உரிமக் கட்டணம் வசூலிக்க இருக்கிறதா கூகுள்?

0
70

கைபேசிச் சந்தையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஆண்ட்ராய்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே, ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்படும் நாடுகளில் எல்லாம் ஒழுங்குமுறை ஆணையங்கள் அதனைத் தொடர் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளை செய்து வருகின்றன.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி, கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கருவிக்கும் 40 டாலர் கட்டணம் விதிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

ஐரோப்பிய யூனியனின் அபராதம்

ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்திற்கு விதித்துள்ள அபராதத்தின் காரணமாகவே தற்போது கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமக் கட்டணம் வசூலிக்கவுள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள சில கூகுள் செயலிகளும் இந்த கட்டணத்தில் அடக்கம்.

எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், கிடைத்துள்ள தகவலின் படி ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கருவிக்கும் அதிகபட்சமாக 40 டாலர் உரிமக் கட்டணமாக (Licensing Fee) வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஆண்ட்ராய்டு சந்தையில் முன்ணணியில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் வலுகட்டாயமாக கூகுள் சர்ச் (Google Search) மற்றும் குரோம் (Chrome) செயலிகளைத் திணித்ததாக ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்திற்குக் கடந்த ஜூலை மாதம் அபராதம் விதித்தது. இந்த இரு செயலிகளைத் திணித்ததற்குக் கைமாறாக, அந்நிறுவனங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள உரிமம் வழங்கியது.

உரிமக் கட்டணம்

இது ஆரோக்கியமான போட்டிக்கு எதிராக இருப்பதாகக் கருதிய ஐரோப்பிய ஆணையம், அபராதம் விதித்துள்ளது. இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையிலும், ஐரோப்பிய ஆணையத்தின் விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில் தனது உரிம விதிகளில் திருத்தங்கள் செய்ய முடிவெடுத்துள்ளது. இங்கு தான் உரிமம் தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது. ஏனெனில், ஆண்ட்ராய்டு இயங்குதளம் மட்டும் என வைத்துக்கொண்டால், அதில் எந்தவொரு கூகுள் செயலிகளும் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்படாமல் முழுவதும் ஓபன் சோர்ஸாக மற்றும் இலவசமாக கிடைப்பது. ஆனால், இதைப் பயனர்கள் பயன்படுத்தும் வகையில் கொடுக்க வேண்டும் எனில், சில செயலிகள் மற்றும் சேவைகளைச் சேர்க்க வேண்டும். ஆயினும், இந்தச் செயலிகள் ஓபன் சோர்ஸாகவோ அல்லது இலவசமாகவோ கிடைப்பதில்லை என்பதால், அவற்றிற்கு உரிமம் வாங்குவது இன்றியமையாதது.

எனவே சமீபத்திய ஒப்பந்தப்படி, பின்வரும் நிபந்தனைகள்  விதிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரும், தங்களது கைபேசியில் ஏதேனும் ஒரு கூகுள் செயலியைச் (எ.கா சர்ச் இன்ஜின்) சேர்க்க விரும்பினால், குரோம்,மேப்ஸ் உள்ளிட்ட மற்ற அனைத்து கூகுள் செயலிகளையும் இணைக்க வேண்டும். இதற்குக்  கைமாறாக, உரிமக் கட்டணமாக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கூகுள் செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது இந்த விதிகளைப் பின்பற்ற விரும்பவில்லை எனில், உரிமத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட சில கூகுள் செயலிகளை இன்ஸ்டால் செய்வதைத் தவிர்த்து, சர்ச் என்ஜின் மற்றும் குரோம் செயலிகளை மட்டும் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்ய ஒப்புக்கொண்டால், உரிமக் கட்டணங்களைத் தவிர்க்க முடியும்.