தமிழ் இலக்கிய மரபில் எத்தனையோ ஆளுமைகள் பல்வேறு காலங்களில் கோலோச்சியிருக்கிறார்கள். இருப்பினும் அவர்தம் காலங்கள் கடந்த பின்னர் அவர்களது படைப்புகளும் மெல்ல ஓரங்கட்டப்பட்டுவிடும். வெகுசிலர் மட்டுமே இன்றும் மொழிக்காக, புலமைக்காக, அயரவைக்கும் சொல்லாட்சிகளுக்காக நினைவுகூரப்படுகின்றனர். அந்த வகையில் வள்ளுவன், கம்பன், இளங்கோ ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் பாரதி. இலக்கிய வெள்ளத்தில் பாமரர்கள் அள்ளிக் குடிக்கவும் உரிமையுண்டு என உரக்கச் சொல்லியவர் பாரதி மட்டுமே.
வரலாற்று வாழ்க்கை
தமிழகத்தின் இத்தனை கவிஞர்களில் பாரதிக்கு மட்டும் ஏன் இந்த தனிச்சிறப்பு? அவரது காலத்தில் பெண்ணடிமை, சாதி ஒழிப்பு குறித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்த பெரும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் பாரதியை ஏன் கொண்டாடுகிறார்கள்? காரணம் இருக்கிறது. கவிதை ராஜாக்களின், ஆளும் வர்க்கத்தின் பொழுதுபோக்காக இருந்த காலத்தில் பசித்த வயிறுகளுக்காக எழுதியவர் பாரதி மட்டுமே.

சொல்வது முக்கியமல்ல சொன்னவண்ணம் வாழ்ந்து காட்டுவதே அரிது. வயிற்றிற்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்கெல்லாம் என வீதிக்கு வீதி வெற்றுக் கோஷங்கள் போட்டிருந்த மக்களுக்கிடையில் குருவிகளின் பசிக்காக இரங்கியவர் பாரதி. அதற்கு ஏராளமான உதாரணங்களும் இருக்கின்றன.
ஒருமுறை நண்பர் சோமசுந்தர பாரதியுடன் நடைப்பயிற்சியில் இருந்த பாரதி, தான் ஆரம்பிக்க இருக்கும் புது செய்தித்தாள் பற்றியும் அதற்காகத் தான் சேர்த்து வைத்திருக்கும் 20 ருபாய் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு அழும் பெண்குரலின் ஒலி கேட்கிறது. ஓடிச்சென்று பார்த்தபோது, பழ வியாபாரம் செய்யும் ஏழைப் பெண்ணொருத்தி கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள். விற்காத பழங்களும், பசியடங்காத தன் குழந்தைகளின் வயிற்றையும் தன் அழுகைக்குக் காரணமாகச் சொன்னவளிடம் அந்த இருபது ரூபாயை நீட்டினார். உனக்கு எத்தனை பிள்ளைகள்? என்றார் பாரதி. இரண்டு பெண்மக்கள் என்றாள் வியாபாரி. நமக்கும் அப்படியே என்றார். நிமிர்ந்து நடந்தார், முண்டாசுக்கட்டுக்கும் முறுக்கிவிட்ட மீசைக்கும் சொந்தக்காரர்.
இப்படி ஏராளமான செய்திகள் பாரதியின் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. வெறும் உணர்ச்சிக் குவியல்களுக்காக, இன்பத்திற்காக எழுதியவர் பாரதி இல்லை. அவருடைய பேனா ஒவ்வொரு முறை தலைகுனியும் போதும் மானுட சமுதாயம் உயர்ந்திருக்கிறது. சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே அதை தொழுது வணங்கிடடி பாப்பா, செல்வம் மிகுந்த இந்துஸ்தானம்… என தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்கும் அதே சமயத்தில் இந்தியாவின் தேவையையும் உணர்த்துவதே பாரதியின் பாங்கு.
காலங்காலமாய் ஆளும் வர்க்கத்தினைப் புகழ்ந்து பாடியே பரிசில் பெற்றுவந்த புலவர் கூட்டத்தினுள் ஏழைகளை நோக்கி, அவர்களின் அவலத்தைக் குறித்து, மூடநம்பிக்கைகள் குறித்துப் பேசியவர் பாரதி. தமிழின் நவீன இலக்கியம் அங்குதான் துவங்கியிருக்கிறது. பிற்பாடு வெளிவந்த அவரது வசனகவிதைகள் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.

முழுமையும் வாழ்வோம்
பசியில் துயருறும் மக்களைப் பார்க்கும்போது பாரதியின் கண்கள் கலங்கியிருக்கின்றன. அதுதான் அவரை சிறுவயதிலேயே, வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன் எனச் சொல்ல வைத்திருக்கிறது. வீட்டிற்கு வந்த நீலகண்ட பிரம்மச்சாரியின் நாள் கணக்கான பசியை அறிந்து கொண்ட பாரதி அப்போது சொன்னதுதான் இவை, தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.
தன் வாழ்க்கை முழுவதும் பிறரது வறுமைக்காகப் பாடிய, உழைத்த பாரதியும் கடைசிக்காலத்தில் வறுமை சூழ் உலகில் தான் வாழ்ந்தார். நல்ல உடைகள் இல்லாதபோதும், உணவிற்குக் கஷ்டப்படும் காலம் வந்த போதும் எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இந்த வாழ்வினிலே என் இறைவா எனப் பாடும் அளவிற்கு நம்பிக்கை நாற்றின் விளைநிலமாக பாரதி இருந்தார். இன்றும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி வானத்தில் பாரதி ஒரு சூப்பர் நட்சத்திரம்.