இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் IPL போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடந்த தொடர்களில் 3 முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்களில் 3 பேரை தற்போது நீக்கியுள்ளது. மற்ற வீரர்கள் அனைவரும் அணியில் அப்படியே நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் IPL போட்டிகளில் சென்னை அணியின் சார்பில் விளையாட மாட்டார்கள் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீக்கப்பட்ட வீரர்கள்
கடந்த சீசனில் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட், உள்நாட்டு வீரர்கள் கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகியோரே அணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். இதில் மார்க் வூட் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்றார். கனிஷ்க் சேத் மற்றும் ஹிதிஸ் சர்மா ஆகியோர் ஒரு போட்டியில் கூட விளையாட அனுமதிக்கப்படவில்லை. IPL விதிகளின்படி ஒரு அணி அதிகபட்சமாக 25 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக குறைந்துள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், 2019 ஆம் ஆண்டு IPL போட்டிக்கான வீரர்களின் ஏலம் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கும் இந்த ஏலத்தில் எந்த வீரரை சென்னை அணி எடுக்கப் போகிறது என ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு தொடரின் பாதியில் காயத்தினால் அவதியுற்ற கேதார் ஜாதவ் மற்றும் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். இந்நிலையில் கடந்த தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் சான்ட்னர் அணியில் தொடர்கிறாரா? என்பது பற்றிய விளக்கமும் அந்த நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

தற்போது அணியில் உள்ள வீரர்கள்
எம்.எஸ்.தோனி (கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, கரண் சர்மா, ஷேன் வாட்ஸன், ஷர்துல் தாக்கூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூப்பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப், என் ஜெகதீசன், மோனு சிங், துருப் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி.