முண்டாசுக் கட்டுக்கும், முறுக்கி விட்ட மீசைக்கும், கனல் தெறிக்கும் கண்களுக்கும் சொந்தக்காரரான பாரதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1882 – ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் பிறந்தவர். தந்தை சின்னச்சாமி ஐயர் மற்றும் தாயார் இலக்குமி அம்மாள் ஆவர். பாரதியிடம் சிறு வயதிலேயே கவிதை படைக்கும் ஆற்றல் இருந்தது. தன் ஐந்தாம் அகவையில் தாயை இழந்தார். தந்தையின் தொழிலில் நஷ்டம் ஏற்பட குடும்பம் வறுமையில் வாடியது. பாரதி உலகக் கவிஞர்களில் ஒருவராக மாறத் துணை புரிந்த தருணம் அது.

இளமையில் வறுமை
பாரதியின் வாழ்க்கை முழுவதுமே வறுமை அவரைப் பின் தொடர்ந்திருக்கிறது. தாயின் மரணம் பாரதியின் வாழ்வினைப் புரட்டிப் போட்டது. தனது கடைசி காலம் வரையிலும் தாயின் பிரிவினைப் பற்றி ஏக்கம் கொள்பவராகவே பாரதி இருந்திருக்கிறார். பெண்ணியத்தைப் போற்றிக் கொண்டாடும் பாரதியின் செயல்களுக்கு மூலக் காரணம் அவரது தாயிடமிருந்த ஈர்ப்பு என்று கூடச் சொல்லலாம்.
வறுமையின் பிடியில் உழன்ற போதிலும்,” மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன், வறுமை என்பதை மண்மிசை மாய்த்துக் காட்டுவேன்” எனப் பாடினார். வறுமையில் யார் வாடினாலும் ஓடிச் சென்று உதவும் பண்பு பாரதியிடம் இருந்தது. மனிதர்கள் மட்டுமல்ல காக்கை, குருவி என் சாதி என எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டிருந்தார்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி
யாப்பு என்னும் கூண்டுக்குள் அடைபட்டிருந்த தமிழ்க் கவிதையினை விடுவித்த பெருமை பாரதியையே சேரும். அவர் தான் முதன்முதலில் புதுக் கவிதையினை வெகுஜன மக்களிடையே கொண்டு சென்றார். விடுதலைப் போராட்ட காலத்தில் இவர் எழுதிய தேசபக்திப் பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
பாரதி சாதியத் தீண்டாமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார். தமிழ் இலக்கிய வரலாற்றின் புரட்சியாக வசனக் கவிதையை அறிமுகப்படுத்தினார். காசி நகரத்தில் வாழ்ந்த நாட்களில் பாரதி ஒரு கவிதை கூட எழுதவில்லை. ஏழு வருடங்களுக்குப் பின் மதுரையில் நீண்ட நாள் கழித்து கவிதை எழுதத் துவங்கினார். அக்கவிதை ‘விவேகபானு’ என்னும் இதழில் வெளியானது.

பெண்ணியவாதி
தன் வாழ்நாளில் பெண்களைப் பெரும்பாலும் அம்மா என்றே பாரதி அழைத்ததாக வா.ரா (வா. ராமசாமி அய்யங்கார்) குறிப்பிடுகிறார். அந்தளவிற்கு பெண்களின் மீது மதிப்புக் கொண்டவராக விளங்கினார் பாரதி. பெண்களுக்குக் கல்வியுரிமை, சொத்துரிமை வழங்கிடச் சட்டம் இயற்றுதல் வேண்டும் என்றார். ஆண்களுக்குப் பெண்கள் நிகரானவர்கள் என்று தன் காலம் முழுவதும் மக்களுக்கு வலியுறுத்தினார். பெண்ணடிமைத்தனம் கடுமையாக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என அக்கிரகாரத்துத் தெருக்களில் முழங்கினார்.

பாரதி ஏன் உலக கவி ?
தன் சார்ந்த மக்களுக்கோ அல்லது நாட்டுக்கோ மட்டுமல்லாமல், உலகக் குடிமகன் ஒருவனின் கவலையையும் தன் கவலையாக நினைப்பவர் பாரதி. அதனால் தான், ஆகா வென்று எழுந்தது பார் ரஷியப் புரட்சி!! என்றும், மானத்தால் வீழ்ந்துவிட்டாய், உண்மையால் வீழ்ந்துவிட்டாய் !! என பெல்ஜியத்தின் வீழ்ச்சியைப் பற்றியும் எழுதினார். வறுமையினால், அதிகார வர்க்கத்தால் அடிமை இருளில் தவிக்கும் உலகத்தின் எந்தவொரு மனிதனுக்காகவும் பாரதி எழுதியிருக்கிறார்.

இறுதிக் காலம்
தன்னுடைய கடைசிக் காலத்தை சென்னையிலுள்ள திருவல்லிக்கேணியில் கழித்தார் பாரதி. பார்த்தசாரதிக் கோவில் யானை தாக்கியதில் பலத்த காயமுற்ற பாரதி 1921 – ஆம் வருடம் செப்டம்பர் 11 அன்று இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 38. அவ்வளவு குறுகிய வயதில் பெரும்புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர் யாருமில்லர். பாரதி போன்ற முற்போக்குச் சிந்தனைவாதி, இணையில்லாக் கவிதையாளர், பெண்ணுரிமைப் போராளி என பன்முகத்தன்மை கொண்டவர்கள் வெகுசிலரே. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தவை என நாட்டைப் போற்றிப் புகழ்ந்த பாரதியின் வழியினையொட்டி நடப்போம். அவர்தம் புகழைப் பரப்புவோம்.