
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை உலகத் தமிழ் மாநாடு நடைபெறுகிறது. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, இங்கிலாந்து, மொரிசியஸ், சிங்கப்பூர், மலேசியா மற்றும் மேலும் பல நாடுகளில் இருந்து சுமார் 6,000 பேர் கலந்துகொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்கம், சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து 10வது உலகத் தமிழ் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. இந்த மாநாட்டிற்கான மையக்கரு ‘கீழடி நம் தாய் மடி’ என்பதாகும்.
மதுரையை அடுத்த கீழடி என்னும் ஊரில் கிடைத்துள்ள மிகத்தொன்மையான தமிழர் நாகரீகம் குறித்த அடையாளங்களை உலகறியும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடக்க இருக்கும் இந்த நிகழ்வில் சுமார் 2,000 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட உள்ளன. அவற்றில் இருந்து 80 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.
தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர் மாநாட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களைத் தவிர, இசையமைப்பாள யுவன் சங்கர் ராஜா, சாலமன் பாப்பையா, ஜேம்ஸ் வசந்தன், சீர்காழி சிவசிதம்பரம், சல்மா, ஓவியர் மணியன் செல்வன், எழுத்தாளர்கள் ஸ்டாலின் குணசேகரன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சி.மகேந்திரன், நாட்டுப்புற கலைஞர்கள் ராஜலட்சுமி, இயக்குநர் கரு.பழனியப்பன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ளனர்.

சிகாகோ நகரில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட உள்ளது. மேலும் 32க்கும் மேற்பட்ட இணைய அமர்வுகள், கீழடி ஆய்வு பற்றி சிறப்பு விவாதம், குறள் தேனீ, தமிழ் தேனீ, சங்கங்களின் சங்கமம், குறும்பட போட்டி, கவியரங்கம், யுவன்சங்கர் ராஜா கச்சேரி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான செலவுகள் அனைத்தையும் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் ஏற்றுள்ளார். ஜூலை 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தமிழர்களின் வணிக பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்கும் நடக்கவுள்ளது. மொத்தத்தில் இந்த மாநாட்டிற்கான செலவு சுமார் ரூ.20 கோடியிலிருந்து ரூ.25 கோடி வரை ஆகலாம் என சொல்லப்படுகிறது