் பரப்புவோர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தின் துணைத் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இது தொடர்பாக அவர் தொழில்நுட்பக் குழுவுடன் ஆலோசித்து பின் பதில் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தவறான தகவல்களைப் பரப்புவோரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் குறித்த அனைத்துத் தகவலையும் மத்திய அரசுக்குத் தெரிவிக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதற்கு முன்னரே அரசு, வாட்ஸ் அப் பயனர்களின் தகவல்கள் மற்றும் அனுப்பும் குறுஞ்செய்திகளைக் கண்காணிக்க வேண்டும் என்று அந்நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது. அப்போது பயனர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படுவது மிக முக்கியம், அதனால் அத்தகைய தகவல்களைப் பகிர முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் மறுத்து விட்டது குறிப்பிடத் தக்கது.