தமிழ் கற்றுக் கொள்ள விரும்பும் சீன மாணவர்கள்

0
68

சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் மொழியை ஒரு பாடமாக சேர்த்திருக்கின்றனர். அங்கிருக்கும் மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனராம்.

பெய்ஜிங் அயல்நாட்டுக் கல்விப் பல்கலைக்கழகம் (Beijing Foriegn Studies University) இந்த வருடம் முதல் தமிழ் மொழியில் நான்கு வருடப் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹிந்தி மற்றும் பெங்காலி மொழியைத் தொடர்ந்து அந்தப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் மூன்றாவது இந்திய மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இருக்கும் அந்த மாணவர்களுக்குத் தமிழ் கற்றுத் தரப் போவது  யார் தெரியுமா? அதுவும் ஒரு சீனப் பெண் தான். ஃப்யூ பே லின் (Fue pei lin) எனும் பெண் தான் அங்கிருக்கும் மாணவர்களுக்கு தமிழ் கற்று தரவிருக்கிறார். தமிழ் மொழி மீது உள்ள ஆர்வம் காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியை முறைப்படி கற்றுக்கொண்டிருக்கிறார் ஃப்யூ பே லின்.

தமிழ் மொழி குறித்து பேசும் போதே பரவசப்படும் ஃப்யூ பே லின், “தமிழ் மொழியின் எழுத்து வடிவங்கள் படிப்பதற்கு மிகவும் கடினமானது. ஆனால், படித்த பிறகு மட்டுமே அதன் இனிமையை நம்மால் உணர முடியும். நான் தமிழ் மொழியை மிகவும் நேசிக்கிறேன். இந்த மொழியை எங்கள் மாணவர்களுக்கு சொல்லித் தருவதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். 4 ஆண்டுகள் நடக்கவிருக்கும் இந்த படிப்பில், மாணவர்களுக்கு முதலில் தமிழ் மொழியைக் கற்று கொடுத்து விட்டு, பின்னர் தமிழ் இலக்கியங்கள் மற்றும் கலாச்சாரம் குறித்துக் கற்றுக் கொடுக்கும் படியாகத்  தான் இந்த பாடத்திட்டத்தினை நாங்கள் அமைத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

மேலும், பாடத்தின் ஒரு பகுதியாக தமிழகத்திற்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து வந்து, அந்தச்  சுற்றுலாவின் மூலம் தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம் குறித்தும் எங்கள் மாணவர்களுக்குக் கற்றுத் தர உள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

9 மாணவிகள், ஒரு மாணவன் என்று மொத்தம் 10 பேர் அங்கு தமிழ் கற்றுக் கொள்ள இருக்கின்றனர். தமிழ் வழிக்கல்வியை குறைவாக மதிப்பிட்டு ஆங்கிலத்துக்கு நம் மாணவர்கள் மாறிக் கொண்டிருக்கின்றனரே என வருத்தத்தில் இருக்கும் நம் மக்களுக்கு , இந்த சீன மாணவர்கள் தமிழ் மொழி கற்கக் காட்டிடும் ஆர்வம் பெருமை தருவதாகவும் அமைந்திருக்கிறது.

“தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்” என்று அன்றே பாடிய பாரதியின் கனவு இன்று சீனாவில் நனவாகி இருக்கிறது.