சென்னையின் மொத்த வரைபடமே மெட்ரோ என்னும் திட்டத்தினால் மாறிப்போயிருக்கிறது. பத்து ஆண்டுகள் நீடித்த பெரும்பணி முடிவிற்கு வந்திருக்கிறது. சென்னையின் எதிர்கால போக்குவரத்துத் தேவைகளை மையமாகக்கொண்டே இத்திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இதற்கு ரூ.19,058 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் இரண்டு வழிகளில் இந்த மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிரம்மாண்டம்
19 ஏசி சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள், 13 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்கள் என மொத்தம் 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காகத் தோண்டப்பட்ட மண்ணினைக்கொண்டு சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள 10 பள்ளமான இடங்களை சீர்படுத்தியுள்ளனர். இத்திட்டத்தின் கட்டுமானப் பணியின்போது 9 லட்சம் முறை லாரிகள் மண் சுமந்திருக்கின்றன என்றால் எவ்வளவு மண் இருக்கும் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். இதற்காக பிரான்ஸ், ரஷ்யா நாடுகளில் இருந்து பிரம்மாண்ட துளைக்கும் கருவிகள் வரவழைக்கப்பட்டன.

இலவசம்
மெட்ரோவின் அவசியத்தை மக்களிடையே வலியுறுத்தவும், இத்திட்டத்தினை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்லவும் இன்று (11/2/19) நள்ளிரவு 11 மனிவரை மெட்ரோவில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது. விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் – கோயம்பேடு – பரங்கிமலை என மொத்தமுள்ள 45 கி.மீ தூரத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.