உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. வேலைவாய்ப்பு, வணிகம் காரணமாக கடல்தாண்டி பயணம் செய்யும் அனைவரும் புதிய நாட்டிற்கான மொழியினைக் கற்றுக்கொள்கிறார்கள். பெருகிவரும் உலகமயமாதல் நிகழ்த்தும் மொழியின் மீதான புறக்கணிப்பு பல மொழிகளை அதன் எல்லைகளை சுருக்கிவிட்டது. இதனை சீர் செய்யும் விதத்தில் யுனெஸ்கோ அமைப்பு பிப்ரவரி 21 ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. கடந்த 20 வருடங்களாக இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது.

தாய்மொழி
மக்களை பெருமளவில் திரட்ட மொழி மாதிரியான தீவிர வழி ஏதுமில்லை. ஒரே மொழிபேசும் இனக்குழுக்களின் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையின் ஒளிக்கீற்றுகளை ஒளிரச்செய்ய மொழி மட்டுமே துணை புரிந்திருக்கிறது. இன்று உலகில் சுமார் 7000 மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் 43 சதவிகித மொழிகள் அழியும் தருவாயில் உள்ளதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதற்கான மிகமுக்கிய காரணம் புலம்பெயர்தல் தான்.
குறிப்பாக பழமை வாய்ந்த ஆப்பிரிக்க மொழிகள் பல அழிந்ததற்கு அங்குள்ள வறுமை மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் அவற்றுள் வரிவடிவம் இல்லாத மொழிகள் அதிகம். எனவே எழுத்து மூலமாக மொழியின் அடிப்படை கூறுகளான இலக்கிய வளர்ச்சியை அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. இயற்கை காரணங்களால் அம்மக்கள் உலகப்பந்தின் பல பகுதிகளில் சிதறிப்போகின்றனர். பிழைப்பு மொழி மூலம் ஜீவித்திருக்கும் மக்களின் சந்ததிகளுக்கு தங்களுடைய தாய்மொழியினை கடத்த முடியாமல் போய்விடுகிறது. இப்படித்தான் பல மொழிகள் வழக்கொழிந்திருக்கின்றன.
உலகத்தில் இன்று பயன்பாட்டில் இருக்கும் 7000 மொழிகளில் வெறும் 300 மொழிகளை மட்டுமே 95% மக்கள் பேசுகின்றனர். உலக மக்கட்தொகையில் பாதிபேர் 16 மொழிகளைப் பேசுகின்றனர்.
– யுனெஸ்கோ
இலக்கியங்கள்
ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட சிறப்புகள் இருக்கும். செவ்வியல் இலக்கியங்களில் தமிழ் அடைந்திருந்த உச்சத்திற்கு இன்றும் சங்க இலக்கியம் சான்றாக இருக்கிறது. மறுமலர்ச்சி மற்றும் நவீன இலக்கிய காலத்தின் வாசலில் ரஷிய எழுத்தாளர்களின் சாதனை மின்னுகிறது. உலகத்தின் மிகச்சிறந்த காதல் இலக்கியங்களையும் தத்துவார்த்த படைப்புகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன பிரெஞ்சு இலக்கியங்கள். காலங்காலமாக அரசரையும், போர்வீரனையும், தொழிலதிபர்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட காலத்தில், சாதாரண எளிய மக்களை, திருடனை, விலைமாதுவின் வாழ்க்கையைப் பேசிய லத்தீன் அமெரிக்க படைப்புகள் இந்த உலகத்தை இன்னும் உலுக்குகிறது.

இவை அனைத்துமே மொழி வளர்ச்சியின் மிகப்பெரிய உயரத்தில் நிகழ்ந்த அற்புதங்கள். இப்படியான படைப்புகள் மூலமாகவே நம் முன்னோர்களின் வாழ்க்கையை, அவர்களுடைய வியர்வையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அந்தவகையில் வாழ்வின் அத்தனை பரிமாணங்களுக்கும் தமிழ் மொழி இலக்கியத்தின் ஊடாக வழிகாட்டுகிறது.
பழமொழி எழுதுங்கள்
மொழியின் பழமையைப் புரிந்துகொள்ள இலக்கியங்கள் முக்கியம் தான். ஆனால் அவை படிப்பறிவு கொண்ட மக்களிடம் மட்டுமே பரவும். பாமரர்களிடையே வாய்மொழி இலக்கியம் தான் மொழியின் பிடிப்பாக இருந்திருக்கிறது. இராமாயணம் மகாபாரதம் போன்றவை இந்தியாவில் வெவ்வேறு மொழிகளில் வாய்மொழி இலக்கியமாகத்தான் இருந்திருக்கிறது. இப்படி வாய்மொழி இலக்கியங்களில் உள்ள அறக்கருத்துகளை எளிமையாகவும், நுட்பமாகவும், சுருக்கமாகவும் பிறருக்கு எடுத்துரைக்க உருவானதே பழமொழிகள். கிராமப்புறங்களில் தான் பழமொழிகள் அதிகம். மொழியின் தொன்மைக்கு இவை சான்றாக விளங்குவதால் இந்த வருடம் ஐ.நா ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இன்று அவரவர்களுடைய தாய்மொழியில் உள்ள பழமொழி ஒன்றினை தங்களுக்கு அனுப்புமாறு ஐ.நா விண்ணப்பம் விடுத்திருக்கிறது. எனவே நம் தமிழ் மொழியில் உங்களுக்குப்பிடித்த பழமொழி ஒன்றினை இணையத்தின் மூலமாக ஐ.நா விற்கு அனுப்புங்கள். தமிழின் பெருமை மற்றொரு உச்சத்தை அடையட்டும்.
பழமொழி எழுதி அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.
அனைவருக்கும் நியோதமிழின் தாய்மொழி தின வாழ்த்துக்கள்!!