தமிழகத்தைப் பொறுத்த வரை இராமாயணம் என்றாலே கம்பர் இயற்றிய நூல் என்பது தான் நினைவிற்கு வரும். ஆனால், கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு முன்பே தமிழகத்தில் இராமாயணம் இருந்திருக்கிறது. உண்மை தான். 12 – ஆம் நூற்றாண்டில் கம்பர் இராம காதையை எழுதினார். “செஞ்சொற் கவி இன்பம்” எனப் புகழும் படி அக்காப்பியத்தில் தமிழிலக்கியத்தின் உச்சத்தினை தொட்டிருப்பார் கம்பர். அவரைப் பாராட்டும் விதமாகவே இராம காதைக்கு, கம்ப இராமாயணம் எனப் பெயரிடப்பட்டது.

வால்மீகி ராமாயணம்
கிமு. 4 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வால்மீகி முனிவரால் முதன்முதலில் இராமாயணம் இயற்றப்பட்டது. சரித்திர ஆசிரியர்கள் இந்நூலை ஒரு வரலாற்றுப் புனைவு நூலாகக் குறிப்பிடுகிறார்கள். வால்மீகியைத் தொடர்ந்து பல மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டது. அப்படித் தமிழ் மொழியில் வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்த்தவர் தான் கம்பர். ஆனாலும், தன் மொழிப்புலமை, கற்பனைத் திறன் ஆகியவற்றால் மூல காப்பியத்தை விட எந்த விதத்திலும் குறைவில்லாதபடியாய் இராம காதையை இயற்றினார். இவரும் ஒட்டக்கூத்தரும் சமகாலத்தவர்கள்.
கவிச்சக்கரவர்த்தி ..
வால்மீகி இராமாயணத்துடன் ஒப்பிடுகையில் பல இடங்களில் கம்பராமாயணம் முரண்படுகிறது. தமிழறிஞர் பலர் தமிழ் நாகரீகத்திற்குத் தக்கவாறு இராமாயணத்தைக் கம்பர் மாற்றியிருக்கிறார் என்கிறார்கள். வால்மீகி பல பாடல்களில் விவரித்த காட்சிகளை ஒன்றிரண்டு வரிகளுடன் கம்பர் கடக்கிறார். இப்படிப் பன்னிரெண்டாயிரம் கவிதைகளிலும் தனித்துவம் காட்டுகிறார் கம்பர். ஆனால் கம்பர், இராமாயணத்தை இயற்றுவதற்கு முன்பே தமிழகத்தில் அந்நூலின் கருத்துக்கள் பரவியிருக்கின்றன.

தமிழகத்தில் இராமாயணம்
தமிழகச் சிற்றூர்கள் பலவற்றிலும் ராமர் மண்டபம், ராமாயணக் கூடம் என்று சில இடங்கள் உள்ளன. இவை இராமாயணத்தை வாய்வழிக் கதைகளாக மக்களுக்கு எடுத்துரைக்கும் இடங்களாக இருந்தவை. வட நாட்டிற்குப் பயணம் செய்தோர் அங்குள்ள மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த இராமாயணத்தை கற்றனர். தாய்நாடு திரும்பியதும் அக்கதைகளை மக்களிடம் கூற ஆரம்பித்தனர். இப்படித் தொடங்கி, வளர்ந்த கதையைத் தான் கம்பர் பின்னாளில் இயற்றினார். ஆனால், கம்பரின் காலமான 12 – ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் இராமாயணக் குறிப்புகள் உள்ளன.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் ராமன் மற்றும் இலக்குமன் ராவணனைத் தோற்கடித்ததைப் பற்றிய பாடல் இருக்கிறது.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே
மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சேர்கிறான் கோவலன். பிழைப்புக் கருதி மதுரை மாநகர் செல்லும் வழியில் கவுந்தியடிகளைச் சந்திக்கின்றனர் தம்பதியர். அப்போது கவுந்தியடிகள் கோவலனிடத்தில், இராமன் சீதையோடு கானகம் புகுந்ததை விவரிக்கிறார்.
தாதை யேவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன் வேத முதல்வற் பயந்தோன் என்பது நீயறிந் திலயோ நெடுமொழி யன்றோ - ஊர்காண் காதை
இப்படிக் கம்பருக்கு முன்பே தமிழகத்தில் இராமாயணம் பரவியிருந்தது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
Project Madurai திட்டத்தின் கீழ் ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்-1 பழைய ராமாயணம்‘ எனும் பெயரில் உள்ள ஒரு தொகுப்பில் சில முக்கிய சான்றுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
சங்கக் காலத்திலேயே தமிழில் இராமாயணம் இருந்தது என்பது புறநானூற்றின் 378-ஆம் பாடலிலிருந்தும் அக நானூற்றின் 70-ஆம் பாடலிலிருந்தும் வால்மீகி இராமாயணத்தில் இல்லாத நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதில் இருந்து தெரிகிறது என்று பெர்க்கெலி பல்கலைத் தமிழ்-வடமொழிப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (George Hart) ‘The Poems of Ancient Tamil: their milieu and their Sanskrit counterparts’, (1975) என்னும் நூலில் விளக்குவதை.
அப்படி பார்க்கும் போது மிக முக்கியமான சான்று இதுவாகும்.
அவற்றில் ஒன்று இது தான்… புறநானூற்றில் 378 ம் பாடலை கவனியுங்கள்! புறநானூற்றின் 378-ஆம் பாடலில் அரசனிடமிருந்து அணிகலன்களைப் பரிசில் பெற்ற பாணர்கள் அவற்றை அணிந்துகொள்ளும் செய்தியை நகைச்சுவையாகச் சொல்லும்போது புலவர் ஊன்பொதி பசுங்குடையார் கீழக்கண்டவாறு பாடுவார்:
இலம்பா(டு) இழந்தஎன் இரும்பேர் ஒக்கல் விரல்செறி மரபின செவித்தொடக் குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் அரைக்(கு)அமை மரபின மிடற்றுயாக் குநரும் மிடற்(று)அமை மரபின அரைக்குயாக் குநரும் கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்(கு) அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே (புறநானூறு: 378:13-21)
இதன் பொருள்…
[சோழன் இளஞ்சேட்சென்னி ஈந்த பரிசிலால்] வறுமையை இழந்த என் பெரிய சுற்றத்தார் அவன் கொடுத்த அணிகலன்களில் விரலுக்கு அணிய வேண்டியதைக் காதிலும் காதுக்கு அணியவேண்டியதை விரலிலும் இடைக்கு அணிவதைக் கழுத்திலும் அணிந்துகொண்டது பெரும் வலிமையை உடைய இராமனின் துணையாகிய சீதையை இராவணன் வௌவிச் சென்றபோது சீதை நிலத்தில் வீசி யெறிந்திருந்த நகைகளைக் கண்டெடுத்தவுடன் குரங்குகள் அவ்வணிகலன்களில் எதை எந்த உறுப்பின் மீது அணிவதென்று தெரியாமல் தங்கள் உடம்பின்மேல் மாறி மாறி அணிந்துகொண்டதைப் போல் வேடிக்கையாக இருந்தது” என்று சொல்கிறார்.வால்மீகி ராமாயணத்திலோ (4:6) குரங்குகள் சீதையின் நகைகளைக் கண்டுபிடிக்கும் காட்சிச் சித்திரிக்கப் படவேயில்லை; மாறாகச் சுக்கிரீவன் இராமனிடம் சீதையின் அணிகலன்கலைக் காட்டி அவை சீதை இராவணனாற் கடத்தப் படும்போது தானும் நான்கு குரங்குகளும் நிலத்தில் இருப்பதைக் கண்டு சீதை அவற்றைக் கீழே வீசியதாக மட்டுமே சொல்கிறான்.
அகநானூற்றின் 70-அம் பாடல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடிய நெய்தல் திணைப் பாடலாகும். அதில் தலைவியிடன் காதல் தொடர்பாக ஊரார் பேசுவதைப் பற்றித் தலைவியிடம் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவதாகப் புலவர் பாடுவார்:
… நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப் பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே வதுவை கூடிய பின்றை… … வென்வேற் கவுரியர் தொல்முது கோடி முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே”. (அகநானூறு:70:5-17)
இதன் பொருள்…
அதாவது, ‘உன்னைத் திருமணம் செய்து கொள்ளும் முன் அவருக்கும் உனக்கும் இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் ஊரார் பலரும் அறியுமாறு அலர் (கிசுகிசு!) பேசிச் செய்தியைப் பரப்பினர். ஆனால், திருமணம் ஆன பின்னரோ [நிலைமை வேறு]; வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான தனுக்கோடியில் முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆல மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்; அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!‘ என்றாள். மேற்கண்டவாறு தனுக்கோடி நிகழ்ச்சி வால்மீகி இராமாயணத்தில் இல்லை; அதில் வேறுமாதிரி உள்ளது.
அகநானூற்றின் காலம் கி.மு 1 ம் நூற்றாண்டு முதல் 4-ம் நூற்றாண்டு வரை!
ஆனாலும் இவையெல்லாம் கம்பராமாயணத்தின் பெருமையைச் சற்றேனும் குறையச் செய்யவில்லை. ஏனெனில், கம்பர் சொல்லின் வித்தகன். அதனால் தான் யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல் இளங்கோவைப்போல் வள்ளுவனைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை எனப் பாரதி வியந்தோதுகிறார்.