12-ஆம் நூற்றாண்டு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன் மகுடமிட்ட நூற்றாண்டு. கவிச் சக்கரவர்த்தி கம்பன், வெண்பாப் புலி புகழேந்தி, ஒட்டக்கூத்தர், தெய்வப் புலவர் சேக்கிழார், ஜெயங்கொண்டார் என மாபெரும் புலவர்கள் வாழ்ந்த காலம் அது. மேற்கண்டவர்கள் அனைவருமே சோழர் ஆட்சிக்குக் கீழ் வாழ்ந்தவர்கள். இதில் ஒட்டக்கூத்தர் கொஞ்சம் கோபக்காரர். கொஞ்சம் என்றா சொன்னேன்? இல்லை, இல்லை அதிகமாகவே அவருக்குக் கோபம் ஊற்றெடுக்கும் .

அரசவைப் புலவர்!
ஒட்டக்கூத்தர் திருச்சியிலுள்ள திருவரம்பூரில் பிறந்தவர். அப்போது சோழ நாட்டிற்கு உட்பட்ட பகுதியாக திருச்சி இருந்தது. அரசர் விக்கிரமச் சோழனின் அரசவையில் அவைப் புலவராகப் பதவியேற்றார் ஒட்டக்கூத்தர். பின்பு விக்கிரமனின் மகன் இரண்டாம் குலோத்துங்கன் அவையிலும் தலைமை அவைப் புலவராக இருந்தார். இரண்டாம் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராஜராஜன் காலம் வரையிலும் அப்பதவியை வகித்துச் சிறப்பித்தவர். இந்தப் பெயர்கள் நினைவில் நிற்பது கஷ்டந்தான். ஆனால் ஒட்டக்கூத்தர் மூன்று தலைமுறைகளாக சோழர் ஆட்சிக்காலத்தில் அவைப்புலவராக இருந்தார் என்பது ஞாபகத்தில் இருக்குமல்லவா? அது போதும்.
இவர் இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி போன்ற பத்திற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். ஜெயங்கொண்டாரைப் போலவே ஒட்டக்கூத்தரும் கலிங்கத்துப்பரணி என்னும் நூலினை எழுதியாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனாலும், அந்நூல் கிடைக்கவில்லை.
ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி: வட கலிங்கத்தை ஆண்டுவந்த அனந்தவர்மனை, முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் போர்க்களத்தில் தோற்கடித்ததைப் பாடுகிறது.
ஒட்டக்கூத்தர் எழுதியாகச் சொல்லப்படும் கலிங்கத்துப்பரணி: விக்கிரமச் சோழன், தென் கலிங்க மன்னனான வீமனை வென்ற தீரத்தைப் பாடுகிறது.
உடைவாளின் கதை!!
ஒட்டக்கூத்தர் எப்பொழுதும் தன் உடையில் வாள் ஒன்று வைத்திருப்பார். கவிஞருக்கு எதற்கு வாள் என்று கேட்கிறீர்களா? அதற்குப் பின்னால் ஒரு கதையிருக்கிறது. ஒட்டக்கூத்தர் கடுமையான தமிழ் விரும்பி. தமிழில் பிழையை ஏற்காதவர். சரி, கதைக்கு வருவோம்.
பழைய சோழ நாடு. ஒட்டக்கூத்தர் அவைப் புலவராக இருந்த சமயம். அந்நாட்டில் யாராவது புதிதாகக் கவிதையோ, நூலோ எழுதினால் அவைப் புலவரிடம் காண்பித்து ஒப்புதல் பெறவேண்டும். அங்கு தான் வருகிறது பிரச்சனை. இப்படி ஒருவர் தன் படைப்பை ஒட்டக்கூத்தரிடம் சமர்ப்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சொற் குற்றமோ, பொருள் குற்றமோ அதில் இருந்தால் வந்தவருக்கு அந்தநாள் நல்ல நாளாக இருக்காது.

இடது கையால் அதை வாங்குவார் ஒட்டக்கூத்தர். அதே நேரத்தில் அவரது வலது கை உடைவாளை, உறையிலிருந்து கழட்டியிருக்கும். வாசிக்கத் துவங்கும் போது, எழுதியவரின் காதில் வாளை வைத்திருப்பார் நம் ஆள். ஒரு பிழையைக் கண்டுபிடித்துவிட்டாலும் போதும் காதை அறுத்துக்கொண்டு வாள் கீழிறங்கும். இது அத்தோடு நிற்காது. தற்போது வாள் அடுத்த காதிற்கு இடம் பெயர்ந்திருக்கும்.
தலைவனின் இலக்கணம்
யோசித்துப் பாருங்கள், அந்த நாட்டில் யாருக்காவது கவிதை இயற்றத் தைரியம் வருமா? ஆனாலும், எந்த வல்லாளனுக்கும் ஒரு வில்லாளன் இருந்து தானே ஆவான். அப்படித்தான் வந்து சேர்ந்தார் புகழேந்தி. நளவெண்பாவை உலகத்திற்குத் தந்தவர் இவரே. அவையில் புலவராக புகழேந்தியைச் சேர்த்துக் கொள்வதற்குப் போட்டி ஒன்று வைக்கப்பட்டது. கடினமான பாடல் ஒன்றை அப்பொழுதே எழுதி நீட்டினார் ஒட்டக்கூத்தர். அதே பாணியில் ஒரு பாடல் எழுதுமாறு புகழேந்திக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அடுத்த நொடியே எதிர்ப்பாடலை பாடி அசத்தினார் புகழேந்தி.
அரங்கம் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனது. கோபக் காரரான ஒட்டக்கூத்தர் என்ன செய்யப்போகிறார் என்று மன்னர் உட்பட அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஒட்டக்கூத்தர் ஓடிச்சென்று புகழேந்தியை ஆரத் தழுவி வாழ்த்தினார். பிழைகளைக் கண்டித்தலை விட திறமையைப் பாராட்டுவது முக்கியம் என்பது ஒட்டக்கூத்தருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதிலிருந்து புகழேந்தியும் அவைக்களப் புலவராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். தமிழைப் பிழையின்றி கற்றறிந்த ஒட்டக்கூத்தருக்கு இப்பண்புகள் இருந்ததில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது.