‘TRP க்காக இப்படி பண்ணிட்டாங்க.. அப்படி பண்ணிட்டாங்க’ என்று அவ்வப்போது சிலர் பேசுவதை நாம் கேட்டிருப்போம். பல தொலைக்காட்சி அலைவரிசைகள் (TV Channels) மீதும் அவ்வப்போது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு இதுவாகத்தான் இருக்கும். வாருங்கள் TRP rating என்றால் என்ன இன்று இப்போது காண்போம்.
TRP Rating என்றால் என்ன?
TRP – Target Rating Point Rating, தமிழில் ‘இலக்கு அளவீட்டுப் புள்ளி’ என்பது பார்வையாளர்களால் ஒரு தொலைக்காட்சி பெறும் அளவீட்டின் புள்ளிகள் ஆகும். அதாவது ஒரு தொலைக்காட்சி சேனலை எத்தனை பார்வையாளர்கள், எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டளவாகும்.
குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒரு நிகழ்ச்சி அல்லது தொடர் ஒளிபரப்பாகிறது என்றால் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சி அல்லது தொடரை பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை தான் அந்த தொலைக்காட்சி சேனலின் TRP என கணக்கிடப்படுகிறது.
சுருக்கமாக சொன்னால் டி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.
இந்தியா பின்பற்றும் TRP முறை
குறிப்பிட்ட டிவி சேனலை எவ்வளவு மக்கள், எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் என்பதை வைத்து BARC (Broadcast Audience Research Council India) ஒரு மதிப்பீடு (Rating) வழங்கும். பார்வையாளர்கள் பார்க்கும் நேரமானது ஒரு மணி நேரம், ஒரு நாள் அல்லது ஒரு வாரமாகக் கூட இருக்கலாம். சர்வதேச நிர்ணயத்தின் படி இந்தியா 1 நிமிடத்தை கால அளவாக பின்பற்றுகிறது. இந்த தரவுகள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் பகிரப்படுகிறது.

TRP ரேட்டிங் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
நாம் மேலே கண்ட BARC எனும் அமைப்பு 45,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் “BAR-O-மீட்டர்களை” நிறுவியுள்ளது. BARC அமைப்பு அந்த மீட்டரை குறிப்பிட்ட சில வீடுகளின் இணைப்பில் பொருத்திவிடும். அவ்வாறு பொருத்தப்பட்ட 45 ஆயிரம் குடும்பங்கள் எந்த சேனலை, எந்த நிகழ்ச்சியை பார்க்கிறது என்பது தான் மொத்த நாட்டின் பிரதிபலிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த வீட்டில் அது பொருத்தப்பட்டுள்ளது என்பது ரகசியம். ஏனெனில் இந்த சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும் வீடுகளை ஒளிபரப்பாளர்கள் கண்டறிந்தால், லஞ்சம் கொடுத்து அவர்களின் சேனல்களை பார்க்க வைக்கலாம்.
TRP ஏற்படுத்தும் தாக்கங்கள்
பார்வையாளர்களின் அளவீட்டுத் தரவின் அடிப்படையில், தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மதிப்பீடுகள் (Rating) வழங்கப்படுகின்றன. தொலைக்காட்சி மதிப்பீடுகள் பார்வையாளர்களுக்காக தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. சிறந்த மதிப்பீடு ஒரு நிகழ்ச்சியை ஊக்குவிக்கவும், மோசமான மதிப்பீடுகள் ஒரு நிகழ்ச்சியை ஊக்குவிக்காமலும் செய்யும். தவறான மதிப்பீடுகள் நிறைய டி.வி. நிகழ்ச்சிகளை உருவாக்க வழிவகுக்கும்.
தொலைக்காட்சி மதிப்பீடு?
மதிப்பீட்டிற்கு BARC இரண்டு நிலைகளில் செயல்படுகிறது.
- வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகள் அளவிலான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக, தொலைக்காட்சியின் இணைப்பில் ஒரு சிறப்பு வகை மீட்டர் வைக்கப்படுகிறது. இது வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் பார்க்கப்படும் சேனலைக் கண்காணிக்கும்.
- உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகளில் மக்கள் அதிகம் பார்க்க விரும்புவதை அறிய, அங்குள்ள டிவிகளில் எந்த சேனல்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகள் அதிகம் ஒளிபரப்பப்படுகின்றன என்ற விவரங்களையும் கண்காணிக்கும்.
தற்போது, 45,000 வீடுகளில் இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகளுக்கான மொத்த மாதிரி அளவு 1050 ஆகும். சேகரிக்கப்பட்ட தரவுகள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் வெளியிடப்படும்.
BARC India – வின் இந்த இணையதளத்துக்கு சென்று நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.
TRP மோசடி எப்படி செய்யப்படுகிறது?
இந்த மீட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும் வீடுகளை ஒளிபரப்பாளர்கள் கண்டறிந்தால் நிச்சயம் மோசடி நடக்க வழிவகுக்கும். மோசடி செய்ய ஒளிபரப்பாளர்கள் இந்த வீடுகளை குறிவைக்க முடியும். TRP ரேட்டிங்கில் இரண்டு வகை மோசடிகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.
- ஒரு தொலைக்காட்சி சேனல் தங்களது சேனல்களை பார்க்க கூறி பார்வையாளர் வீடுகளுக்கு லஞ்சம் தர முற்படலாம்.
- கேபிள் ஆப்பரேட்டர்களிடம் கூறி, தொலைக்காட்சியை ஆன் செய்ததும் முதலில் தங்களது சேனல்கள் வருவது போன்று செய்யலாம்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த 45 ஆயிரம் குடும்பங்கள் என்ன பார்க்கிறது என்பது தான் மொத்த நாட்டின் பிரதிபலிப்பாகவும்அறியப்படும் என்பது தான்.
TRP Rating மற்றும் விளம்பரங்கள்
நிறுவனங்கள் மற்றும் விளம்பர ஏஜென்சி நிறுவனங்கள், TRP மதிப்பீட்டைப் பயன்படுத்தி அவர்களின் விளம்பரங்கள் எந்த நிகழ்ச்சியின்போது அதிகமாக ஒளிபரப்ப வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர். இதன் மூலம், எந்த நிகழ்ச்சி அல்லது எந்த தொலைக்காட்சி சேனல், டிஆர்பி மதிப்பீடுகளில் முன்னணியில் இருக்கிறதோ, அதற்கு அதிக விளம்பரங்கள் கிடைக்கும். அதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் நல்ல TRP Rating வைத்துள்ளது தான்.
விளம்பரங்கள் ஏன் முக்கியம்?
இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கிறார்கள், இதில் 19.5 மில்லியனுக்கும் அதிகமான தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன. இவ்வளவு பெரிய சந்தையில் வர்த்தக பொருட்கள் மக்களை சென்றடைய விளம்பரங்கள் மிக முக்கியம்.

எந்த நிகழ்ச்சி அல்லது எந்த தொலைக்காட்சி சேனல், டிஆர்பி மதிப்பீடுகளில் முன்னணியில் இருக்கிறதோ, அதற்கு அதிக விளம்பரங்கள் கிடைக்கும். எனவேதான் இந்த டிஆர்பி ரேட்டிங் பட்டியலில் முன்னணியில் இருப்பது தொலைக்காட்சி சேனல்களின் எதிர்காலத்தையும் நிதி ஆதாரத்தையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.