சர்வதேச அளவில் இணையதளச் சேவைகள் வழங்கி வரும் முக்கிய சர்வர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு முக்கியப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதால், உலகம் முழுவதும் ஆங்காங்கே இணையதளச் சேவை துண்டிப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்ய அரசு, சர்வதேச இணையதளப் பயனர்களின் நெட்வொர்க்குகள் இணையதளச் சேவை துண்டிப்புப் பாதிப்பில் சிக்க வாய்ப்புள்ளது என்றும், ஆனால் இது சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களுக்கு மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

இணையதளச் சேவைக்கு முக்கியமாகத் தேவைப்படும் Domain Name System எனப்படும் DNS அல்லது முகவரிப் புத்தகத்தில் கூடுதலாகப் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்து சைபர் வலைத்தள மோசடி நடவடிக்கைகளைக் குறைப்பதற்காக, இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாகவும், இதனால் சர்வதேச அளவில் இணையதளச் சேவை பாதிப்பு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
இணையதளச் சேவை வழங்குநர்கள்
எந்த இணையதளச் சேவை வழங்குநர்கள் எல்லாம் இன்னும் இந்தப் பராமரிப்பு பணிகளுக்காகத் தயாராகாமல் உள்ளார்களோ அவர்களது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் இந்த இணையதளச் சேவை துண்டிப்பினால் பாதிப்பு இருக்குமாம்.

இந்தப் பராமரிப்பு பணிகளின் போது சில இணையதளங்கள் அல்லது பரிவர்த்தனைகள் போன்றவற்றை 48 மணி நேரங்களுக்குச் செய்ய முடியாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும், புதுப்பிக்கப்படாத ISP வைத்துள்ள பயனர்கள் சர்வதேச அளவில் இந்த இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
கிரிப்டோகிராபிக் கீ (cryptographic key) என்ற வசதி தான் நாம் இணையத்தில் பாதுகாப்பாக உலவவும், மக்களின் இணையப் பக்கங்களையும், அதன் பெயர்களையும் பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த கிரிப்டோகிராபிக் கீ-யில்தான் தற்போது பராமரிப்புப் பணிகள் செய்ய இருக்கிறார்கள்.
இதனால் பெரும்பாலும் இணையம் மெதுவாக சுற்றிக் கொண்டே இருக்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால், மொத்தமாக இணையம் வேலை செய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது. இணையத்தை ஒவ்வொரு பகுதிகளிலும் வழங்கும் ”இண்டர்நெட் சர்விஸ் புரொவைடர்கள் (Internet Service Provider) ” தயாராக இருந்தால் சிக்கலைச் சமாளிக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.