தமிழகத்தின் எல்லை இவ்வளவு பெரியதா? சங்க இலக்கியம் தரும் ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

Date:

தொன்று நிகழ்ந்த தனைத்தும் அறிந்த
சூழ்கலை வானர்களும் இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்

என்று புகழப்படும் தமிழன்னையின் தோற்றம் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. தற்போதைய தரவுகளிலும் பல முரண்பாடுகள் இருப்பதாக மொழியறிஞர்கள் தெரிவிக்கின்றனர். முதற்சங்கம் அமைத்ததாகச் சொல்லப்படும் காய்சினவழுதி என்னும் பாண்டிய மன்னரின் காலத்திற்கு முன்பே தமிழ் இருந்திருக்க வேண்டும்.

தேவநேயப் பாவாணர் போன்ற அறிஞர்கள் தமிழ் மொழி 10,000 வருடங்களுக்குப் பழமையானது என்ற கருத்தை முன்வைக்கின்றனர். ஒரு மொழியின் காலத்தினை அறிந்து கொள்ள அம்மொழியின் பயன்பாட்டுக் களத்தினைத் தெரிந்து கொள்தல் அவசியம். அதனாலேயே தமிழகத்தின் அழியாச் சொத்துக்களான சங்க இலக்கியத்தில் தமிழகத்தினைப் பற்றிய குறிப்புகள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

 ancient tamil
Credit: Ancient Origins

சங்க இலக்கியம்

தமிழ் இலக்கியத்தில் பதினெண்மேற்கணக்கு நூல்கள் அனைத்தும் சங்க இலக்கிய வகையினைச் சார்ந்தவை. அவற்றில் பல மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் எல்லைகளைக் குறிக்கும் ஏராளமான பாடல்களும் உள்ளன. பெரும்பாலும் எல்லா பாடல்களும் வடக்கே வேங்கட மலையையும், தெற்கில் இந்தியப் பெருங்கடலையும் தமிழகம் எல்லையாகக் கொண்டிருந்ததை உறுதி செய்கின்றன. மேலும், கிழக்கில் வங்கக்கடல் துவங்கி மேற்கே அரபிக்கடல் வரையிலும் தமிழ் பேசும் மக்கள் பரவியிருந்திருக்கின்றனர்.

எழில் குன்றம் எனப்பட்ட ஏழுமலை அல்லது திருப்பதி வரையிலும் தமிழ் பேசப்பட்டிருக்கிறது.

பனிபடு வேங்கடத்தும்பர் 
மொழி பெயர் தேஎத்தராயினும்
- (அகநானூறு 211)

இராயல சீமாவிற்கு வடக்கே தெலுங்கு பேசும் மக்கள் இருந்ததாக, வேங்கடத்தும்பர் வடுகர் தேஎத்து (அகம் 213) என்னும் பாடல் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் இக்கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் வேங்கட மலையைச் சுற்றிய ஆறு மலைகளையும் புல்லி, திரையன் போன்ற தமிழ் மன்னர்கள் ஆண்டுவந்தனர் என்கிறது அகநானூறு. (83 மற்றும் 85 வது பாடல்கள்).

தமிழ்நாடு

தொல்காப்பியர் தமிழகத்தினைப் பற்றியும் தமிழ் மக்களையும் குறிப்பிடும் போது,

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் 
நாற்பெயர் எல்லை அகத்தவர் 
-(தொல் 1336)

என்கிறார். இந்திய நாட்டைத் தமிழ் இலக்கியம் நாவலந் தண்பொழில்  என்று அழைக்கும் வழக்காறு இருந்தது. ( பெரும்பாணாற்றுப்படை 465, சிலம்பு 25 – 173) அதனாலேயே வண்புகழ் மூவர் தண்பொழில் எனக் குறிப்பிட்டார் தொல்காப்பியர்.

ancient tamil border
Credit: Wikipedia

தென்கடல்

கனக விசயரை அடக்கி கல் சுமக்க வைத்த சேரன் செங்குட்டுவனைப் பாடும் போது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள 
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு 
தென்திசை ஆண்ட தென்னவன் 
(சிலம்பு 11)

மேலும், யானைக்கட்செய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுகோழியூர் கிழார் பாடும்போது,

தென்குமரி வடபெருங்கல்
குண குட கடலா எல்லை 
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய   
(புறம் 17)

எனப் புகழ்கிறார். இதன்மூலம் தமிழகத்தின் தெற்கு எல்லையாக இந்து மாக்கடல் இருந்தது தெளிவாகிறது. (சங்க காலத்தில் குமரிக்கண்டத்திற்கும் தெற்கே கடல் இருந்தது. கடற்கோளுக்குப் பின்னர் தெற்கு எல்லை சுருங்கியது)

இப்படி ஏராளமான பாடல்களின் மூலம் தமிழ்நாட்டின் அளவு இப்போதைய அளவை விட மிகப் பெரியதாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. பழந்தமிழகம் தென்னிந்தியா முழுவதும் பரவி விரிந்திருக்கிறது. பிற்பாடு பிறமொழிக் கலப்பினாலும், தமிழ் அரசர்கள் தமக்குள் போர் தொடுத்ததினாலும் தமிழ் மொழியின் பரப்பு விரிவடைய முடியாமல் போனது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!