கரிசல் காட்டில் நாதஸ்வர வித்வான்களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சஞ்சாரம் நாவலுக்காக எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத் துறையில் மிக உயர்ந்த விருதாகப் பார்க்கப்படும் சாஹித்ய அகாடமி இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த ஆண்டிற்கான விருதுகள் பெரும் படைப்புகள் அறிவிக்கப்பட்டன.

எஸ்.ராமகிருஷ்ணன் என்ற எஸ்.ரா
இலக்கிய உலகில் சமகால எழுத்து ஆளுமைகளில் முக்கியமானவராகப் போற்றப்படும் எஸ்.ரா முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார். 1984 ஆம் ஆண்டு அவருடைய முதல் சிறுகதையான “பழைய தண்டவாளங்கள்” கணையாழி இதழில் வெளியானது.
தமிழிலக்கிய புனைவு எழுத்துகளில் புரட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த பூமணி, கோணங்கி ஆகியோரின் காலத்தில் எழுத்து உலகிற்குள் பிரவேசித்த எஸ்.ரா, சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை அதன் எதார்த்தத்தை பதிவு செய்வதையே தனது பாணியாகக் கொண்டவர். உலக இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவரான எஸ்.ரா டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, புஷ்கின், செக்காவ், ஹெமிங்க்வே போன்றோரின் முக்கியத்துவத்தை வெகுஜன மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றில் பிறந்த எஸ்.ரா தீவிர இலக்கியம் தாண்டி திரைப்படத் துறையிலும் பணியாற்றி வருகிறார். சுமார் 12 க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் வசனகர்த்தாவாக இருந்திருக்கிறார். மேலும் உலக சினிமா பற்றியும், கதையமைப்பு குறித்தும் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தன்னுடைய சிறுகதை மற்றும் நாவல்களுக்காக இதுவரை ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கும் எஸ்.ரா சாஹித்ய அகடாமி விருது பெறுவது இதுவே முதல்முறையாகும்.