தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டியின் முக்கியத்துவத்தை இந்தத் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக இன்று வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு யுனிஸ்கோ நிறுவனம் உலகின் பாரம்பரிய உடைகளைக் காக்கும் விதத்தில் ஜனவரி ஆறாம் தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது. இதன் காரணமாக வேட்டி அணிந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஏராளமான தமிழர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கலாச்சாரம்
மொழியும், கலாச்சாரமும் ஒன்றிப் போயிருப்பது தமிழ் போன்ற மிகச்சில மொழிகளில் மட்டுமே. சமுதாயத்தின் பண்பாட்டு அமைப்புகளில் மொழியின் தாக்கம் அதிகம் இருப்பது சிதைவுகளில் இருந்து காப்பதற்கான ஒரே வழியாகும். இதனால் தான் கால மாற்றம், கலாச்சார மாற்றம், மொழி மாற்றம் என ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும் நம்மால் சில விஷயங்களை விட்டுக்கொடுக்க முடிவதில்லை. அதிலொன்று தான் உடைகளைப் பற்றிய பார்வை.
இன்றும் வீட்டு விசேஷங்களில் மரபான ஆடைகளே தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன. மக்களிடத்தில் குறிப்பாக இளைஞர்களுக்கு இதில் ஈடுபாடு அதிகமுள்ளது. ஒருகாலத்தில் புறக்கணிக்கப்பட்ட பண்டைய பொருட்களின் மீதான மோகம் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சமூக வலைத்தளங்கள்.
உழைப்பின் பரிசு
தமிழ்க் கலாச்சாரம், பெருமை, பற்று என நரம்பு புடைக்கும் உணர்ச்சிக் குவியல்களுக்கு அப்பால் இதனை தயாரிக்கும் நெசவாளர்களின் கதைகளை, அவர்களின் அசாத்தியமான உழைப்பை, சமூகம் அவர்களுக்கு அளிக்கும் புறக்கணிப்பை எண்ணிப்பார்க்கும் யாரும் நிச்சயம் ஒரு வேட்டி வாங்காமல் இருப்பதில்லை. அதனைச் சார்ந்து பொருளாதார வட்டம் ஒன்று இயங்குகிறது. மொழி புரியாவிட்டாலும், கலாச்சாரம் பற்றித் தெரியாவிட்டாலும், பண்பாடு குறித்த புரிதல்கள் இல்லை என்றாலும் அந்த ஏழை வயிறுகள் பசிக்கும். நம்முடைய செயல் அந்த குடும்பங்களின் அத்தியாவசிய தேவைக்கானதாக இருக்கட்டும். பசியில்லாத சமுதாயத்தை வென்றெடுப்போம். வறுமை என்பதை மண்மிசை மாய்ப்போம்.
அனைவருக்கும் நியோதமிழின் இனிய வேட்டி தின வாழ்த்துக்கள்.