பல தொழில்நுட்பங்களுடன் வானத்தில் பறக்கும் விமானம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். அவற்றில் ஒன்று தான் விமானத்தின் மீது பறவைகள் மோதுவது. மேலும் இது அடிக்கடி நடக்கக் கூடியது. விமானப் போக்குவரத்து அதிகமாகும் அதே சமயம், இதுபோன்ற மோதல்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது பறவைகள் மட்டும் அல்ல விமானமும் பயணிகளும் தான்.
இதனால் விமானத்திற்கு 65% வரை சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எங்கு நடக்கின்றன?
பொதுவாக விமானங்கள் 5000 மீட்டருக்குக் குறைவான உயரத்தில் செல்லும் போது தான் இத்தகைய மோதல்கள் நடக்கின்றன. அதாவது விமானங்கள் மேல் எழும் போதும், தரை இறங்கும் போதும் தான் இந்தப் பிரச்சினை அதிகமாக ஏற்படுகிறது. அதற்காக அதிக உயரத்தில் பறக்கும் போது நடக்காது என்றில்லை. அப்படி நடப்பது கொஞ்சம் குறைவு தான். என்னதான் விமானங்கள் தரையிறங்கும் போது பிரத்யேக ஒலிகளை எழுப்பி அதிக விளக்குகளை எரிய விட்டாலும் சில சமயம் பறவைகள் மோதிவிடுகின்றன. இதனால் விமானத்திற்கு 65% வரை சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதிலும் சில சமயம் மோதல்கள் பைலட்டுக்குக் கூட தெரியாமல் போவதும் உண்டு.
விமான பறவை மோதல் பாதிப்புகள்
சரி. இதனால் விமானத்திற்குப் பெரிய பாதிப்பு நடக்குமா என்கிறீர்களா? எடை சிறியதாக இருந்தாலும் பறவைகள் அதிவேகத்தில் மோதும் போது அதுவே அபாயகரமானதாக மாறிவிடுகிறது. பறவைகள் கூட்டமாக வந்து மோதினால் விமானம் இன்னும் சற்று அதிகமாகவே பாதிக்கப்படும். விமானங்களின் ஓரப் பகுதிகளும் இறக்கை ஓரப் பகுதிகளும் சேதமடைய அதிக வாய்ப்பு உள்ளதாம். பறவைகள் விமானத்தின் உலோகப் பகுதிகளில் அதிவேகத்தில் மோதும் போது அப்பகுதிகளில் பள்ளம் ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இது போன்ற நேரங்களில் அலாரம் அடிப்பதால் பயணிகளும் பீதியடைகின்றனர்.

பறவைகள் விமானங்களின் முன்பக்கக் கண்ணாடியில் மோதும் போது கண்ணாடியில் விரிசல்கள் ஏற்படலாம். இதனால் விமானத்தின் காற்றழுத்தம் நிச்சயம் பாதிக்கப்படும். இப்போது விமானத்தின் உயரத்தைத் தக்க வைக்கும் திறன் பாதிக்கப்படுவதால் விமானத்தின் உயரம் குறைய அதிக வாய்ப்புள்ளது.
சில சமயங்களில் பறவைகள் விமானத்தின் என்ஜின் இறக்கைகளில் மாட்டி சிக்கிக்கொள்கின்றன. இதனால் என்ஜின் செயலிழக்கவும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக விமானத்திற்கு இரண்டு என்ஜின்கள் இருக்கும். விமானம் பறக்க ஒரு என்ஜின் போதும். சில அவசரகால தேவைகளுக்காக இன்னொரு என்ஜினும் இருக்கும். பறவைகளின் மோதல்களை தாங்கும் வகையில் என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், இரண்டு என்ஜின்களிலும் பறவைகள் சிக்கும் வாய்ப்பு குறைவு என்றாலும் இரண்டு என்ஜின்களும் பாதிக்கப்பட்டு அவசரமாக தரை இறக்கிய சம்பவங்களும் நடந்துள்ளது என்பதே உண்மை.
இந்தப் பிரச்சினையில் உள்ள ஒரே ஒரு ஆறுதலான விஷயம் மோதல்கள் குறைந்த தூரத்தில் நடப்பதால் உடனே தரை இறக்க முடிகிறது. எனினும் பயணிகள் மிகுந்த அச்சமும், வேறு விமானத்திற்கு மாற்றப்படுவதால் மிகுந்த சிரமமும் அடைகின்றனர்.
எடுக்கப்படும் நடவடிக்கைகள்
சில பறவைகளால் மண்ணில் உள்ள இரையை சிறு அசைவுகள் மூலம் கூடக் கண்டுபிடிக்க முடிந்தாலும் அதிவேக விமானங்களை எளிதில் உணர முடிவதில்லை. இதனால் பறவைகள் விமானங்களின் ஓடுபாதையில் வராமல் இருக்கப் பல வழிமுறைகளை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் கையாளுகின்றனர்.
- பறவைகளை அச்சுறுத்த வெடிகள், பீரங்கிகளால் சுடுவது போன்றவற்றை செய்கிறார்கள். ஆனால் சில பழக்கப்பட்ட பறவைகள் அவற்றால் ஆபத்து இல்லை என அறிந்து, தொடர்ந்து வருகின்றனவாம்.
- ஏர்போர்ட்டின் அருகில் உள்ள இடங்களில் புல்வெளிகளை அகற்றி, கற்களை நிரப்பி பறவைகள் வசிக்க விரும்பாதவாறு மாற்றுகிறார்கள். மேலும் பறவைகளைப் பயப்படுத்த விலங்குகளையும் உபயோகிக்கிறார்கள்.
- சில இடங்களில் பறவைக் கூட்டங்களைக் கலைக்க லேசர் விளக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் குறிப்பிட்ட அலைநீளத்தால் அதிக தூரத்திற்கு பயன்படுத்த முடியாமல் போகிறது.

- இரு கண்கள் பார்ப்பது போன்ற காட்சியை கொண்ட LED திரையை விமான ஓடுதளங்களில் வேட்டைப் பறவைகளை விரட்ட நிறுவுகிறார்கள். அதாவது கார்ட்டூன் கண்கள் ஒரு LED திரையில் காட்டப்படும். அது சீராக அளவில் பெரிதாகும். இது பறவைகளை அங்கு வராமல் செய்கின்றது. மற்ற வழிகளை விட இது பறவைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளது என்கிறது அதனை ஆய்வு செய்த ஒரு குழு. ஆனாலும் சில பறவைகள் இதனையும் கண்டு கொள்வதில்லையாம்.
- பருந்து, கழுகு, ஆந்தை போன்ற அதிக இடத்தில் இரையை தேடும் பறவைகளுக்கென்று நிபுணர் குழுவை அமைக்கின்றனர். அவர்கள் மூலம் பறவைகளைத் திசைதிருப்புகின்றனர்.
- மிகப் பெரிய ஏர்போர்ட்களில் அதிநவீன ரேடார் அமைப்பைப் பயன்படுத்துகின்றனர். அந்த அமைப்பு தடங்கல்களின் இடம், அளவு, இயக்கம் என நேரிடையாக தெரிவிப்பதால் கட்டுப்பாட்டுக் கருவிகள் அவை உள்ள இடத்தில் உள்ள பீரங்கிகளை வெடிக்க வைத்து அதன் மூலம் விரட்டுகின்றன. மேலும் இதன் மூலம் அதிகாரிகளும் உடனே உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
- விமானத்தின் பாதையில் மட்டும் பறவைகளின் பிரச்சனை இல்லை. விமானத்தை நிறுத்தி வைக்கும் இடத்திலும் பறவைகளால் பிரச்சனை உள்ளது. ஏனெனில் பறவைகள் விமானத்தின் மேற்புறத்தில் வசிக்க ஆரம்பிக்கின்றன. இதனால் அதன் அதிக அமிலம் நிறைந்த கழிவுகள் விமானத்தில் படும் போது விமானத்தின் வெளிப்புறத்தை அரிக்கிறது. இதைத் தவிர்க்க ஆந்தை போன்ற உருவங்களை வைக்கிறார்கள். மேலும் பறவைகள் வெறுக்கும் சில நறுமணங்களை இயந்திரங்கள் மூலமாக பரப்புகிறார்கள்.
இவ்வளவு வழிமுறைகளை கையாண்டாலும் விமானங்களையும் பறவைகளையும் பாதிக்கும் இந்த மோதல்களை முற்றிலுமாகத் தடுக்க முடிவதில்லை என்பதே கசப்பான உண்மை.